தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தால் சிறை! தினந்தோறும் தொடரும் கைது!

தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தால் சிறை! தினந்தோறும் தொடரும் கைது!
மணியரசன் மீது பிடிவாரண்ட், பொழிலன் விடுதலையான வழக்கில் மேல்முறையீடு, தற்போது சீமான் கைது.

தமிழகத்தின் விலை உயர்ந்த இயற்கை வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்க இந்திய அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பினையும், கடலையும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது. இதனை உணர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடி வருகின்றார்கள். இதனை தடுக்க தமிழகத்தில் இருக்கும் அடிமை அரசைக் கொண்டு போராடுகிறவர்களை சுட்டுத் தள்ளுவதும், எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறையில் அடைப்பதும், வழக்குகள் போடுவதும் என பாசிச நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியிருக்கிறது.

இதன்படி தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் அறவழியில் போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டை நடத்தி, 13உயிர்களை காவு வாங்கியதும், சேலத்திற்கும் சென்னைக்கும் இடையில் சாலை போடுகிறோமென்று விவசாயிகளின் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை பிடுங்குவதை கண்டித்த பியூஷ் மனுஷ், மாணவி வளர்மதி, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் கெளதமன் உள்ளிட்ட எண்ணற்றவர்கள் மீது போலி வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் சேலத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் சேலத்திலுள்ள ஒரு கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து பேசிக்கொண்டிருந்த போது காவல்துறையின் அனுமதியில்லாமல் கூட்டம் போட்டார் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் போகும்போது அவர்களை சூழ்ந்துகொண்டு மக்கள் தங்களது கோரிக்கைகளை சொல்வது என்பது இயல்பான செயலாகும். அதனை ஒரு குற்றச்செயலாக மாற்றி பொய்வழக்கில் திரு.சீமான் மற்றும் அவருடைய கட்சியினர் சிலரை கைது செய்திருப்பது என்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களின் மீது அவர் 29.10.1991ல் பேசிய ஒரு பேச்சிற்காக 27 வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு வழக்கும் அதைனையொட்டி அவருக்கு பிடிவாரண்டும் போட்டிருக்கிறது தமிழக அரசு.

அதேபோல தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்கள் மீது 1988ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கில் அவர் ஜனநாயகப்படி நீதிமன்றத்தில் வாதாடி தன்மீது குற்றமில்லை என்று நிருபித்து விடுதலை ஆகிவிட்டார். ஆனால் அந்த வழக்கை தற்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் யாரும் தமிழர் உரிமை மற்றும் வாழ்வாதாரம் குறித்து பேசிவிடாக்கூடாது என்று இந்திய பாஜக அரசு போட்டுகொடுத்த வேலைதிட்டத்தின் படி தமிழக அரசு வேலை செய்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களின் உரிமைப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட முடிந்ததாக வரலாறு இல்லை. சிறைக்கூடங்கள் மக்கள் போராட்டங்களை முடக்கி விடாது. தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த ஒடுக்குமுறைகளை கண்டித்திட வேண்டும். நமக்குள் இருக்கிற முரண்பாடுகளைக் கடந்து அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இணைந்து நிற்போம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply