இதை சொன்னால் நாங்கள் தேசதுரோகிகளா?

கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் தவறான கொள்கைகளையும், அழிவு திட்டங்களையும் எதிர்த்து யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களை எல்லாம் தேசதுரோகிகளென்றும், சமூக விரோதிகளென்றும் முத்திரை குத்தும் வேலையை அரசும்அதன் ஏவலர்களாக இருக்கும் அரசின் அடிவருடிகளும் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அரசுகள் தான் சமூகவிரோத வேலைகளில் ஈடுபடுகிறது.

உதாரணமாக சீனா தனது நாட்டில் சுற்றுசுழல் மாசு அடைவதை தடுக்க ஆபத்தான இராசயானங்கள் கழிவுகளை தடைசெய்ய முடிவெடுத்திருக்கிறது. இதன்படி இராசாயண கழிவுகளை வெளியேற்றும் பல ஆலைகளை இழுத்து மூடிவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்நாடு எங்களின் அடுத்த தலைமுறை இயற்கையோடு வாழ வழிவகை செய்யும் வேலையில் முதல்படி இந்த நடவடிக்கை என்று சொல்லியிருக்கிறது. இப்படி சீனா தனது அடுத்த தலைமுறைக்கான வேலையில் இப்போது ஈடுபடுகிறது.

ஆனால் இந்தியாவோ சீனா அந்நாட்டில் ஆபத்தான் இராசயானத்திற்கு தடை என்று அறிவித்தது தான் தாமதம். உடனே உங்களுக்கு இராசாயண பொருட்கள் இதனால் தடையில்லாமல் கிடைக்க நாங்கள் எங்கள் நாட்டில் இந்த இராசாயனத்தை தயாரித்து அனுப்புகிறோமென்று அறிவித்திருக்கிறது. http://www.thehindu.com/…/chinas-green-…/article24097713.ece. இப்படி அபத்தான இராசயணங்களை இங்கு தயாரித்தால் நமக்கு பாதிப்பு வருமே என்று சொன்னால். அதைபற்றியெல்லாம் பேசாதீர்கள். இதன் மூலம் இந்தியாவின் இராசயண ஏற்றுமதி 31.94% அதிகரிக்கரிக்கும். இந்தியாவிற்கு 15.91பில்லியன் அந்நிய செலவாணி கிடைக்குமென்று அரசு சொல்கிறது.

சீனா தனது மக்களை பற்றியும் அடுத்த தலைமுறையை பற்றியும் அக்கறை கொள்கிறது. இந்தியா பணம் ஒன்றே குறிக்கோள் கார்ப்ரேட் கம்பனிகளின் நலன் ஒன்றே இலக்கு என்று வேலை செய்கிறது. இதனால் தான் எவ்வளவு கொடுமையான சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தினாலும் வேதாந்தா என்ற கார்ப்ரேட் கம்பெனியின் ஸ்டெர்லைட் ஆலையை எடுக்க அரசு மறுக்கிறது. அந்த நச்சு ஆலையை அகற்ற வலியுறுத்தி போராடிய மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ளுகிறது.

இப்படி கார்ப்ரேட்களுக்காக சொந்த மக்களை பலிவாங்குறீர்களே என்று சொன்னால் நாங்கள் தேசவிரோதிகளா?

நீட் எனும் சமூக அநீதியான அரக்கனை கொண்டு வந்து இந்தியாவின் சுகாதாரத்துறையையே கேள்விக்குறியாக்கியதோடு தமிழகத்தில் அனிதா,பிரதிபா உட்பட மூன்று பேரை கொலை செய்திருக்கிற மோடி கும்பல். இப்போது சிவில் சர்விஸ் என்ற இந்தியாவையே நிர்வகிக்கிற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை புகுத்த பெரியளவிலான மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது .அதாவது

”இதுவரை தேர்வுமுறையிலும் அடுத்து நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த முறையை மாற்றி இனி கூடுதலாக ஆறுமாத கால பயிற்சி வகுப்பு ஒன்று நடத்தப்படும் இதில் அதிக மதிப்பெண் பெறும் நபர்களே தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற புதிய முறையை மோடி அரசு அமல்படுத்தியிருக்கிறது” பார்க்க படம் 01.

இந்த முறையை எதிர்க்க முதன்மை காரணம் ஆறுமாத பயிற்சி வகுப்புக்கு பிறகு மதிப்பெண் போடுபவர் யார்? அவர் ஒருதலைபட்சமாக இருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம். அவருக்கு வேண்டியவர்கள் அல்லது அரசு சொல்லும் நபருக்கு அவர் அதிக மதிப்பெண் போட்டு தேர்ந்தெடுத்துவிட்டால் இந்திய ஒன்றியம் நிர்வாகம் அனைத்தும் ஒரு சாரர் கைக்கு போககூடிய ஆபாயம் இருக்கிறது. இவ்வளவு பெரிய ஆபத்தை துணிந்து மோடி அரசு செய்யக்காரணம் தான் அதிலும் ஆபத்து.

அதாவது இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு தேசிய இனங்களை அழித்து அனைவரையும் இந்து என்ற அடையாளத்துக்குள் கொண்டுவந்து பார்ப்பனியத்தின் ஆட்சியை நிறுவ கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. தன் இலக்கை அடைய இந்திய ஒன்றியத்தின் அதிகாரம் மற்றும் நிர்வாகத்துறை முழுவதையும் தனதாக்க வேலையை செய்துகொண்டுள்ளது.

தற்போது தனது வேலை திட்டத்தில் மிக முக்கியமான ஒன்றான அதிகாரத்தை பிஜேபியின் வழியாக பிடித்துவிட்டது. அடுத்து நிர்வாகத்துறையை நோக்கித்தான் அது நகருகிறது. ஒன்றியத்தில் சுயமாக இயங்கும் அனைத்து நிர்வாகத் துறையிலும் தங்களது ஆட்களை கொண்டு வருகிற வேலையை முனைப்போடு செய்து வருகிறது. அதன்படி தான் பல்கலைகழக துணைவேந்தர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலவற்றில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் வந்துவிட்டார்கள். அதில் மிகமுக்கியமான நிர்வாகத்துறைத்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். இதில் தனது ஆட்களை கொண்டுவர ஆர்,எஸ்,எஸ் அமைப்பின் பிண்ணனியில் 1986இல் உருவாகப்ப்ட்ட பயிற்சி மையம் தான் சங்கல்ப் கோச்சிங் செண்டர் (samkalp IAS coching centre) பார்க்க படம் 02. http://www.samkalpiascoaching.com/

இந்த அகாடமி வழியாக மட்டும் இந்தியாவில் இதுவரை 4000 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார்களென்றும். அதில் 450பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஆக பதிவியில் இருக்கிறார்களென்றும் அந்த நிறுவனமே சொல்கிறது. http://iasexamportal.com/…/rss-affiliated-coaching-institut…. இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தி இந்தியா முழுக்க ஆர்.எஸ்.எஸ் தத்துவத்தின் அடிப்படையிலான ஆட்களை நிர்வாகத்துறையில் கொண்டுவர செய்யும் திட்டமே இந்த புதிய மாற்றம்.

ஆக எப்படி நீட் எனும் அரக்கனை கொண்டுவந்து இடஓதுக்கீட்டை ஒழித்து ஏழை எளியவர்கள் மருத்துவர் ஆகும் கனவை தகர்த்து அவர்களை கொலை செய்தார்களோ. அதேபோல இனி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை முழுமையாக உள்ளே கொண்டுவர இந்த மாற்றத்தை கொண்டுவந்து ஏழைகளின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்கனவிலும் மண் அள்ளி போட்டிருக்கிறது இந்த மோடி அரசு.

இந்த கொடுமைகளையெல்லாம் வெளியே கொண்டுவந்தால்/ எதிர்த்து கேள்வி கேட்டால் மோடி கும்பல்களுக்கும், பார்ப்பனிய கும்பல்களுக்கும் அரசின் தயவில் வாழும் இரஜினிகளுக்கும் நாங்கள் தேசவிரோதிகளா?

வட இந்தியாவில் (எட்டு மாநிலங்களில்) கடந்த ஏழு நாட்களாக காய்கறி, பழங்கள் பால் உள்ளிட்ட பொருட்களின் விலை 10% அதிகரித்ததோடு கடும் தட்டுபாடு வேறு ஏற்பட்டிருக்கிறது. காரணம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதரம் இந்திய ஒன்றியத்தில் கேள்வி குறியாகிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மோடி அரசிடம் பல்வேறு வழிகளில் சொல்லியும் ஒரு நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து கடந்த 2017 ஜீன் 06ஆம் தேதி விவசாயிகள் அமைதியான வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனை தடுக்க அரசு விவசாயிகளின் மேல் துப்பாக்கி சூட்டை நடத்தி ஆறு விவசாயிகளை கொன்றது. இதனையடுத்து கடந்த மார்ச் 06ஆம் தேதி வெகுண்டெழுந்த விவசாயிகள் சுமார் 35,000க்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் திரண்டனர். அப்போது வேறுவழியில்லாமல் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பொய் வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியது மத்திய/மாநில அரசு.

ஆனால் இரண்டு மாத காலமாகியும் ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இப்போது எட்டு மாநிலங்களை (மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப்,ராஜாஸ்தான்,உத்திரபிரதேசம்,கர்நாடகா, ஹரியானா மற்றும் சத்திஸ்கர்) சேர்ந்த விவசாயிகள் கடந்த ஜீன் 01ஆம் தேதியிலிருந்து 10நாட்கள் எந்த விவசாய பொருட்களையும் விளைவிக்காமல் இருக்கும் போராட்டத்தை தங்களை வறுத்தி ஒரு முடிவை எடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்பது மோடி 2014இல் ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதியான

1.விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை அரசே நிர்ணயிக்கும். விலைய இரண்டு மடங்காக உயர்த்தநடவடிக்கை எடுக்கப்படும்.

2. பருவநிலை மாற்றத்தாலும்/ அரசின் தவறான கொள்கையாளும் விவசாயம் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கிறது எனவே விவசாய கடனை தள்ளுபடி செய்யவும் என்று சொல்லியதை நிறைவேற்ற வலியுத்தி தான் போராடுகிறார்கள்.

மேற்கண்ட இரண்டு கோரிக்கையை பற்றி விவசாயிகளிடம் பேசினாலே பிரச்சனை தீர்ந்து விடும். ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் விவசாயிகள் விளம்பரத்திற்காக போராடுகிறார்கள் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார். பிரதமர் மோடியோ நடிகைகளை சந்திக்கிறார். கிரிக்கெட் வீரர் கோலியுடன் டிவிட்டரில் போட்டியில் கலந்து கொள்ளபோவதாக பேசுகிறார். ஆனால் மறந்தும் விவசாயிகள் பிரச்சனையை பற்றி பேச மறுக்கிறார்.

மூன்றில் ஒருவர் விவசாயத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில் அந்த விவசாயத்தையும் அதனை செய்கின்ற விவசாயியையும் பன்னாட்டு நிறுவனமான ’உலக வர்த்தக கழகத்தோடு’ சேர்ந்து கொண்டு வஞ்சிப்பது என்ன நியாயமென்று கேட்கிறோம். இந்தியா ஒரு விவசாய நாடு என்று பள்ளி பருவத்தில் பாடபுத்தகத்தில் இருந்ததின் அடிப்படையில் 2015இல் மட்டும் 8007 விவசாயிகளும் 4595விவசாய கூலிகளும் தற்கொலை செய்துகொண்டிருக்கீறார்களே என்ற ஆதங்கத்தில் இந்த கேள்வியை அரசை நோக்கி கேட்கிறோம். இதனை கேட்டால் நாங்கள் தேசவிரோதிகளா? அப்படியென்றால் எட்டு மாநிலங்களில் இன்று பல லட்சம் விவசாயிகள் இதே கேள்வியோடு போராடுகிறார்களே அவர்களும் தேசவிரோதிகளா?

இந்தியாவின் சிறப்பே அதன் பன்முகத்தன்மையும் மக்களாட்சியும், அனைவரும் சமம் என்ற தத்துவம் தான் என்று உலகெங்கும் தம்பட்டம் அடித்துவிட்டு இந்திய ஒன்றியத்தின் குடியரசு தலைவரையே அவர் பிராமணர் இல்லை என்ற காரணத்திற்காக தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லி அவரை கோவிலுக்குள்ளே நுழைய விடாமல் வாயில் படியிலேயே நிற்கவைத்ததே ஒரு கும்பல் இதுதான் பன்முகதன்மையா? இதுதான் சமத்துவமா?

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பிரம்மா கோவிலுக்கு சாமி கும்பிடவதற்காக வந்த இந்திய ஒன்றியத்தின் குடிரயரசு தலைவர் இராம்நாத் கோவிந்தும் அவரது மனைவியையும் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி கோயில் படிக்கட்டிலேயே உட்காரவைத்து இந்தியாவில் சமத்துவத்தையே கெடுத்த அந்த உயர்சாதி சாமியார் கும்பலை நோக்கி ஏன் மோடியின் அரசாங்கம் கேள்விகளை கேட்கவில்லை.

இதே நிலைதானே 2014இல் பிகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சிக்கும் நடந்தது. அவர் பிகாரிலுள்ள சிவன் கோவிலுக்குள் சென்று வந்து விட்டார் என்பதற்காக அந்த கோவிலையே அவர் போனதற்கு பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டார்களே பாரத தாயின் அரும்பெரும் பிராமண புதல்வர்கள். அப்போது ஏன் மோடியும் அவர் சாகாக்களும் வாய் திறந்துபேசவில்லை.

சட்டத்தின் பிரிவு 17 சொல்கிறது தீண்டாமை பெருங்குற்றமென்று ஆனால் நாட்டின் குடியரசுதலைவர் மாநில முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கே ஒரு கும்பல் தீண்டாமையை செய்கிறதே ஏன் இவர்கள் மீது எந்தசட்டமும் பாயவில்லை என்று கேள்வி எழாமல் எப்படி இருக்கும். சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகளில் இன்னும் குடியரசு தலைவரையே கோவிலுக்குள் நுழையமுடியாத நிலை இருக்குமென்றால் எங்கே இருக்கிறது இங்கே சுதந்திரம்.

இதையெல்லாம் கேட்டால் நாங்கள் தேசதுரோகிகளா?

 

இந்திய ஒன்றியத்தில் இருக்கிற 21பொதுத்துறை வங்கிகளில் 19வங்கிகளில் கடந்த காலாண்டில் மட்டும் 87,357கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேசனல் வங்கிக்கு 12,283கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசு அறிவித்திருக்கிறது. https://www.financialexpress.com/industry/banking-finance/psu-banks-suffer-whopping-rs-87000-cr-loss-in-fy18/1200634/

ஆனால் இவ்வளவு நஷ்டம் ஏன் வந்தது என்ற உண்மையை அரசும் சொல்லவில்லை, ரிசர்வ் வங்கியும் சொல்லவில்லை. அதில் தான் இந்திய மோடி அரசின் மோசடித்தனம் இருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் பெரும் தொகையை கடனாக வாங்கிக்கொண்டு கட்டாமல் ஏமாற்றிய பெரிய பெரிய பணமுதலைகளினால் தான் இந்த நஷ்டம் வந்ததென்ற உண்மையை மோடி கும்பல்கள் ஒருநாளும் சொல்வதில்லை. உதாரணத்திற்கு அதிகபட்ச நஷ்டத்தை சந்தித்திருக்கிற பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து தான் 14,000கோடியை வாங்கிக்கொண்டு அதை திரும்ப கட்டாமல் வெளிநாடுகளுக்கு பத்திரமாக சென்றார் நிரவ்மோடி. இப்படி கார்ப்ரேட் கொள்ளைகாரர்கள் டிச,2017வரை மட்டும் கடனை கட்டாது ஏமாற்றிய தொகை 8.31லட்சம் கோடி ரூபாய்.

சரி இவ்வளவு பணத்தை ஏமாற்றியிருக்கிறார்களே இதன்பிறகாவது கடனை கொடுக்காமல் இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. உதாரணத்திற்கு 2016-17ஆம் ஆண்டு IDBI வங்கி 5,158கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியது. 2017-18ஆம் ஆண்டில் அந்த வங்கியின் நஷ்டம் இரண்டு மடங்கு அதிகரித்து தற்போது 8237கோடி ருபாயாக உயர்ந்திருக்கிறது. ஆக இவர்கள் தெரிந்தே தான் இந்த தவறை செய்திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது.

இவ்வளவு பெரிய குற்றத்தை தெரிந்தே செய்திருக்கிற IDBI வங்கியின் சி.இ.ஒ மகேஸ்குமார் ஜெயினுக்கு மோடி அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா தோழர்களே ? அடுத்த முன்றாடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி. இதற்கான ஆணையை கடந்த 04.06.18 அன்று மோடி அரசு அவருக்கு வழங்கியிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தையே தாங்கிபிடிக்கிற விவசாயம் செய்ய ஒரு லட்ச ரூபாய் கடன்வாங்கி இயற்கை பேரிடரால் அதை திருப்ப கட்ட முடியாமல் போன திருவண்ணமலை விவசாயிக்கு இந்திய அரசு கொடுத்த தண்டனை அவரை பிடித்து கீழேதள்ளி கொலை செய்தது. அதேபோல படிப்புக்கு லட்ச ரூபாய் கடன்வாங்கிய அதனை திரும்ப கட்ட முடியாமல் போன மதுரை மாணவனுக்கு வங்கி கொடுத்த தண்டனை அவனை மன் உளைச்சலுக்கு உள்ளாக்கி கொலை செய்தது. ஆனால் மக்கள் பணம் 82374கோடியை பணமுதலைக்கு தாரைவார்த்த வங்கியின் சி.இ.ஓவுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி.

இந்த அநியாத்தை கேட்டால் நாங்கள் தேசத்துரோகிகளா?

 

Leave a Reply