காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு

சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயக்கங்கள் மீது அத்துமீறி நடந்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று 07-06-18 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பல தோழர்கள் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இயக்கங்களைச் சேர்ந்தவர்களை ஒவ்வொருவர் வீடாக சென்று காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் ஒரு மறைமுக மிரட்டல் நடவடிக்கையினை செய்து வருகிறார்கள்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக விசாரணை என்ற பெயரில் சீருடை அணிந்த காவலர்கள் வந்து, கட்டிட உரிமையாளருக்கும், பிற வீட்டாருக்கும் தொடர்ச்சியான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். திருமுருகன் காந்தியின் அலுவலகத்தை செயல்படவிடாமல் தடுக்கும் வேலையினை காவல்துறையினர் செய்து வருகிறார்கள்.

இதே போல், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் அவர்களின் வீட்டிற்குள், அவர் இல்லாத சமயத்தில் எந்த அடிப்படையும் இல்லாமல் நுழைந்து வீடியோக்கள் எடுப்பது, வீட்டில் இருப்போரை அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு, அதற்கு நீதி கேட்கிற இயக்கங்களின் தோழர்களை தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகிறது. காவல்துறையின் இந்த ஜனநாயகமற்ற, சட்டவிரோத பாசிச நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது SDPI கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே,எம்,செரீஃப், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன் ஆகியோர் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக சென்றனர்.

Leave a Reply