புதுவை பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா? கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது! அவர்களின் கோரிக்கையை நிறைவேற்று!

புதுவை பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா?
கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது!
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்று!
– மே பதினேழு இயக்கம்

புதுச்சேரி பல்கலைக்கழத்தில் உயர்கல்வி கட்டணங்கள் 200 லிருந்து 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. மற்ற மத்திய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MA, M.Com, M.Sc, LLM போன்ற படிப்புகளுக்கு மிக அதிக அளவில் கட்டண உயர்வு நடந்திருக்கிறது. குறிப்பாக Computer science மாணவர்களுக்கான மொத்த கட்ணம் 44,000 ரூபாயிலிருந்து 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு பல்கலைக்கழகம் என சொல்லிக் கொண்டு சுயநிதி தனியார் பல்கலைக்கழகத்தைப் போல் கட்டண உயர்வை செய்து, ஏழை மாணவர்களின் கல்விக் கனவை காசாக்கும் இக்கட்டண உயர்வை எதிர்த்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.

பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்தும் கல்விக்கட்டணத்தை குறைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தயாராக இல்லை.

மேலும் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இலவச பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரியின் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்கீடும் நீக்கப்பட்டுள்ளது.

கல்விக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், இலவச பேருந்தை ரத்து செய்யக் கூடாது, உள்ளூர் மாணவர்களுக்கான ஒதுக்கீடு போன்ற மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே.

கல்வியை மக்களுக்கு அளிப்பது அரசின் கடமை. அதிலிருந்து பணம் சம்பாதிக்க அரசு முயலக் கூடாது. ஏற்கனவே புதுதில்லியின் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

எனவே மாணவர்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, கல்வி அனைவருக்குமானது என்பதை நிறுவ வேண்டும் என்று புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும் நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இத்தகைய கட்டண உயர்வு நடவடிக்கையை மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கல்வியை வியாபாரமாக்கி தனியார்மயமாக்கும் முயற்சியை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply