தமிழக அரசே! சேலம் கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணப்பெண் இளமதியைக் காப்பாற்று! 

தமிழக அரசே! சேலம் கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணப்பெண் இளமதியைக் காப்பாற்று! 
மணமக்களை கடத்திய சாதிவெறி கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடை – மே பதினேழு இயக்கம்

ஈரோடு மாவட்டம் குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி என்ற இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணும், கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன் என்ற பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்துள்ளனர். சாதியின் காரணமாக அவர்கள் மிரட்டப்பட்டதால், அவர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களை அணுகி திருமணம் செய்து வைக்கக் கோரி அடைக்கலம் கேட்டுள்ளனர்.

மணமக்கள் இருவருக்கும் நேற்று 09-3-2020 அன்று சுயமரியாதை திருமணம் நடந்துள்ளது. சாதி வெறி கும்பலால் தம்பதியரின் உயிருக்கு ஆபத்து இருந்ததால் அவர்களை திவிக தோழர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருந்துள்ளனர்.

இரவு 10 மணியளவில் சாதி வெறி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் திவிக தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் அவர்களின் வீட்டில் புகுந்து தாக்கி அவரை கடத்திச் சென்றுள்ளனர். அதே போல் மணமக்கள் இருவரையும் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

மூவரும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்ததால் திவிக தோழர்கள் கொளத்தூர் காவல் நிலையத்தில் குவிந்து 12 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இப்போராட்டத்தின் விளைவாக திவிக தோழர் காவை ஈசுவரனும், மணமகன் செல்வனும் மீட்கப்பட்டுள்ளனர். மணமகள் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை. கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதி வெறி கும்பல் இளமதியை ஆணவக் கொலை செய்யக் கூடும் என்ற அச்சம் இருக்கிறது.
உடனடியாக இளமதியை காவல்துறை மீட்க வேண்டும். இளமதியின் உயிருக்கு இனி தமிழக அரசே பொறுப்பு! சாதி மறுப்பு திருமணம் செய்வோரின் உயிருக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்திட வேண்டும்.

சாதி மறுப்பு திருமணம் செய்வோரை கொலைவெறியுடன் மிரட்டும் சாதி வெறி கும்பல் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவர்கள் மீது பிணையில் வெளிவராத வகையில் வன்கொடுமை மற்றும் கொலைமுயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. உடனடியாக ஆணவப் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.

மணமகள் இளமதி மீட்கப்பட்டு அவரின் இணையரான செல்வத்துடன் பாதுகாப்பாக சேர்க்கப்பட வேண்டியது காவல்துறையின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம்.

திராவிடர் விடுதலை கழகத் தோழர்களின் அறம் சார்ந்த போராட்டத்திற்கும், சாதி மறுப்பு திருமணம் புரிந்த செல்வன் – இளமதி இணையோருக்கும் மே பதினேழு இயக்கமும் உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
– 9884072010

Leave a Reply