பி.எஸ்.என் எல் நிறுவனத்தை மூட எடுக்கும் நடவடிக்கையை மோடி அரசே கைவிடு

பி.எஸ்.என் எல் நிறுவனத்தை மூட எடுக்கும் நடவடிக்கையை மோடி அரசே கைவிடு- மே பதினேழு இயக்கம்
————————–————————–————————–————————–————————–————————–

இந்தியாவில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதையும் இல்லையேல் மூடுவதையுமே கொள்கையாக கொண்டிருக்கிற மோடி அரசு. அடுத்ததாக அரசு தொலை தொடர்புநிறுவனமான பி.எஸ்.என் எல்லை மூட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கீழ்கண்ட இரண்டு வழிகளில் செய்யப் போகிறார்கள்.

1.50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக வி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் பணியிலிருந்து விலக்கப்பட உள்ளனர்.

2. ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்க இருக்கிறார்கள்.

இந்த இரு வழிகளின் மூலம் 54,451பேரை நீக்க திட்டமிட்டுள்ளார்கள். மொத்த பி.எஸ்.என்.எல் பணியாளர்களில் (1,74,312) இது மூன்றில் ஒரு பங்கு (31%) ஆகும். நடைபெறவிருக்கிற 17ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட அரசு முடிவு செய்திருக்கிறது. இவ்வளவு பேரை ஒரே நேரத்தில் நீக்கினால் மொத்த தொலை தொடர்பு துறையே சம்பித்து போகும். இறுதியாக அது இழுத்து மூடப்படும். இதை செய்யவே இந்த நடவடிக்கையை மோடி அரசு செய்கிறது.

இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அரசு சொல்லும் காரணம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2017லிருந்து ரூபாய் 7,933 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. அதை சமாளிக்கவே இந்த நடவடிக்கை அவசியமாகிறதென்று. ஆனால் 2016ஆண்டு வரை சுமார் 31,533கோடி ரூபாய் லாபத்தில் இயங்கிய நிறுவனம் தான் பி.எஸ்.என்.எல் நிறுவனம். இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் எப்படி இவ்வளவு பெரிய நஷ்டத்திற்கு வந்திருக்க முடிந்ததென்றால், மோடி அரசு ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியாருக்கு கொடுத்த 4ஜி இணைய சேவையை அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லுக்கு இரண்டு வருடங்களாக கொடுக்கவில்லை. இதனால் பெருவாரியான வாடிக்கையாளர்கள் தனியாரை நோக்கி போய் விட்டார்கள். இதனால் லாபத்தில் இயங்கிய அரசு நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது.

இதனை கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது. கடந்த வருடம் டிசம்பர் 03ஆம் தேதியும், இந்த வருடம் பிப்ரவரி 18ஆம் தேதியும் 3நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மோடி அரசின் ரிலையன்ஸ் ஆதரவு நிலைப்பாட்டையும், அரசு நிறுவனத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தினார்கள். இதனால் வேறு வழியின்றி மோடி அரசு இப்போது 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல்லுக்கு வழங்கியிருக்கிறது.

ஆனால் இந்த சேவையை தடையின்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டுமானால் ஊழியர்கள் அவசியம். பெருவாரியான ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வழிவகை செய்துவிட்டு, இப்போது 4ஜீ சேவையை வழங்குவது வீண்வேலை. ஆகவே திட்டமிட்டு பிஜேபியின் மோடி அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஜ மூட முயற்ச்சிக்கிறது. இதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மே 17 இயக்கம்
9884072010