தமிழகத்தில் சாதிய கொடுமைகளும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

- in கடலூர், சாதி

தமிழகத்தில் சாதிய கொடுமைகளும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – மே17 இயக்கம்

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதிய கொடுமைகளும், சாதியத்தின் பெயரைச்சொல்லி நாட்டிற்கு உழைத்த தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதிக்கிறார்கள்.கடந்த காலங்களில் இதே போல தந்தை பெரியார் அவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதும் நடந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்தால் அதில் சாதியை காரணம் காட்டி இணையர்களை பிரிப்பதும், கொலைசெய்வதும், தேர்தலில் வெற்றிபெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவரை அவரது நாற்காலியில் உட்கார விடாமல் கீழே உட்கார வைத்து வன்கொடுமை செய்வதும், அரசுப்பள்ளிகளில் இருக்கும் சத்துணவு கூடங்களில் இன்னார் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்று ஊர் கூடி அவரை மாற்ற வைப்பதுமான சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதனையெல்லாம் மேலும் மேலும் ஊக்குவிக்கும் விதமாகவே தமிழக அரசின் மௌனமும் இருக்கிறது. இப்படி சாதிய ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படையாக செய்யும் நபர்களை மிகக் கடுமையாக தண்டித்தால் மட்டுமே சமூகத்தில் இது போல் மீண்டும் நடக்காமல் இருக்கும். மேலும் சாதி குறித்தான விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் அரசிடமே இருக்கிறது. இதை எதையும் செய்யாமல் ஓட்டுக்காக வேடிக்கை பார்ப்பது மேலும் மேலும் தமிழ்ச் சமூகத்தை செங்குத்தாக பிளக்கவே செய்யும்.

ஆகவே அரசியல் மாச்சரியங்களை கடந்து சமூக நல்லிணக்கம் என்ற ஒற்றை குறிக்கோளை கொண்டு தமிழக அரசு சாதி ஏற்றத்தாழ்வுகளை செய்யும் நபர்களையும், நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் சிலையை சேதப்படுத்தும்/தூண்டிவிடும் நபர்களையும் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply