‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ சார்பில் கோவையில் நடைபெற்ற SBI முற்றுகைப் போராட்டம்

SBI எழுத்தர் பணிக்கான தேர்வுகளில் OBC மற்றும் SC/ST இளைஞர்களின் வாய்ப்பைப் பறித்து, பொருளாதாரத்தில் பின்தங்கியதாக சொல்லி, ஆண்டுக்கு 8 லட்சம் வரை சம்பாதிக்கும் உயர் சாதிகளுக்கு தாரைவார்க்கும் சமூக அநீதியைக் கண்டித்து கோவையில் ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ சார்பில் பல தோழமை அமைப்புகளை இணைத்து SBI முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றுது.

இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர். போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தினார்.

OBC, SC/ST இளைஞர்களுக்கு 61.5 மதிப்பெண்ணும், மாற்றுத் திறனாளிகளுக்கு 65.75 மதிப்பெண்ணும், உயர்சாதிக்கு வெறும் 28.5 மதிப்பெண்ணும் Cut-off ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட பெரிய சமூக அநீதி வேறெதாவது இருக்க முடியுமா? அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் போராடி பெற்ற இட ஒதுக்கீடு உரிமையை காலில் போட்டு மிதிக்கும் செயல் அல்லவா இது?

உயர்சாதியினருக்கான 10% சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அவசர அவசரமாக 10% சமூக அநீதியை மத்திய அரசுப் பணிகளில் நிரப்புவது எதனால்? என்ற கேள்வியை எழுப்பி இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. 10% இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் முடியும் வரை அந்த ஒதுக்கீடு முறையை பயன்படுத்தி பணியிடங்களை நிரப்பக் கூடாது என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றுது.

தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply