ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பூர்வகுடி மக்களை உள்நாட்டிலேயெ அகதிகளாக்கும் மோடி அரசின் திட்டம்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பூர்வகுடி மக்களை உள்நாட்டிலேயெ அகதிகளாக்கும் மோடி அரசின் திட்டம்

இந்திய ஒன்றியத்தை ஆளும் பிஜேபி அரசால் 2015 -16 ல் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் ஸ்மார்ட் சிட்டி. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 நகரங்கள் நான்கு சுற்றுகளாக ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஏற்கனவே இதற்கான வேலைகள் சில நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, பேருந்து நிலையம் மறுகட்டமைப்பு, பூங்காக்கள் அமைத்தல் என அரசின் பொதுப்பணித்துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஸ்மார்ட் சிட்டி என்பது முழுக்க முழுக்க நகரங்களையும், அதன் கட்டமைப்புகளையும் தனியாரிடம் கொடுக்கும் செயல்திட்டம் ஆகும். உலக வங்கியின் வழிகாட்டுதலில் இவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் சிட்டியில் அடிப்படை உழைக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், சிறு குறு வணிகர்களுக்கும் இடமில்லை என்பதை மே பதினேழு இயக்கம் பலமுறை சுட்டிக்காட்டி கண்டித்து வந்திருக்கின்றோம்.

இந்த வரிசையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தஞ்சை நான்குகோட்டை சுவர் பகுதிகளில்,50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருந்த உழைக்கும் தினக்கூலி மக்களை எந்த கால அவகாசம் கொடுக்காமல், அவர்களின் ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து அப்பகுதியிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் புராதன பகுதியும், தினக்கூலிகளாக வேலைக்கு செல்லும் மக்கள் அதிகமாகவும் நெருக்கமாகவும் வாழும் பகுதியும், சிறு குறு வணிகங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளான மேல் அலங்கம், செக்கடி கோட்டை வளைவு, கொடிமரத்து மூலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 8 ஆயிரம் வீடுகளை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஒருவாரமாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இதனை எதிர்த்து மக்கள் இரவு பகலாக தூங்காமல் விழித்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கிறோம் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோமென்று சொல்லி மக்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள்,. இது போதக்குறைக்கு இப்போது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரிலும் இதே வேலையை மோடி அரசு செய்கிறது. எனவே இதனை தடுத்திட தஞ்சையை சுற்றியுள்ள முற்போக்கு இயக்கங்கள் கட்சிகள் ஒன்றினைவது மிக அவசியம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply