அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழைப்பதில்லை. நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழைக்கிறார்கள் – தோழர் திருமுருகன் காந்தி

#திருமுருகன் காந்தி

இன்றுவரை மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கருவிகளை வழங்காத அரசைதொடர்ந்து கேள்வி எழுப்புவதன் காரணம், நாளை நீங்களும் , உங்கள் பெற்றோரும் ஒருவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்றால், அங்கே உங்களைப் பாதுகாக்க மருத்துவர்கள் உயிரோடு இருக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகூட வழங்க வக்கற்று விளம்பரம் மட்டும் தேடும் அரசாங்கத்தை கொஞ்சி பாராட்டி, ஒத்துழைக்கிறோம் என்று சொல்லமல் இருக்க ஒரே காரணம், எம்மக்கள் மீதான பேரன்பு மட்டுமே. இதே போல தொடர் சோதனை செய்யுங்கள் என்கிறோம். அனைத்து நாடுகளும் இதைச் சொல்கின்றன. ஆனால் அக்கோரிக்கையை கொச்சைப்படுத்தி பொய் பிரச்சாரம் செய்தார்கள்.

கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்று மோடி அறிவித்த போது, ‘இத்திட்டம் ஏழை மக்களுக்கு எதிரானது, கருப்புப் பணத்தை ஒழிக்காது’ என்று மே17 இயக்கம் முதன்முதலாக அம்பலப்படுத்தியது. அப்போதும் கூட அனைவரும் மோடிக்கு ஜால்ரா அடித்து ”இத்திட்டத்தை வரவேற்பதாகவும், இந்நேரத்தில் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நாட்டை பாதுகாக்கவேண்டுமென்றார்கள். கருப்புப்பணத்தை ஒழிக்கும் முயற்சியை கொச்சைப்படுத்தாதீர்கள், இதில் அரசியலை நுழைக்காதீர்கள்” என அட்வைஸ் செய்தார்கள், ’உங்கள் மீதான மரியாதை குறைந்து போய்விட்டது’ என்றும் கூட சில பேசினார்கள். தூற்றினார்கள், பொய்ப்பிரச்சாரம் கூட செய்தார்கள். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அத்திட்டம் ஏமாற்றுத் திட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டார்கள். இன்றும் அதன் கொடுமையை அனுபவிக்கிறோம்.

இதே போன்று ரேசன்கடைகளை முடக்க நடக்கும் ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினோம். ரேசன் கடைகள் குறைக்கப்பட்டன, பொருட்கள் குறைக்கப்பட்டன, பொருட்களுக்கு பதிலாக பணம் தருகிறோம் என்றார்கள், பயனீட்டாளர்கள் குறைக்கப்பட்டார்கள். இத்திட்டத்தை முடக்கினாலோ, பணமதிப்பாக பொருட்களை மாற்றினாலோ பசியினால் மக்கள் ஒடுங்குவார்கள் என்றோம். ஆனால் ரேசன்கட்டமைப்பை சீரழித்தார்கள். ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பசியால் இறந்தார்கள். இதைச் சொன்ன போதும், ‘ரேசன்கடைகள் மூடவில்லை, முடக்கவில்லை, பொருட்கள் குறைக்கவில்லை, பொய் சொல்கிரீர்கள்’ என்றார்கள்.

ஆதார் அட்டை என்பதும் மோசடித்திட்டம் என்றோம். அதனால் எந்தப் பயனையும் தரப்போவதில்லை மாறாக ’மக்கள் விவரங்களை’ அரசு சேகரித்து தனியாரிடம் கொடுத்து மார்க்கெட்டிங்கிற்கானதாக மாற்றுவதையும் அம்பலப்படுத்தியபோதும், இதே போன்று கேள்விகள் எழுந்தன. இந்த சமயங்களில் எங்கள் மீது வந்த கேள்விகள்,’ ஏன் நல்ல திட்டங்களை கேள்வி எழுப்புகிறீர்கள், ஏன் உங்களுக்கு மோடி மீது கோபம், ஏன் அனைவருக்கும் அடையாள அட்டை தேவையில்லையா, அமெரிக்காவில் இருக்கிறதே” என்றார்கள். இன்று அந்த ஆதாரினால் என்ன பயனைக் கண்டுவிட்டோம்?. நெருக்கடியான நிலையில் அனைத்து விவரங்களையும் அரசு வைத்திருந்தும் கூட ஏன் நமக்கான உதவிகள் சேர்வதில்லை?.

இதே கேள்விகள் ’சென்னை வெள்ளம், கஜா புயல், ஒக்கிப்புயல்’ என அனைத்து காலங்களிலும் எழுந்தது.
“உங்களால் எதுவும் செய்யமுடிந்தால் செய்யுங்கள், நெருக்கடியில் அரசை குறை சொல்லாதீர்கள், அரசியல் செய்யாதீர்கள், மக்கள் பாதிக்கப்படுவதை கவனியுங்கள்” என்றெல்லாம் பேசினார்கள். இதே போன்ற கேள்விகள் இப்போதும் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன.

மேலே சொன்ன நெருக்கடிகளில் அரசிடம் விரும்பியோ, விரும்பாமலோ அனைவரும் ஒத்துழைத்தோம். அதனால் கிடைத்த முன்னேற்றம் என்ன? விளைவுகள் என்ன? பயனடைந்தவர்கள் யார்? என்ன பலன் கிடைத்தது?.. பட்டியல் இருக்குமா?.. கருப்புப் பணம் ஒழிந்ததா? தீவிரவாதிகள் ஒழிந்தார்களா? ரேசன்கடைக்கு பதிலாக சிறந்த முறையில் உணவு ஏழைகளுக்கு கிடைத்ததா?, ஆதாரினால் அடையாளம் பார்க்கப்பட்டு மானியங்கள் வீடு வந்ததா? கஜாப்புயலினால் இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் மீட்கப்பட்டதா? நட்ட ஈடு போதுமானதாககொடுக்கப்ப்பட்டதா? ஒக்கியில் இறந்தவர்கள் குடும்பங்கள் நிலை என்னவானது?… இவை எவைப்பற்றியும் கவலைப்படாமல் ஏறிமிதித்துச் சென்றுவிட்டோம்.

யார் என்ன ஆனார்கள் என்பது தெரியாது. என்ன கிடைத்தது என்பது தெரியாது. ஆனால் ‘ ஏன் சார், இப்ப வந்து அரசியல் பேசரீங்க’ எனும் கேள்வி மட்டும் சாகவில்லை. இந்த அழிவுகள் நடந்த பின்பு மக்களை சந்தித்தவர்களுக்கு தெரியும், ’அழிந்தவர்களுக்கு உதவி ஏதும் சென்று சேரவில்லை, மாற்றம் நடக்கவில்லை’ என்பது. நெருக்கடியில் பணியாற்றத்தான் அரசு கட்டமைப்புகள் இருக்கின்றன. அக்கட்டமைப்புகளை அமைதி காலத்தில் சிதைத்த அரசு, நெருக்கடி காலங்களில் தன் இயலாமையை மறைக்க இது போன்ற கேள்விகளை கேட்க வைக்கிறது. இந்தக் கேள்விகளை உருவாக்குபவர்கள், பாஜகவின் போலி இணைய கும்பல்கள். ஒவ்வொரு பொய் செய்தி பதிவிற்கும் பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்யும் கூலி அடியாட்கள். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தினால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் போலி கணக்கு வைத்திருக்கும் முகமற்ற பொறுக்கிகள். இவர்களே இன்று வாட்ஸப், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்திலும் நிரம்பியிருப்பவர்கள். ஒரே நபர் ஏறத்தாழ 20-30 போலி கணக்குக்ளை வைத்திருக்கும் வகையிலான அடியாள் கூட்டங்கள்

செயல்படாடத அரசைக் கேள்வி கேட்கக்கூடாது என நினைக்கிறது பாஜக. கேள்வி கேட்பவர்கள் மீது தனது அடியாட்களை ஏவுகிறது.அரசிற்கு சங்கடம் வராமல் தனது பெயரைக் காப்பாற்றிக்கொண்டு மக்களை கைகழுவ நினைக்கிறது. இதை அம்பலப்படுத்துபவர்களின் நற்பெயரை கெடுக்கும் வகையில் பிரச்சாரம் செய்கிறது, இயலவில்லையெனில் சிறையிலிடுகிறது.

ஆனால் அரசியல் செயல்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழைப்பதில்லை, நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழைக்கிறார்கள். இச்சமூகம் போற்றலாம், தூற்றலாம், ஆனால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் அதிகாரத்தை நோக்கி சங்கடமான கேள்விகளை எழுப்பி ’ஏழைகளுக்கு பணி செய்ய வைப்பதுதான்’ அவர்களின் கடமையென வந்திருக்கிறார்கள். இதைச் செய்வதால் அவர்கள் பதவி சுகத்தை அடையப் போகிறவர்களுமில்லை. நற்பெயர் எடுக்கவேண்டுமென்பதற்காக மே பதினேழு இயக்கம் அரசை மயிலிறகால் தடவிவிடாது. அரசு செயல்படும் வரை, மக்கள் சிந்திக்கும் வரை கேள்விகள் தொடரும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply