குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு(CAB) எதிராக அமைதியாக போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி வரும் பாஜக அரசினை எதிர்த்திடுவோம்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு(CAB) எதிராக அமைதியாக போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியும் வருகிற பாஜக அரசினை எதிர்த்திடுவோம். ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே பதினேழு இயக்கம்

இசுலாமியர் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து, இசுலாமியர்களை இந்தியாவின் இரண்டாம் தர குடிமக்களாக சித்தரிக்க முயற்சிக்கும் பாசிச குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து இந்தியா முழுதும் ஜனநாயக சக்திகள் போராடி வருகிறார்கள்.

புதுதில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயகப்பூர்வமாக போராடி வருகிறார்கள். நேற்று (15-12-2019) மாலை துவங்கி பாஜக அரசு காவல்துறையின் மூலமாக அந்த மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

காவல்துறையினர் அத்துமீறி கல்லூரி வளாகத்தில் நுழைந்து மணவர்கள் மீது தடியடியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கியுள்ளனர். கல்லூரி நூலகத்திற்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, மாணவர்களை சராமாரியாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தி உள்ளனர். கழிவறைகளுக்குள்ளும் புகுந்து அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் கல்லூரிக்குள் இருந்த மாணவர்களை குற்றவாளிகளைப் போல இரண்டு கைகளையும் மேல் நோக்கி தூக்க சொல்லி (Hands up position) வரிசையாக வரவைத்து கைது செய்திருக்கிறார்கள். போர் நடக்கும் பகுதிகளில் நிகழ்த்தும் அராஜகத்தினை பாஜகவின் காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் நிகழ்த்தியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவர்களைத் தாக்கும் அதிகாரம் காவல்துறைக்கு எங்கிருந்து வந்தது?

மாணவர்களின் போராட்டம் வன்முறையில் முடிந்ததாலேயே காவல்துறையினர் தாக்கியதாக வழக்கமான பொய் கதையினையே பாஜக அரசு பேசி வருகிறது. நாடு முழுதும் பல்வேறு கலவரங்களையும், கொலைகளையும் செய்யும் காவி பயங்கரவாதிகளை பாதுகாக்கும் பாஜக அரசு, மாணவர்களைப் பார்த்து வன்முறையாளர்கள் என்கிறது.

மாணவர்கள் தாங்கள் அமைதியாகவே போராடியதாகவும், காவல்துறையினரே வன்முறையை செய்ததாகவும் பல்கலைக்கழக நிர்வாகமும், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரே பேருந்துக்கு தீவைக்கும் காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்கலைக் கழக வளாகத்தில் பாஜக அரசின் காவல்துறை நடத்திய அராஜகம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. கல்லூரியிலிருந்து வலும் தகவல்களை கேட்பதற்கே அச்சமாக இருக்கிறது.

மிகப்பெரும் மனித உரிமை மீறலில் பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. மக்கள் விரோத பாசிச பாஜக அரசின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதலை எதிர்த்து குரலெழுப்ப வேண்டும். மாணவர்களுக்கு துணை நிற்போம். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவினை எதிர்த்திடுவோம்!

– மே பதினேழு இயக்கம்
+91-9884072010

Leave a Reply