தாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது

தாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது

நான்கு நாட்களுக்கு முன் பிப்ரவரி 07’2020 அன்று 2012இல் உத்ராகண்ட் மாநில அரசு, தனது மாநில பொதுப்பணித்துறையின் கீழ் உதவி பொறியாளர்களை தேர்ந்தெடுத்ததில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையென்று தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு இந்தியாவில் கடந்த காலங்களில் பலர் போராடி பெற்ற சமூகநீதியை ஆழக்குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையாக இருக்கிறது.

அதாவது எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களுக்கு பணி உயர்வில் இடஒதுக்கீடு அமல்படுத்தியே ஆகவேண்டுமென்று எந்த கட்டாயமுமில்லை என்றும்,மாநில அரசின் விருப்பம் தான் அது என்றும் அரசியலமைப்புக்கு எதிரான ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் இரண்டு வழக்குகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

1.வினோத் பிரகாஷ் நாட்டியால் எதிர் உத்ராகண்ட் அரசு 1994.
2.முகுந்த் குமார் ஸ்ரீவர்ஸ்டா எதிர் உத்திரபிரதேச அரசு 1991.

இந்த இரண்டு வழக்குகளும் 1995க்கு முன் நடந்தது. ஏன் 1995ஐ குறிப்பிடுகின்றோமென்றால், 1995இல் தான் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் 77இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் 2006 மற்றும் 2016ஆகிய வருடங்களில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் அரசமைப்பு சட்டதிருத்தம் 77 மற்றும் அரசியலமைப்பின் உறுப்பு 16(4) மற்றும் 16(4a) இவையையும் உறுதி செய்து திர்ப்பளித்திருக்கிறது.

அப்படியிருக்கும் போது இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சம்பந்தேமேயில்லாத அதுவும் அரசியலமைப்பு திருத்தத்தை கணக்கில் கொள்ளாமல் பணிஉயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.

ஆகவே இந்த சமூக அநீதியான எதிர்ப்புக்கு எதிராக மத்திய பிஜேபி அரசு சரியான ஆவணங்களோடு உடனடியாக மேல்முறையீடு செய்து எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்க்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். ஒருவேளை 2015இல் பிகார் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பிஜேபி வெற்றி பெறுவதற்காக எப்படி இடஒதுக்கீட்டை ஆதரித்து பேசி, வெற்றி பெற்றவுடன் இந்தநொடிவரை அதற்காக ஒரு நகர்வையும் எடுக்காமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்தாரோ, அதேபோல ஒன்றை மத்திய பிஜேபி அரசு செய்யாமல் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மே 17இயக்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மே17 இயக்கம்
984072010

Leave a Reply