குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும் – கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு அறிக்கை

- in பரப்புரை
  • மூன்றாம்கட்ட கொரோனா ஊரடங்கு
  • குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும்!*
  • மதுக்கடைகளை திறக்கக் கூடாது!*
  • கேபிள் டிவி கட்டணம், மின் கட்டணம், வீட்டு வாடகையை ரத்து செய்ய வேண்டும்!*
  • வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை அழைத்துவர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்!*

மத்திய மாநில அரசுகளுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வலியுறுத்தல்!

இதுதொடர்பாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது;

*குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும்!*

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இன்று மே.03ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மே 17 வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு கட்டமாக அமல்படுத்தப்பட்ட 40 நாள் ஊரடங்கு காரணமாக ஏழை-எளிய மக்கள் உள்ளிட பல கோடிக்கணக்கான மக்கள் பெரும் இன்னல்களையும், துயரங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமலும், பொருட்கள் வாங்க வருமானம் இல்லாமலும் மக்கள் கடும் அவதியுற்றனர். ஆகவே, அரசு அளித்த ரூ.1000 உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் உதவித்தொகையை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அரசு அதனை செயல்படுத்த அக்கறை காட்டவில்லை.

இந்நிலையில், மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உடனடியாக அரசு உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே மக்களை பசி-பட்டினியிலிருந்து காக்க முடியும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அக்கறை காட்டும் மத்திய மாநில அரசுகள் மக்களின் நிலை குறித்தும் அக்கறை காட்ட வேண்டும். ஆகவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

*மதுக்கடைகளை திறக்கக் கூடாது!*

கொரோனா பாதிப்பு பகுதிகளை மூன்று மண்டலங்களாக அடையாளப்படுத்தியுள்ள அரசு, பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் மதுபானக் கடை, பான் மசாலா கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பல அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் மதுபானக் கடையை திறக்க அவசியம் என்ன வந்தது. வேலையில்லாமல் வருமானம் இன்றி ஒவ்வொரு குடும்பங்களும் தவித்துவரும் சூழலில் மதுபானக்கடை திறப்பு என்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் நிலையை மேலும் மோசமாக பாதிக்கும்.

மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது. பூரண மதுவிலக்கை கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள அதிமுக அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுவிலக்கை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் திறக்காமல் இருந்த காரணத்தால், மதுவுக்கு அடிமையானவர்கள் கூட குடியை மறந்துள்ளனர். குடிப்பழக்கத்தை மறக்கும் பயிற்சியை பெற்றுள்ளனர். ஆகவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆகவே தமிழக அரசு மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

*கேபிள் டிவி கட்டணம், மின் கட்டணம், வீட்டு வாடகையை ரத்து செய்ய வேண்டும்!*

கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் வருமானம் இன்றி மக்கள் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். தினக்கூலிகளான அன்றாடங் காய்ச்சிகள் அடுத்தவேளை உணக்குக்கூட செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த சூழலில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக மின் பயன்பாட்டு அளவு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, மின் கட்டணம், கேபிள் டிவி கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

அதுபோல் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக கூட மக்களிடம் எவ்வித வருமானமும் இல்லாத நிலையில் அவர்களால் வீட்டு வாடகையை செலுத்துவது என்பது இயலாத காரியம். ஆகவே தமிழக அரசு வீட்டு வாடகையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

*வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை அழைத்துவர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்:*

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள பிற மாநிலத்தவர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசும் சிறப்புக் குழுவை அமைத்து பேருந்துகளை ஏற்பாடு செய்து சமூக இடைவெளியுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்டுக்கொண்டுவருவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆகவே, சிறப்பு ரயில்கள் மூலம் இலவசமாக சமூக இடைவெளியுடன் அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு

தொல்.திருமாவளவன்,
த.செ.கொளத்தூர் மணி,
பேராசிரியர் ஜவாஹிருல்லா,
தி.வேல்முருகன்,
தெஹ்லான் பாகவி,
கு.இராமகிருட்டிணன்
திருமுருகன் காந்தி,
கே.எம்.சரீப் ,
இனிகோ இருதயராஜ்,
வன்னி அரசு,
நெல்லை முபாரக்,
அப்துல் சமது,
பெரியார் சரவணன்,
சுப உதயகுமாரன்

Leave a Reply