விளாத்திகுளம் சோலைராஜா – ஜோதி ஆணவப் படுகொலை மனிதத்தன்மையற்ற செயல். தமிழக அரசே! சாதி ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் இயற்றுவதை இனியும் தாமதிக்காதே!

விளாத்திகுளம் சோலைராஜா – ஜோதி ஆணவப் படுகொலை மனிதத்தன்மையற்ற செயல். தமிழக அரசே! சாதி ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் இயற்றுவதை இனியும் தாமதிக்காதே! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த சோலைராஜா-ஜோதி வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்துள்ளனர். பெண் வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையே அவர்கள் காவல்துறையினரிடம் தஞ்சமடைந்து, பிரச்சினைகள் முடித்து வைத்து அனுப்பி வைக்கப்பட்ட பிறகு சில மாதங்கள் கழித்து பெண்வீட்டைச் சேர்ந்தவர்கள் சோலைராஜா-ஜோதி இருவரையும் வீடு புகுந்து அரிவாளால் சராமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள்.

இரண்டு மாத கர்ப்பிணிப் பெண்ணான ஜோதியை பெண்ணின் தகப்பனே மிருகத்தனமாக கொலை செய்கிறான் என்றால் இந்த மனநிலை எங்கிருந்து வருகிறது?

சோலைராஜா-ஜோதி இருவருமே பட்டியல் பிரிவினைச் சேர்ந்த இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் தான். சாதி ஒழிப்புக்காக களத்தில் நிற்க வேண்டிய ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மத்தியிலேயே சுய சாதிப் பற்றும், வெறியும் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய பெருமையும், ஆதிக்கமும் பேசக் கூடிய சமூகங்களாக மாற்றும் பணியில் சாதிய அமைப்புகளும், இந்துத்துவ கும்பலும் சமீப காலங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன.

சாதிய இந்து ஆதிக்க மனநிலையை ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் புகுத்தி அவர்களை துண்டாடும் வேலை நடக்கிறது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, இட ஒதுக்கீட்டு உரிமை பறிப்பு இவற்றையெல்லாம் எதிர்த்து ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பதற்காகவே சாதியப் பற்று அவர்களுக்குள் திணிக்கப்படுகிறது.

இத்தகைய அமைப்புகளின் சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆணவப் படுகொலைகள் எந்த மட்டத்திலும் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. சாதிய ஆணவப்படுகொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் அவமானம். தொடர்ச்சியாக நிகழ்கிற ஒன்றாக ஆணவப்படுகொலை தமிழகத்தில் மாறியிருக்கிறது. ஆணவப்படுகொலையை செய்யத் துணிவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். முற்றிலுமாக சமூகப் புறக்கணிப்புக்கு அவர்களை உள்ளாக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். சாதிய ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான தனிச்சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள் நடைபெறவில்லையென தமிழக அரசே ஏமாற்றாதே!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply