உலக போருக்கு வழிவகுக்கிறதா அமெரிக்கா?

உலக போருக்கு வழிவகுக்கிறதா அமெரிக்கா?

ஈரானை மையமாக வைத்து அமெரிக்கா நீண்ட காலமாக ஆடிவருகிற ஆடுபுலி ஆட்டத்தின் உச்ச கட்ட காட்சி இனிவரும் சில நாட்களில் அரங்கேற இருக்கிறதென்றே தோன்றுகிறது. அதன் விளைவு மிகப்பெரிய உலகப்போருக்கான வழி ஏற்படுத்தி விடுமோமென்ற அச்சமும் எழுகிறது. ஏனென்றால் மத்திய கிழக்காசியாவில் ஈரானை வீழ்த்தி விட்டால் மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவுக்கு அங்குள்ள எண்னெய்வளங்களை கொள்ளையடித்து எடுத்து செல்வதற்கு எந்த சிக்கலும் இருக்காதென்று நினைக்கிறது. அதனால் எப்படியாகினும் ஈரானை வீழ்த்த அனைத்து வழிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது.

குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின் இந்த சிக்கல் மேலும் கூர்மை அடைந்தது.ஏற்கனவே ஈரானின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை அணுஆயுத தயாரிப்பை காரணம் காட்டி கொண்டு வந்திருந்தது. இதில் சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் 2015 ஜீலையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அணு ஆயுதம் சம்பந்தமாக ஓப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதனால் ஈரானின் மீதான பொருளாதார தடையை அமெரிக்காவும் ஐநாவும் நீக்கிக்கொண்டது. இந்நிலையில் தீடிரென்று அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த டிரம்ப் யாரும் எதிர்பாராதவித்ததில் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகினார். (பார்க்க படம் 1). மேலும் பொருளாதார தடையையும் ஈரான் மீது கொண்டு வந்தார்.

அதன்படி ஈரானிடமிருந்து இனி எந்த நாடும் ஆயில் இறக்குமதி செய்யக்கூடாதென்று அமெரிக்கா மிரட்டியது. இதன்படி அனைத்து நாடுகளும் ஈரானுடனான வர்த்தகத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டது. இந்தியா சீனா ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகள் மட்டும் எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென்று கேட்டதன் அடிப்படையில் மே 2,2019 கடைசி நாளாக அமெரிக்கா கொடுத்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. உச்சபட்சமாக ஈரானின் பாராளுமன்றத்திலேயே அமெரிக்க கொடியை எரித்ததோடு அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத அமைப்பாகவும் அறிவித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தது.(பார்க்க படம் 02)

இந்நிலையில் ஈரானுடனான வர்த்தகத்தை முறித்து கொள்ள கடைசி நாள் நெருங்கிவரும் வேளையில் நேற்று முந்தினம் ஐரோப்பிய யூனியன் மொத்தமும் ஈரானுடனான வர்த்தகத்தை நிறுத்திவிட்டது. அமெரிக்காவின் இந்த எதிர்ப்பை சமாளிக்க ஈரான் எடுத்திருக்கும் வழி தான் உலகபோருக்கே வழி வகுத்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் உலக அளவில் கப்பல் வணிகத்தில் மிகமுக்கிய இடமாக இருக்கிற Strait of Hormuz ஹோர்மோஸ் முனை ஈரானுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது.(பார்க்க படம் 03) இந்த கப்பல் போக்குவரத்து முனையை மூடப்போகிறோமென்று ஈரான் நேற்று எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஒருவேளை ஈரான் இந்த வேலையை செய்தால் உலகளவில் 30%மான எண்ணெய் வர்த்தகம் அடியோடு நிற்கும். 25% மான மற்ற பொருட்களின் வர்த்தகம் நிற்கும் அபாயம் ஏற்படும். இது மற்ற நாடுகளை கோபமடையச் செய்யும். எனவே எப்பாடுபட்டாவது ஈரானிடமிருந்து அந்த கப்பல் முனையை காக்க அமெரிக்க ஆதரவு நாடுகள் முயலும் அதற்கு ஈரான் ஆதரவு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஆக இது ஒரு உலகப்போரில் கொண்டு போய் முடியும் அபாயத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்க தனது சுயநலத்திற்காக ஒரு உலகபோரை உருவாக்க நினைக்கிறது.

Leave a Reply