மது ஒழிப்புக்காக தொடர்ச்சியாக போராடி வரும் நந்தினி மற்றும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது

மது ஒழிப்புக்காக தொடர்ச்சியாக போராடி வரும் நந்தினி மற்றும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது – மே பதினேழு இயக்கம்

சட்டக் கல்லூரி மாணவியாக இருந்தது தொடங்கி டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நந்தினியும் அவரது தந்தை ஆனந்தன் அவர்களும் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.

2014ம் ஆண்டு திருப்பத்தூரில் அவர்கள் இருவரும் மது ஒழிப்பிற்காக நடத்திய போராட்டத்தில் அவர்கள் மீது வழக்குபதியப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மீதான நீதிமன்ற விசாரணையின் போது, டாஸ்மாக் என்ற பெயரில் விற்கப்படுவது போதைப் பொருளா, உணவுப் பொருளா? போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா என்று சட்டப்படியான விதியைக் கூறி வாதாடியதற்காக நந்தினி மற்றும் ஆனந்தன் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 5ம் தேதி நந்தினிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர் தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைதியான முறையில், டாஸ்மாக் என்ற சமூகக் கேட்டிற்கு எதிராக நந்தினியும், ஆனந்தனும் போராடி வருவது எப்படி குற்றமாக இருக்க முடியும்? அமைதி வழியில் போராடுபவர்களை சிறையில் அடைத்து ஒடுக்குவதா ஜனநாயகம்?

உயர்நீதிமன்றத்தை கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவோ, பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாகப் பேசிய எஸ்.வி.சேகரோ சிறையில் அடைக்கப்படாத போது, நியாயமாகப் போராடும் நந்தினியை கைது செய்வது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

#ReleaseNandhini

Leave a Reply