கொரோனா ஊரடங்கில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாக பறிக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது

கொரோனா ஊரடங்கில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாக பறிக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மோடி அரசே! துரோகம் செய்யாதே! உடனடியாகக் கைவிடு! – மே பதினேழு இயக்கம்

காவிரி நதி நீரின் மீதான தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை இந்திய ஒன்றிய அரசு பறித்துக் கொள்ளும் வகையில் ஒரு திருத்தம் அரசிதழில் ஏப்ரல் 24, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் என்பது தமிழர்களின் பாரம்பரிய இயற்கை வழி பண்பாட்டு உரிமையாகும். இந்த உரிமையினை மீட்பதற்கான நீண்ட காலமாய் தமிழினம் போராடி வருகிறது.

ஒவ்வொரு முறையும் போராடி போராடித் தான் தமிழினம் காவிரி நீரில் தன் உரிமையை பெற்றுக் கொண்டிருக்கிறது. காவிரி உரிமைக்காக தமிழர்கள் வீதிகளில் இறங்கி அரசினை கேள்வி கேட்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பார்கள் என்பதால் கொரோனா பேரிடர் காலத்தின் ஊரடங்கினைப் பயன்படுத்தி இந்த திருத்தத்தினை மோடியின் ஒன்றிய அரசு சூழ்ச்சியாக கொண்டு வந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தினை உச்சநீதிமன்றம் அமைக்க சொன்ன பிறகும் மோடி அரசு அமைக்காததால் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு போர்க்களமாக வீதியில் திரண்டு போராடியது. மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போது ”GoBackModi” என்ற முழக்கத்தினை உலகெங்கும் ஒலிக்கச் செய்தது. இத்தனை போராட்டத்திற்குப் பிறகும், ஒரு நீர்த்துப் போன ஆணையத்தினையே ஒன்றிய அரசு உருவாக்கியது.

தற்போது அந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினையும் (Cauvery Water Management Authority) ஒன்றிய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் (Ministry of Jalsakthi – A department of water resources, River Devolopement and Ganga Rejuvenation) மாற்றியுள்ளது. நதிகளின் மீதான மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் மிக மோசமான திருத்தமாக இது உள்ளது.

Govt of India (Allocation of Business) Rules, 1961-ல் பிரிவு 7ன் கீழ் 7A என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நதிகளை தூய்மைப்படுத்துவது, மேம்பாடு செய்வது மற்றும் மேலாண்மை என்ற பெயரில் நதிகளின் மீதான மாநிலங்களின் உரிமையை இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் எடுத்துக் கொள்கிறது. கங்கையை தூய்மையாக்கல் என்ற பெயரில் அதன் அதிகாரத்தைப் பெற்றதைப் போல் தற்போது காவிரி உள்ளிட்ட அனைத்து நதிகளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் இணைத்துக் கொண்டுள்ளது.

பிரிவு 33-ன் கீழ் 33E என்ற பகுதியினை சேர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தினை இணைத்துக் கொண்டிருக்கிறது.

மாநில உரிமைகளைப் பறித்து தனது ஒற்றை சர்வாதிகரத்தை நிறுவிக் கொள்வதோடல்லாமல், நதிகளை தனியார்மயப்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு விற்று தண்ணீரை காசாக்கும் சதியின் துவக்கமாகவும் இந்த நடவடிக்கை இருக்கிறது. இயற்கை என்பதே எளிய மக்களுக்கானது, அனைத்து உயிர்களுக்குமானது. அதனை ஒற்றை மத்திய அதிகாரத்தின் குடைக்கு கீழ் நுழைப்பது பன்னாட்டு ஏகபோகத்திற்காகவே.

மாநில அரசின் உரிமைகளை மீட்பதற்காக பேச வேண்டிய மாநில அரசோ எதையும் பேசாமல் மவுனம் காத்துதான் வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைகளை இந்திய ஒன்றிய அரசிடம் பறிகொடுத்து வேடிக்கை பார்த்து வருகிறது. வரலாற்று ரீதியாக மாநில உரிமையின் மீது தமிழகம் கொண்டிருந்த போர்க்குணத்தினை முற்றிலுமாக இழக்கச் செய்து விட்டு, தொடர்ச்சியாக ஒன்றிய அரசிடம் பணிந்து போகும் நடைமுறையினையே எடப்பாடி அரசு மேற்கொண்டு வருகிறது.

நீட், ஜி.எஸ்.டி வரிசையில் இப்போது காவிரி நதிநீர் உரிமையும் ஒன்றிய அரசினால் பறிக்கப்பட உள்ளது. ஜி.எஸ்.டி-யினால் வரிப்பணத்தினை இழந்து விட்டு கொரோனா பேரிடர் நேரத்தில் ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்பதைப் போல, காவிரி நீருக்கும் ஒவ்வொரு முறையும் கையேந்தி நிற்க வேண்டும்.

காவிரி நதி தமிழ்நாட்டின் உரிமை. தமிழர்களின் உரிமை என்று உரக்க முழங்குவோம்.
தமிழ்நாட்டிற்கு சரியான பங்கினை பிரித்தளிக்கும் முழுமையான அதிகாரம் கொண்ட சுதந்திர அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தினை ஒன்றிய நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இணைக்கும் திருத்தம் உடனடியாக அரசிதழில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லையேல் மோடியின் அரசு தமிழர்களின் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply