ஆர்எஸ்எஸ்-பாஜகவினால் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி! மருத்துவ மேற்படிப்பில் உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்!

ஆர்எஸ்எஸ்-பாஜகவினால் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி! மருத்துவ மேற்படிப்பில் உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

சமீபத்தில் வெளிவந்த மருத்துவ மேற்படிப்பிற்காக மாணவர்கள் ஒதுக்கீட்டு பட்டியலில் இந்திய அரசின் வசம் மொத்தமுள்ள 9,550 இடங்களில், OBC பிரிவினருக்கு வெறும் 371 இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது 3.8 சதவீதம் மட்டுமே. இடஒதுக்கீடு உரிமையின் அடிப்படையில் OBC பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதாவது, OBC பிரிவினரின் உரிமையான 2578 இடங்களை ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், ஆளும் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு வெறும் 371 இடங்களை மட்டுமே ஒதுக்கி, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின நடுத்தர-ஏழை மாணவர்கள் மருத்துவ மேற்படிப்பை மேற்கொள்ள முடியாமல் தடுத்துள்ளது.

அதே வேளை, உயர்சாதி ஏழைகள் என்ற பெயரில் மாதம் ரூ.60,000 வருமானமுள்ள பார்ப்பனர்களுக்கு 653 (6.8%) இடங்களை பொருளாதார அடிப்படையில் (EWS) இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது போக 7125 (74.6%) இடங்கள் பொதுப்பிரிவு அடிப்படையில் பணம்படைத்த உயர்சாதியினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் (SC) பிரிவினருக்கு 1385 (14.5%) இடங்களும், பழங்குடி (ST) பிரிவினருக்கு 669 (7%) இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில், இடஒதுக்கீடு முறையை முழுமையாக பின்பற்றாமால், பொதுப்பிரிவு மூலம் உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 27% இடங்களில் 3.8% மட்டுமே ஒதுக்கீடு செய்து OBC பிரிவினருக்கு மாபெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து, சூத்திரர்கள் கல்வியறிவு பெற மறுக்கும் மநுதர்மத்தை அடிப்படையாக கொண்ட ஆர்ஆர்எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. அதன்படியே, அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் போராடி பெற்றுத்தந்த இடஒதுக்கீடு முறையை சீர்குலைக்கும் நோக்கில், உயர்படிப்பிற்கு NEET போன்ற நுழைவுத்தேர்வுகளையும், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையையும் அறிமுகப்படுத்தி ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது. அப்படியாகவே முதலில் மருத்துவ படிப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட NEET நுழைவுத்தேர்வு, தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பிற்கும், பல் மற்றும் சித்தா உள்ளிட்ட மாற்று மருத்துவத்திற்கு கட்டாயமாக்கியது. இதனாலே அனிதா உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட-பட்டியலின-பழங்குடி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு மறுக்கப்பட்டது.

NEET என்னும் நுழைத்தேர்வை திணித்த பின்பு , இந்தியா முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் மருத்துவ மேற்படிப்பிற்கான 50% இடங்களை ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு பறித்துக்கொள்கிறது. அதாவது மொத்தமுள்ள 19100 இடங்களில் 9550 இடங்களை மாநிலங்களிடமிருந்து பெறப்பட்டவையே. தமிழ் நாட்டை பொறுத்தவரை மொத்தமுள்ள 26 மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பிற்காக மொத்தம் 1758 இடங்கள் உள்ளன. இதில், 879 இடங்கள் இந்திய அரசின் மத்திய தொகுப்பிற்கு செல்கிறது. இவை தமிழ் நாட்டோடு இருந்திருக்குமானால், 69% இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், மாநில வளங்களை சுரண்டும் பாஜக அரசு 50% இடங்களை பறித்து இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தாமல், பிற்படுத்தப்பட்ட-பட்டியலின-பழங்குடி மக்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது.

ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் இந்த அப்பட்டமான கல்வி உரிமை பறிப்பை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ இடங்களை களவாடிசெல்லும், தமிழர்களின் கல்வி உரிமையை பறிக்கும், சமூகநீதிக்கு எதிராக செயல்படும் பாஜக அரசோடு கூட்டணி என்ற பெயரில் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசையும் கண்டிக்கின்றோம். இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் பாஜக அரசினை கண்டிக்க தமிழ்நாட்டிலுள்ள அரசியல் அமைப்புகள் முன்வர வேண்டும். உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட NEET தேர்வையும், பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடை இரத்து செய்வதோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒத்துகீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கல்வி என்பது மாநில உரிமை. அதனை முழுமையாக மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இடஒதுக்கீட்டை காப்பது எனபது சமூகநீதியை காப்பதற்கு ஒப்பாகும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply