விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம் 

விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல என்று தெரிவித்தோடு, புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களையும் விடுவித்து 14-6-18 அன்று தீர்ப்பளித்துள்ளது சுவிஸ் நீதிமன்றம்.

புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்தது தான், இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு காரணம் என்ற அடிப்படையிலான அபாண்டமான குற்றச்சாட்டினை வைத்து 13 பேர் மீது வழக்கினை சுவிஸ் அரசாங்கம் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தோழர் விராஜ் மெண்டிஸ் அவர்களின் கடுமையான முயற்சியும், ஸ்விஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தீவிரமான உழைப்பும், வழக்கறிஞரின் நேர்த்தியான தமிழ் மக்கள் ஆதரவு முற்போக்கு அரசியலும் இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தன.

இந்த வழக்கினை தமிழர்களின் மீது திணித்ததற்கு பின்னால் பிரிட்டன் அரசாங்கத்தின் சூழ்ச்சி என்பது இருந்தது. இந்த வழக்கிற்கு எதிரான பிரச்சார நடவடிக்கைக்காக சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டிருந்தபடி தோழர் விராஜ் மெண்டிஸ் அவர்கள் அழைத்தன் அடிப்படையில் கடந்த மே 22 அன்று சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

ஈழ இனப்படுகொலை குறித்த டப்ளின் மற்றும் பிரேமன் தீர்ப்பாயங்களை ஏற்பாடு செய்ய உழைத்த முக்கியமான நபர் தோழர் விராஜ் மெண்டிஸ். அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த வழக்கிற்கு எதிரான இணையதள பிரச்சார வழிமுறைகளையும் தமிழ்நாட்டிலிருந்து மே பதினேழு இயக்கம் மேற்கொண்டது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஆன்டி ஹிக்கின்போத்தம், இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞரான மார்செல் போஸொனெட், ஜெர்மன் மனித உரிமை செயல்பாட்டாளர் விராஜ் மெண்டிஸ், தமிழீழத்திலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

திருமுருகன் காந்தி பேசுகையில்,

”சர்வதேச விவகாரங்களில் நடுநிலைமையாக செயல்படுவதாகவும், அமைதியை ஊக்குவிக்கிற நாடாகவும் இருப்பதாக நாங்கள் நம்பிய சுவிட்சர்லாந்து அரசு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து இப்படி ஒரு மோசமான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது எங்களை அதிர்ச்சியடையச் செய்கிறது. இலங்கை அரசு இந்த போரின் பல்வேறு கட்ட காலங்களில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடை செய்த போது, புலம் பெயர்ந்த தமிழர்களே அங்கிருந்த தமிழர்களின் வாழ்வுக்கான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டனர். இலங்கை அரசின் கீழாக தமிழர்கள் எந்த உதவியுமின்றி தனித்து விடப்பட்ட போது, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்த புலம் பெயர் தமிழர்களே ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த இணைப்பு குற்றம் என்று ஆக்கப்படுமென்றால், தமிழ் மக்கள் தங்கள் எதிரியின் கருணைக்கு கீழாகத்தான் வாழ முடியும். சுவிட்சர்லாந்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சினையில் போதுமான விசாரணை எதுவும் இல்லாமல் எப்படி தமிழர்கள் மீது இந்த வழக்கினை சுவிஸ் அரசு பதிய முடியும். இலங்கையில் நடைபெற்றதன் மீதான ஒரு சர்வதேச விசாரணையை கொண்டு வர முயலாமல், சொற்பமான விடயங்களை வைத்துக் கொண்டு தமிழர்களை எப்படி குற்றம் சாட்ட முடியும்? சுவிட்சர்லாந்தில் நடந்ததாக சொல்லப்படுகிற நிதியியல் குற்றங்களுக்கு, இன்னொரு நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் எப்படி குற்றச்சாட்டை எடுத்துக்கொண்டு நீதி வழங்க முடியும். அங்கு நடைபெற்ற சண்டையில் இரு தரப்பு ஈடுபட்டிருக்கிறது. அதில் ஒரு தரப்பினை முன்முடிவோடு குற்றவாளியாக அணுகி எப்படி விசாரணையினை மேற்கொள்ள முடியும். ஒரு மூன்றாவது நாட்டில் நடைபெற்ற நிகழ்வினைப் பற்றி எந்த விசாரணையும் இல்லாமல், எந்த அடிப்படையில் சுவிஸ் அரசாங்கம் இந்த வழக்கினை தொடுக்க முடியும்?” என்ற கேள்விகளை முன்வைத்து பேசினார்.

 

Leave a Reply