இந்தியாவின் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி

இந்தியாவின் குண்டர் சட்டம், NSA, UAPA, 124-A போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி

நான் திருமுருகன் காந்தி, இந்திய அரசினால் பாதிக்கப்பட்ட நபராக நான் இங்கே நிற்கிறேன். கடந்த 2017 மே மாதம் நானும், மற்ற மூன்று செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு 120 நாட்கள் சிறையில் மோசமான குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தோம். என்னுடைய குற்றம் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்த முயன்றது. தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கினையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தினையும் இந்திய அரசு தவறாக பயன்படுத்துவதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வழக்கின்படி, எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ஒரு வருடம் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பது என்பது அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகளை மீறிய ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டின் குடிமை சமூகத்தினை முடக்குவதற்காக கொடூரமான தடுப்புக் காவல் சட்டங்களை இந்திய அரசு பயன்படுத்துகிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு தி.வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். மாணவி வளர்மதி உள்ளிட்ட பல செயல்பாட்டாளர்கள் கடுமையான வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் 13 சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களை கொலை செய்யப்பட்டதை எதிர்த்த மாணவர்கள் உள்ளிட்ட பல அப்பாவி பொதுமக்கள் தேசத்துரோக வழக்குகளின் கீழ் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே தடுப்புக் காவல் வழக்கின் கீழ் காலனிய அரசாங்கத்தில் மகாத்மா காந்தியும் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள 124-A பிரிவு, IPC-ன் அரசியல் பிரிவுகளின் இளவரசனாக குடிமக்களுடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டங்கள் இந்திய அரசு உறுப்பினராக உள்ள UDHR(Universal Declaration of Human Rights) மற்றும் ICCPR-ன் பிரிவுகளை மீறுவதாக உள்ளன. UAPA (Unlawful Activities Prevention Act) என்ற கொடூர சட்டத்தின் மூலமும் இந்திய அரசு சமூக செயல்பாட்டாளர்களையும், குடிமை சமூக அமைப்புகளையும் மிரட்டி வருகிறது. தமிழ் செயல்பாட்டாளர்கள் இந்திய அரசினால் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நிகழ்வாக மாறியுள்ளது. கொடூரமான கருப்புச் சட்டங்களை நீக்கிட இந்திய அரசுக்கு இந்த மன்றம் அழுத்தம் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 

Leave a Reply