பாலாகோட் தாக்குதல்..பொய்களை பரப்புவதன் நோக்கம் என்ன?

பாலாகோட் தாக்குதல்..பொய்களை பரப்புவதன் நோக்கம் என்ன? மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எழுப்பிய கேள்விகள் தற்போது இந்தியா முழுதுமிருந்து எழ ஆரம்பித்திருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை!

புல்வாமா-வில் CRPF படையினர் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து பாலகோட் எனும் இடத்தில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. அந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே மிகப் பெரிய எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் அனைத்திலும் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் BBC, Guardian, Washington Post, The Telegraph என சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா ஒரு தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்று வரை ஒரு தீவிரவாதியும் உயிரிழந்ததாக தகவல் எதுவும் சர்வதேச மட்டங்களிலிருந்து வரவில்லை. அல்ஜசீரா ஊடகத்தில் கட்டிடங்கள் கூட எதுவும் சேதமாகவில்லை என தெரிவிக்கிறார்கள். சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐ.நா உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்புகளும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக கூறவில்லை.

தற்போது பல நாட்கள் கழித்து பேசிய பாஜக அமைச்சரான அலுவாலியா, பாலகோட் தாக்குதல் உயிரிழப்பைக் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும், அதனால் எண்ணிக்கை குறித்து எதுவும் சொல்லமுடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்து பாலகோட் தாக்குதல் குறித்து வெளியான செய்திகள் குறித்து கேள்விகள் எழும்பியுள்ளதால், மோடி தற்போது ”தாக்குதலுக்கு ஆதாரம் கேட்காதீர்கள்” என சினிமா கதாநாயகனைப் போல் வசனம் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான எம்.கே.நாராயணன் சமீபத்தில் எழுதியுள்ள கட்டுரையில், 26/11 தாக்குதலின் போது பாகிஸ்தான் மீது ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்று குறிபிடும்போது, இந்தியாவிடம் இன்னொரு நாட்டின் ஒரு பகுதியில் “துல்லியத் தாக்குதல்” நடத்துவதற்கான வசதிகள் எதுவும் அப்போது இல்லை என்றும், அது இப்போதும் இல்லை என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இன்னொரு நாட்டின் எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கு மிகப் பெரிய ராணுவ வசதிகள் தேவை என்றும், அதனால்தான் கிரீமியா விவகாரத்தில் அமெரிக்கா ரசியாவின் மீது தாக்குதல் நடத்தாமல் விட்டதாகவும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் பாலகோட் தாக்குதலில் உண்மையான விவரங்களை வெளிப்படையாக வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படி பல்வேறு மட்டங்களிலிருந்தும்கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன. இதைத் தான் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் முதல் நாளான பிப்ரவரி 26-ல் இருந்து எழுப்பி வருகிறார். இதைக் கேட்டதற்குத் தான் மே பதினேழு இயக்கத்தினர் ராணுவத்திற்கு எதிரானவர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் அவதூறுகளை தொடர்ச்சியாகப் பரப்பினர் பாஜகவினர்.

CRPF படையினரின் அணிவகுப்பில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு யார் காரணம்? பாலகோட் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது? எதற்காக வெளியுறவுத் துறை செயலாளர் பொய் சொன்னார்? எதற்கு பாஜகவினர் பொய்யை பரப்பினர்? எதற்கு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் துல்லியத் தாக்குதல் நடைபெற்றதாக சொன்னார்கள்? எம்.கே.நாராயணன் சொல்வது உண்மையா? மோடி சொல்வது உண்மையா? ராணுவ தாக்குதல்கள் ரகசியம் என்றால் அதை ஏன் ஊடகங்களில் பரப்பிவிட்டு தற்போது அதை வைத்து ஏன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது? இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது இந்திய பாஜக அரசின் கடமை. பதில் சொல்லாமல் கடந்து சென்றால் உங்களை கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருக்கும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply