இளைஞர் படுகொலைக்கு காரணமான காவல்துறையின் அடாவடித்தனத்தை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது

மதுரையில் கடந்த ஜூன் 15ம் தேதி சிம்மக்கல் தைக்கால் பாலத்தில் இரவில் டெல்டா பிரிவு போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது விவேகானந்த்குமார் எனும் இளைஞர் தனது நண்பருடன் சென்றுகொண்டிருந்த போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் வாகனத்தை நிறுத்தினர் அதை தொடர்ந்து அவர் வண்டியை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரங்கொண்ட டெல்டா போலீஸார் லத்தியை கொண்டு தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்து கீழே விழுந்தனர்.

அதனை தொடர்ந்து இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவேகானந்த்குமார் 16/6/19 அன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து டெல்டா போலீஸாரால் படுகொலை செய்யப்பட்ட விவேகானந்த்குமார் அவர்களுக்கு நீதி வேண்டி அவரது உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் முற்போக்கு அமைப்புகளும் வணிகர் சங்கமும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து விவேகானந்த்குமார் அவர்களின் மனைவி கஜப்பிரியா தனது ஒன்றரை வயது மகனுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்,பிறகு காப்பாற்றப்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து மே பதினேழு இயக்கம் விவேகானந்த்குமார் அவர்களின் உறவினர்களை சந்தித்து பேசியபொழுது இவ்விடயத்தை மூடிமறைக்கின்ற வேலையை காவல்துறை செய்வதாக அச்சம் தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாது கொல்லப்பட்ட விவேகானந்த்குமாருக்கு நீதி வழங்கும் விதமாக இப்படுகொலையில் ஈடுபட்ட டெல்டா போலீஸார் 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் விவேகானந்த்குமாரின் மனைவிக்கு அரசுவேலை உறுதி செய்யப்படவேண்டும் என்றும், இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி அளிக்கப்படவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தால் ஜுன் 21,2019 அன்று ஒரே ஒருவர் மீது மட்டும் FIR பதிவுசெய்து பணியிடைநீக்கம் செய்து நிவாரண நிதியையும் அரசுவேலையும் உறுதி செய்யப்படும் என்ற உறுதி தந்ததை தொடர்ந்து விவேகானந்த்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களால் பெறப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜூன் 23 அன்று தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் தோழர். நாகை.திருவள்ளுவன் அவர்களும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்களும் விவேகானந்த் குமார் மனைவி கஜப்பிரியா அவர்களையும், உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் மேலும் அவர்களோடு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்தனர்.

காவல்துறையின் இந்த அடாவடித்தனத்தை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத டெல்டா காவல்துறை நீக்கப்பட வேண்டும்.
கொல்லப்பட்ட விவேகானந்த் குமாரின் குடும்பத்திற்க்கு உரிய நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். அவர் மனைவி கஜப்பிரியா அவர்களுக்கு அரசுவேலை உறுதிசெய்யப்படவேண்டும். இந்த படுகொலைக்கு காரணமான டெல்டா பிரிவு போலீஸார் ஆறு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply