பிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்

பிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்
————————–————————–————————–
2009 பிப்ரவரி 12இல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மன்றத்தின் வாயில் முன் நின்று கொண்டு ஒரு இளைஞர் இப்படி சொன்னான்.

”என் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்க்கும், சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துனைபோனதற்கும் சாட்சியாக ஐநா மன்றத்தின் முன் இந்த தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்று வரலாறு சேரட்டும். சிங்கள அரசின் இன அழிப்பிற்கு துணைபோகும் நாடுகளே ஐநாவே இன்னொண்றையும் புரிந்துகொள்ளுங்கள். நேற்றைய வரலாற்றின் ஏமாற்றத்தின் சோக வெளிப்பாடாக இந்த முருகதாசன் தீக்குளிக்கின்றான். ஆனால் இன்றைய வரலாறு கடந்தகாலமாகும். எதிர்காலத்தில் தமிழரை அழித்தொழிக்க ஊக்குவித்து உதவிபுரிவோர் மீது எமது வருங்காலச் சந்ததி கோபம்கொள்ளும்.”

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை ஐ.நா அவை தடுக்கத் தவறியதற்க்காக மாவீரன் முருகதாசன் ஐநா முன் தீக்குளித்து இன்றோடு பத்தாண்டுகள் ஆகிறது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுவிட்டோமா? இனப்படுகொலை குற்றவாளிகளை தண்டித்து விட்டோமா? குறைந்தபட்ச உரிமைகள் ஏனும் தமிழர்களுக்கு கிடைத்திருக்கிறதா என்றால் எல்லாம் கேள்விக்குறியாக தொங்கி நிற்கிறது.

போர் முடிந்தபின் அங்கே நிலைமைகள் இன்னும் மோசமாக மாறி நிற்கிறது. தமிழர்களின் வழிபாட்டு தளங்கள் இடிக்கப்படுகின்றன, அங்கே புத்த விகாரங்கள் முளைக்கின்றன. தமிழர்களின் நிலம் சிங்கள இராணுவத்தின் பயிற்சி மைதானமாக மாற்றப்பட்டுவிட்டது. தமிழர்களின் கடலில் பன்னாட்டு கம்பெனிகளின் கப்பல்கள் பவனி வருகிறது. போரினால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் விபரங்களை கூட தரமறுக்கிறது சிங்களம். இவ்வளவு கொடுமைகளையும் செய்த கொலைகாரர்கள் எந்தவித பிரச்சனையுமின்றி மீண்டும் அரியனை ஏற முயற்சி செய்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய தமிழ் அரசியல் கட்சிகளோ பதவி ஆசையில் சிங்கள தலைமைகளுக்கு முட்டுகொடுத்து அவர்கள் அரிப்புக்கு முதுகு சொறிந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்காகவா முத்துகுமார் முருகதாசன் இசைபிரியா உள்ளிட்ட லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்களை உயிரை கொடுத்தார்கள். உலகின் அனைத்து வல்லரசு நாடுகளின் படையையும் எதிர்த்து நின்ற நம்மை இன்று பகடைகாயாக்கி உலக சதுரங்கம் ஆடப்பட்டு வருகிறது எனற உண்மையை திட்டமிட்டு மறைக்கும் தமிழ் தலைமைகளையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறந்தள்ளுங்கள். அடிப்படை உரிமைக்கான போராட்டத்தில் எக்காலத்திலும் யாருடனும் சமரசமில்லை என்ற புலிகளாக இளைய சமுதாயம் முன் வரட்டும்.

அமெரிக்கா தீர்வை தருமா? இந்தியா தீர்வை தருமா? இங்கிலாந்து தீர்வை தருமா? என்று நம்பவைக்கப்பட்ட/நம்புகிற அரசியலை தூக்கியெறியுங்கள். முத்துகுமாரும் முருகதாசனும் முன்னெடுத்த அறிவாயுத்தை ஏந்துங்கள். அந்த அறிவாயுதம் தான் தற்போது கட்டலோனியாவை நமக்காக தீர்மானம் போடவைத்திருக்கிறது.

நாம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. சிந்தப்பட்ட இரத்தத்திற்கான நியாயத்தை பெறாமல் புலிகள் (தமிழர்கள்) ஓயமாட்டார்கள் என்ற உண்மையை உலகுக்கு சொல்வோம். அதுவே முருகதாசனுக்கு நாம் செய்யும் வீரவணக்கமாக இருக்க முடியும்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

மே 17 இயக்கம்

Leave a Reply