முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு எனும் அநீதியை ஆதரிக்கும் கட்சிகளுக்கு சமூக நீதியின் மீது அக்கறை இருக்கிறதா?

முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு எனும் அநீதியை ஆதரிக்கும் கட்சிகளுக்கு சமூக நீதியின் மீது அக்கறை இருக்கிறதா? – மே பதினேழு இயக்கம்

பாஜக அரசு கொண்டுவந்த முன்னேறிய உயர் வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு மீதான தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று ஜூலை 8 சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 21 கட்சிகள் பங்கேற்றன. பெரும்பாலான கட்சிகள் இந்த 10 % இடஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது என்று எதிர்ப்பை தெரிவித்த நிலையில் 5 கட்சிகள் மட்டும் அந்த இட ஒதுக்கீட்டை ஆதரித்திருக்கின்றன.

பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமாகா, புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் 10% இடஒதுக்கீட்டை ஆதரித்திருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதே அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை அழிக்கும் சூழ்ச்சியே. இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்றுதான் அண்ணல் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் போராடினர்.

சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்ட நாட்டில் சாதியின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும். இதற்காகத் தான் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கிய மக்களுக்கு (Socially and Educationally Backward Classes) இடஒதுக்கீடு வழங்கலாம் என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு எழுதப்பட்டது. ஆனால் இதில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய (Economically Backward) என்ற பிரிவினை பாஜக அரசு புதிதாக சேர்த்திருக்கிறது.

இதனை சேர்த்ததோடு பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அல்லாத முன்னேறிய சமூகத்தினருக்கு மட்டும் 10 % இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் என்றும் சொன்னது பாஜக அரசு. இது மிகப் பெரிய அநீதி இல்லையா? சமூக நீதியின் முன்னுதரமாக உள்ள தமிழ்நாட்டில் இருந்து கொண்டு 5 கட்சிகள் சமூக அநீதியை ஆதரிப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லை என்பதைத் தான் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலிருந்து நாம் பார்க்க முடியும். ஆனால் உழைக்கும் மக்களின் பக்கம் நிற்பதாக சொல்லிக் கொள்ளக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு எப்படி இத்தனை மோசமானதாக இருக்க முடியும். இக்கூட்டத்தில் இந்த 10% ஒதுக்கீட்டை ஆதரிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த விளக்கங்கள் எவையுமே ஏற்புடையதாக இல்லை. பார்ப்பனியத்தையும், சாதியத்தையும், இட ஒதுக்கீட்டையும் முறையான ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் சிபிஎம் கடக்குமானால் சிபிஎம்-க்கும், காங்கிரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதையும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களோ, முற்றிலுமாக பாஜகவின் அரசியல் நிலைப்பாடுகளையே தன்னுடைய நிலைப்பாடுகளாக சமீப காலங்களில் பேசி வருகிறார். தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே.வாசனும் பாஜகவின் நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறார்.

பாஜகவின் அரசியலை அம்பலப்படுத்தி வீழ்த்திய வேலையினை தமிழ்நாடு மட்டுமே செய்தது. பார்ப்பனியத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட வரலாறும் தமிழ்நாட்டிற்கே இருக்கிறது. இதே மாதிரியான நிலைப்பாட்டை இந்த கட்சிகள் தொடர்வார்களேயானால் பாஜகவிற்கு கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட நிலையே மற்ற கட்சிகளுக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமூக அநீதியின் பக்கம் நிற்பவர்கள் எப்படி உழைக்கும் மக்களின் அரசியலை முன்னெடுக்க முடியும்? அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் வேலைகளில் முன்னேறிய சாதிகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட இல்லாத நிலையில் உண்மையான பொருளாதார பின்னடைவு என்பது, சாதி ரீதியாக பின் தங்கிய ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடமே இருக்கிறது. இதையே பல்வேறு புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களில் 50% வரை ஒடுக்கப்பட்ட மக்களே வருகின்றனர் எனும் புள்ளி விவரத்தைப் புறந்தள்ளி, சில முன்னேறிய சாதிகள் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்கிற பிம்பத்தை பார்ப்பனிய பிரச்சார அமைப்புகள் வலிமையாக செய்ததையே, இக்கட்சிகளும் உயர்த்திப் பிடிக்கின்றன. இந்திய அளவிலான கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களில், முன்னேறிய உயர் சாதிகள் அரசு வேலை, உயர்கல்வி வாய்ப்புகளில் தமது மக்கள் தொகை விகிதத்தை விட மிக அதிக அளவில் ஆக்கிரமித்திருப்பதை அம்பலப்படுத்திய பின்னரும் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென தமிழ்நாட்டில் முன்வைப்பது தமிழக மக்களுக்கு செய்யும் அநீதியாகும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதை அனைவரும் இணைந்து எதிர்த்திட வேண்டும். இதனை ஆதரிக்கும் கட்சிகளின் நிலைப்பாட்டை சமூக நீதிக்கு எதிரானதாகவே பார்க்க முடியும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply