இனப்படுகொலையாளி ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் ‘தி இந்து’ பத்திரிக்கை

சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் பேசிய பல ஊடகவியலாளர்களை கொலை செய்த ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறது ‘தி இந்து’ பத்திரிக்கை.

தமிழினப்படுகொலை நடத்தப்பட்ட பொழுதும் அதற்கு முன்பும், பின்பும் அந்த இனப்படுகொலையை மறைப்பதும், கொலையாளிகளுக்கு முக்கியத்துவமளிப்பதையும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது ‘தி இந்து’ நாளிதழ். இதை மே 17 இயக்கம் தனது துவக்க நாள் முதல் உரக்க கூறி வருகிறது.

தமிழின விரோதியை கொண்டாடும் மனநிலை கொண்ட ஒரு நாளிதழ் தமிழ்நாட்டிலேயே தனது வியாபாரத்தை துவக்கி 100 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வ்ருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியான இலங்கை அரசின் தவறான செய்திகளை பரப்புவது, போராளிகள் மீது அவதூற்றினை எழுதுவது, தமிழர்களே இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் என கட்டமைப்பது என மனித குலவிரோத செயலை தொடர்ந்து செய்து வந்திருக்கிறது தி இந்துவும் அதன் உரிமையாளர் என்.ராமும்.

இலங்கை அரசினை தொடர்ந்து ஆதரித்தும், அதனின் இனப்படுகொலை அரசை பாதுகாத்தும் வந்ததற்காக என்.ராமிற்கு இலங்கை அரசின் மிக உயரிய விருதான ‘லங்கா ரத்னா” ( பாரத ரத்னாவிற்கு இணையான) விருது கொடுக்கப்பட்டது. 44 பத்திரிக்கையாளர்களை கொலை செய்த இலங்கையில் தி இந்து நாளிதழ் மட்டுமே சுதந்திரமாக இயங்கியதற்கு காரணமே அதன் தமிழின விரோதமும், சிங்களப் பேரினவாத ஆதரவு மனநிலையுமே. மேலும் இலங்கையின் இனப்படுகொலை காலத்தில் மிகச்சிறந்த பத்திரிக்கைக்கான விருதையும் இலங்கை வழங்கிய பொழுது ’லசந்த’ போன்ற பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த காலம். இப்படியாக தொடர்ந்து தமிழின விரோத செயலை செய்துவந்த தி இந்து தற்போது தனது பெங்களூர் கருத்தரங்கில் பங்கேற்க இனப்படுகொலையாளன் ‘ராஜபக்சேவை’ அழைத்திருக்கிறது…

இந்த கருத்தரங்கிற்கு இவர் அழைக்கப்படும் காரணம் நமக்கு புரியாமலில்லை. இலங்கையிலும், இந்தியாவிலும் தேர்தல் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்திய அரசோடும், இதர சமூகத்தோடும் உறவினை பலப்படுத்தும் விதமாகவே இந்நிகழ்வினை இந்து பத்திரிக்கை ராஜபக்சேவிற்கு நடத்துகிறது என்பதையும் நம்மால் யூகிக்க முடியக் கூடிய ஒன்றே. தனது பப்ளிக் ரிலேசன் பணியை ராஜபக்சேவிற்காக தி இந்து நீண்டநாட்களாக செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து துயருரும் நிலையில் இந்த கொடுமை அரங்கேறுவதை எதிர்த்து நிற்க தமிழினம் தயாராக வேண்டும்.

தி இந்து பத்திரிக்கைக்கு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள். வலிமையான எதிர்ப்பே இந்த இழிவான கருத்தரங்கத்தில் நமது வலியின் அரசியலை கொண்டு சேர்க்கும்.

09ம் தேதி பிப்ரவரி அன்று பெங்களூரில் தி இந்து பத்திரிக்கை நடத்தும் நிகழ்விற்கு ராஜபக்சே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தி இந்து பத்திரிக்கையே! ராஜபக்சேவை அழைக்காதே. தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதே.

படம்: மே17 இயக்கத்தின் முதல் கருத்தரங்கம் 2009,

Leave a Reply