ஸ்னோலின் உட்பட படுகொலை செய்யப்பட்ட எம் தோழர்களுக்கான நீதி எங்கே

தூத்துக்குடி படுகொலை நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. அமைதியான வழியில் போராடிய மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்தது அரசு. நூறு நாட்களை போராட்டம் தொடுகிறது என்றால், அரசும், அதிகார வர்க்கமும் மக்கள் நலனைப்பற்றி கவலைப்படவில்லை என்று தான் அர்த்தம். மாவட்ட ஆட்சியாளரே அம்மாவட்ட மக்களின் நலனை பேணும் பொறுப்பு கொண்டவர். அவரே அம்மாவட்டத்தின் சீர்கேடுகளை அகற்றும் அதிகாரமும் கொண்டவர். அவரே முன்வந்து மக்களின் நலனை, கோரிக்கைகளை தீர்ப்பது என்பதே அவரின் முதன்மையான பணி. அவருக்கான வருமானத்தையும், வசதிகளையும், அதிகாரத்தையும் கொடுப்பதும் மக்களே!.

அப்படியான ஒருவர் மக்களை சந்திக்க மறுக்கிறார். மக்கள் கோரிக்கைகளை புறக்கணிக்கிறார். அவரை நேரில் சந்தித்து தங்களது நூறாவது நாள் போராட்டத்தில் கோரிக்கை மனுவை கொடுக்க மக்கள் வருகிறார்களெனில் அதற்குரிய ஒழுங்கினை செய்து தரவேண்டியவர், அடக்குமுறை சட்டத்தினை ஏவுகிறார். காவல்துறை களத்தில் இறக்கப்படுகிறது. மனு கொடுக்கும் பேரணிக்கு அனுமதி மறுக்கச் சொல்லி, விதிகளை மீறும் வெளிநாட்டின் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகுகிறது. தடை உத்தரவிற்கான வழிமுறையை அந்நிறுவனம் பெறுவதை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறது. இவை அனைத்தும் அரசியல் சாசனம் உறுதி செய்த உரிமைகளை மற்றும் விதிகளை மீறுவதாக இருக்கிறது. இத்தனை குற்றங்களைச் செய்த இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பதவி நீக்கம், பணியிடை நீக்கம் என்பன நடந்திருக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசு, மக்களை அடக்கி ஒடுக்கும் அதிகாரவர்க்கம், நீதியை காற்றில் பறக்கவிடும் மன்றங்கள், காந்தியடிகளை படுகொலை செய்த கும்பலின் ஆதிக்கம், மார்வாடி-பனியாவின் வணிக வெறி என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மக்களை கடந்த மாதம் இதே நாட்களில் வேட்டையாடின.

துப்பாக்கி சூட்டிற்கு இது வரை எவரும் பொறுப்பேற்கவும் இல்லை, உத்திரவிட்டதாக ஆதாரத்தையும் வெளியிடவும் இல்லை. முதலமைச்சர் முதல் ரஜினிகாந்த் வரை மக்களை சமூகவிரோதிகள் என கொச்சைப்படுத்தியதை தவிர்த்து நீதியை குறித்து எவரும் பேசவில்லை. எதிரி நாட்டை நோக்கி நீட்ட வேண்டிய துப்பாக்கிகளை சொந்த மக்களை நோக்கி நீட்டியது மட்டுமல்லாமல் காக்கை, குருவி போல சுட்டுப்படுகொலை செய்தனர். 17 வயது மாணவி ஸ்னோலின் உட்பட 16 பேரை படுகொலை செய்து ரத்தவெறியை காட்டினர்.

இந்த ஒரு மாதத்தில் இதுவரை இவர்களை சுட்டுக்கொலை செய்தவர்கள் பற்றிய குற்றச்சாட்டை அரசு பதிவு செய்யவில்லை. சுட்டவர்கள் சட்டத்தின்படி நடந்து கொண்டதற்கான ஆதாரமும் இதுவரை முன்வைக்கப்படவில்லை எனும் போது இவர்கள் கொலையாளிகள் தானே?.. என்றால் இந்த கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் ஏன் இதுவரை நிறுத்தவில்லை?..

இந்த கொலை பாதகத்தை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை யார் மேற்கொள்ளப் போகிறார்கள்?… உயர் நீதிமன்றமா?, நீதிபதிகளா? காவல்துறை உயர் அதிகாரிகளா? மாவட்ட அதிகாரிகளா? அமைச்சரா? முதலமைச்சரா? அல்லது உச்சநீதிமன்றமா?… யார்?

அரசியல் சாசனத்தின் ஆட்சியை நிலை நிறுத்தப் போவது யார்?… தலைக்கவசத்தை அணிவது கட்டாயம் என்று தானே முன்வந்து சமூகப்பொறுப்பேற்று உத்தரவிட்டது போன்று நீதிபதிகள் சமூக பொறுப்புணர்ந்து, அரசியல் சாசன பொறுப்புணர்ந்து கேள்வி எழுப்புவார்களா?…

யார் செய்யப் போகிறீர்கள்?

உங்களில் ஒருவரும் செய்யப் போவதில்லை.. ஏனெனில் நீங்கள் அரசியல் சாசனத்தை மதிப்பவர்களல்ல… சட்டத்தை மதிப்பவர்களல்ல… மக்கள் உரிமைகளை மதிப்பவர்களல்ல. இதை எதையும் மதிக்காதவர்களைத் தானே சமூக விரோதிகள் என்று உலகம் சொல்கிறது?…

எனில், இந்த சமூகவிரோதிகளை எதிர்கொண்டு நீதியை நிலை நாட்ட வேண்டும். ஸ்னோலின் எனும் நம் தங்கையை படுகொலை செய்தவர்கள், தமிழரசன் உள்ளிட்ட மக்களை நேசிக்கும் உன்னத மனிதர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரும் பொறுப்பினை மக்களாகிய நாமே முன்னெடுக்க வேண்டும்.

எம் தோழர்களின் ஈகத்தை மறக்க மாட்டோம். எமக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோமென உறுதி ஏற்போம்.

இந்த 30 நாட்களல்ல, 30 ஆண்டுகளானாலும் நீதிக்கான போராட்டம் ஓயப்போவதில்லை.

தூத்துக்குடி ஈகியர்களுக்கு வீரவணக்கம்.


மே17 இயக்கம்
9884072010

Leave a Reply