தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்

தமிழீழ இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டை நினைவுகூறும் விதமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம், 19-05-2019 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு, சென்னை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடத்தப்பட்டது.

மே பதினேழு இயக்க கலைக்குழுவினரின் பறையிசையுடன் துவங்கிய கூட்டத்தில், தமிழீழம் குறித்தும், தலைவர் பிரபாகரனது புகழைப் பாடும் பாடல்களும், காணமல் ஆக்கப்பட்ட தோழர் முகிலன் குறித்த பாடலும் மே பதினேழு இயக்கத் தோழர்களால் பாடப்பட்டன.

தொடர்ந்து, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழ மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக, மேடையில் வைக்கப்பட்டிருந்த பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படங்களுக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்ற வீரவணக்க முழக்கங்கள் இட்டனர். தொடர்ந்து அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

மே பதினேழு இயக்க தோழர் கொண்டல் சாமி துவக்க உரையாற்றினார். தொடர்ந்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன் குமார், புருசோத்தமன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த பங்களிப்பு குறித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் கட்டமைக்கப்பட்ட தமிழீழ நாட்டின் நடைமுறை அரசியல் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

 

Leave a Reply