தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் கைது – மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்  

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்த தோழர் பெரியார் சரவணன் அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை(09-12-2018) அன்று இரவு தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (07-12-2018) அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசியதற்காக அவர் மீது இந்த அடக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்நிலையில் தேவையில்லாமல் ஆளுநர் ஏழ்வரின் விடுதலையை தாமதப்படுத்தி வருகிறார்.

ஆளுநரை நோக்கி அழுத்தத்தை கொடுக்க வேண்டிய தமிழக அரசு, அதற்குப் பதிலாக நியாயத்திற்கு போராடும் தோழரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தைத் தான் பெரியார் சரவணன் பேசுகிறார். இந்த அடக்குமுறை நடவடிக்கையினை கைவிட்டு அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply