கோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே! மவுனம் காக்காதே! ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா!

கோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே! மவுனம் காக்காதே! ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா! – மே பதினேழு இயக்கம்

தலையில் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்சினிப் பிரியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கனகராஜ்-வர்சினிப் பிரியா ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டு அம்பேத்கரிய-பெரியாரிய-முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் கோவையில் திரண்டனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்களும் பங்கேற்றனர். வர்சினிப் பிரியாவின் இறுதி ஊர்வலம் இன்று கோவையில் நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்சினிப் பிரியாவும், இடைநிலை ஆதிக்க சாதியைச் சேர்ந்த கனகராஜூம் காதலித்து வந்ததால், கனகராஜீன் அண்ணன் வினோத் மற்றும் இரு நபர்கள் சேர்ந்து கனகராஜையும், வரிசினிப் பிரியாவையும் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள்.

சாதிய வெறி பிடித்த கொலைவெறி மிருகங்களான வினோத் மற்றும் அவரைச் சார்ந்தவர்களையும் கடுமையாக தண்டிக்கக் கோரியும், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்யக் கோரியும் தோழர்கள் முழங்கினர்.

தொடர்ச்சியாக நடைபெறும் ஆணவப் படுகொலைகளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் கடந்து வருகிறது. தற்போது வரை வர்சினிப் ப்ரியா-கனகராஜ் ஆணவப்படுகொலை குறித்து தமிழக அரசு வாய் திறக்காமல் இருப்பது மிக மோசமானது. ஆணவப் படுகொலைகளை தமிழக அரசு அனுமதிக்கிறதா என்ற கேள்வியைத் தான் எழுப்ப வேண்டியிருக்கிறது.

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது அயோக்கியத்தனமாகும். தமிழகம் முழுவதும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ஆணவப் படுகொலைகள் சமீப காலங்களின் அதிகரித்து வருகின்றன. இதைப் பற்றி பேசாமல் இந்த சமூகம் கடந்து செல்ல முடியாது. ஊடகங்களிலும் பெரிய அளவில் விவாதங்கள் நிகழாமல் இருப்பது கவலைக்குரிய தன்மையுடையதாகவே இருக்கிறது.

வர்சினிப்பிரியாவின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும். சாதி வெறி மிருகங்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கி சமூக புறக்கணிப்பு செய்து தனிமைப்படுத்தும் வகையில் சட்டமியற்ற வேண்டும். சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தினை காலம் கடத்தாமல் உடனே தமிழக அரசு இயற்ற வேண்டும்.

சாதி ஆணவப் படுகொலைகள் நிகழாமல் தடுத்திட ஜனநாயக அமைப்புகள் கைகோர்த்து நிற்க வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply