மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் 16/12/2019 அன்று நடைபெற்றது.

திருமுருகன் காந்தி மீது 40-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. அவர் கலந்துகொண்டு பேசிய அனைத்து கூட்டங்களுக்கும், அனுமதி பெற்று நடத்திய ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திற்கும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. தற்போது அந்த வழக்குகளை எல்லாம் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியிருக்கிறது. அரசியல் ரீதியாக ஜனநாயகப் போராட்டங்களை நடத்தியதற்காக ஒருவர் மீது சிபிசிஐடி விசாரணை என்பது மோசமான அணுகுமுறையாகும்.

மக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் திருமுருகன் காந்தியையும், அவர் சார்ந்திருக்கும் மே பதினேழு இயக்கத்தினையும் முடக்குவதற்கான வேலையினை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரும் அடக்குமுறையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. போராடும் அனைவரின் மீதும் இப்படிப்பட்ட பொய் வழக்குகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

திருமுருகன் காந்தி தனிமனிதரல்ல. அவரோடு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளாகவும், இயக்கங்களாகவும் இருக்கிற நாங்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதை இந்த அரசுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த கூட்டத்தினை நடத்துகிறோம்.

திருமுருகன் காந்தி மீதான அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜனநாயக ரீதியான எதிர்ப்பினை பதிவு செய்யும் போராட்டத்தினை நடத்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானங்கள்:

• மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏவப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

• திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

• அவர் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர், ஆளுநர், DGP, உள்துறை செயலர், உள்ளிட்டோரை முதல்கட்டமாக அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திப்பது என முடிவு செய்திருக்கிறோம்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள்:

திரு நல்லக்கண்ணு, மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திரு கலி பூங்குன்றன், துணைத்தலைவர், திராவிடர் கழகம்
திரு முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திரு வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி
திரு ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
திரு தெகலான் பாகவி, தேசிய துணைத் தலைவர், SDPI கட்சி
திரு ஆறுமுக நயினார், மாநில செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திரு மல்லை சத்யா, துணைப் பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
திரு நெல்லை முபாரக், மாநில தலைவர், SDPI கட்சி
திரு கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலை கழகம்
திரு கோவை ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திரு ஷமீம் அகமது, மாநில துணைச் செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி
திரு பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி
திரு கே.எம்.செரீப், தலைவர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
திரு குடந்தை அரசன், தலைவர், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி
திரு கோவை ரவிக்குமார், பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை
திரு பேரறிவாளன், பொதுச்செயலாளர், தமிழ்ப் புலிகள் கட்சி
திரு ஆதித் தமிழன், நிதி செயலாளர், ஆதித் தமிழர் கட்சி
திரு செல்வ முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர், திராவிட தமிழர் கட்சி
திரு தகடூர் சம்பத், ஒருங்கிணைப்பாளர், திராவிட ஒன்றிய சமத்துவக் கழகம்

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, லெனாகுமார், பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் முழு காணொளி

Leave a Reply