மத்திய, மாநில அரசுகளே! இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக!

மத்திய, மாநில அரசுகளே! இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக!

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு இதுவரை லாரிகளில் தான் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தொழிற் நிறுவனங்களுக்கு அதிக செலவாகிறது என்பதற்காக தமிழகம் முழுவதும் எரிவாயு குழாய் பதித்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழிற் நிறுவனங்களுக்கு நேரடியாக எரிவாயுவை கொடுக்கும் திட்டத்தை மத்திய மோடி அரசு 2015ஆம் ஆண்டில் அறிவித்தது. அதன்படி சென்னை எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களூர்- புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி-இராமநாதபுரம் (ETBPNMTPL) ஆகிய ஊர்களில் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்க ஒ.என்.ஜி.சியும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசனும் முனைந்தது.

இந்த நிலையில் இந்த திட்டத்தின் ஒரு பகுதியான இராமநாதபுரம் ஒன்.ஜி.சி நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு (142கிலோமீட்டர்) எரிவாயுவை கொண்டுசெல்லும் திட்டத்திற்கு 2017ஆம்ஆண்டு மத்திய மோடி அரசு அனுமதியளித்தது. அதன்படி இந்த திட்டம் தொடங்குவதற்கான பூர்வாங்க வேலைகளை தொடங்கினார்கள்.(பார்க்க படம்:01) இடம் தேர்வு, குழாய் பதிப்பதற்கான டெண்டர் அரசின் ஏனையதுறைகளின் அனுமதி என்று ஒருவழியாக 2018அக்டோபரில் தமிழக சுற்றுப்புறச்சூழல் அனுமதி தவிர்த்து ஏனைய அனைத்து அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக அரசு 16.02.2018அன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் கிராமத்தில் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் என்ற ஒன்றை இந்த திட்டம் தொடர்பாக ஏற்பாடு செய்தது, அதில் தூத்துக்குடியில் இயங்கும் தொழிற் நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக எங்களது விவசாய நிலத்தை தரமுடியாது என்று ஒருமித்த குரலில் விவசாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால். மக்கள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதிவிட்டது. https://www.tnpcb.gov.in/pdf_2018/Minutes_iocl27318.pdf
இதனால் தான் சுற்றுப்புறச்சூழல் அனுமதி மட்டும் இந்த திட்டத்திற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாதென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் செல்வம் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மே15’2019 அன்று அனைத்து நடைமுறைகளையும் நிறைவேற்றமால் இந்ததிட்டத்தை தொடங்கக்கூடாதென்று இடைக்கால தடைபோட்டது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்ததேவையில்லை. அரசின் சுற்றுப்புறச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சட்டத்தை மாற்றியதன் அடிப்படையில் இப்போது நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட திட்டத்தை எந்தவித சுற்றுப்புறச்சூழல் அனுமதியும் இல்லாமல், மக்களின் எதிர்ப்பினையும் மீறி குழாய் பதிக்கும் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிருக்கிறது.

குறிப்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலத்தில் குழாய் பதிக்கவந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் கம்பெனிகாரர்கள் உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்பினால் திரும்ப போயிருக்கிறார்கள். (பார்க்க படம் 02.). ஏற்கனவே ஸ்டெர்லைட் போன்ற நச்சுஆலையால் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில் இப்போது உணவை தரும் விவசாய நிலத்தை பிடுங்கி அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்க மத்திய மாநில அரசுகள் நினைக்கிறதா?

ஆகவே தூத்துக்குடிமக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் இந்த எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்தவேண்டுமென்று மே 17இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply