மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்! ட்விட்டர் இணையதளத்தில் பரப்புரை செய்வோம் !!

மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறமாகக் கூடி தமிழீழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதனை தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வாக மாற்றும் வண்ணம் மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை ஒருங்கிணைத்து நடத்தி வந்திருக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் அனைத்து மக்களையும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால், நினைவேந்தல் நிகழ்விற்கு நாம் நேரடியாக ஒன்று கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் தனித்து இருப்பதன் காரணத்தினால் நம் நீதிக்கான குரலையோ, நம் மக்களுக்கான அஞ்சலி செலுத்துதலையோ இந்த ஆண்டு நாம் கைவிட இயலாது. நமது எண்ணங்களும், கண்ணீரும், உரிமை முழக்கங்களும் கூடுவதற்கு எந்தப் பேரரசும், எந்தப் பெருந்தொற்றும் தடை போட்டு விட முடியாது.

எத்தகைய சூழல் வந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்ற உரிமைக் குரலை இந்திய அரசுக்கும், உலக ஏகாதிபத்தியங்களுக்கும், இனவெறி இலங்கைக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழீழ இனப்படுகொலையை தமிழர்கள் மறக்கவில்லை என்பதனை பறைசாற்ற வரும் மே 17, 2020 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு நாம் ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டில் இருந்தபடியே, தனிமனித இடைவெளியினை கடைபிடித்து நினைவேந்தலை மேற்கொள்வதற்கான அழைப்பினை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக விடுக்கிறோம்.

ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டின் முன்பிருந்து மாலை 6 மணியளவில் இனப்படுகொலைக்கு நீதி கோரி சிறிய அளவிலான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்புவோம்.

மாலை 6:30 மணியளவில் வீட்டில் விளக்கேற்றி குடும்பத்துடன் சேர்ந்து நம் தமிழினப் போராளிகளுக்கும், மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழீழ மக்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் தங்களின் புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இச்செய்தியினை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ட்விட்டர் இணையதளத்தில் மே 17 அன்று காலை 10 மணி முதல் #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag பரப்புரையினை நிகழ்த்தி, தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் பரப்புரையை இந்தியா முழுதும் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையிலும் தாங்கள் பங்கெடுத்து வெற்றியடையச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply