நீட் தேர்வால் மீண்டும் ஒரு உயிர்பலி – மாணவி பிரதீபா

மீண்டுமொரு தமிழ்மகளை இழந்திருக்கிறோம் நீட் என்னும் கொடிய அரக்கனுக்கு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருளில் கிடந்த குடும்பங்களுக்கு கல்வியே வாழ்வின் ஒளியை கொண்டுவந்தது . கல்வியை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு சமூகமும் படிப்படியாக மேலெழுந்து வந்தது. மனுநீதி சொன்ன பார்ப்பனீயத்திற்கான தந்திர விதிகள் மறுபிறப்பெடுத்து நீட் என்று கல்வித்துறையில் நமது சந்ததியினரை பழிவாங்கி வருகிறது. இந்தியாவில் தரமிக்க மருத்துவ கல்வியை வழங்கிவரும் தமிழகத்தை நீட் தேர்வு புகுத்தியதன் மூலம் தமிழ் மாணவர்களுக்கே மருத்துவம் என்பது இனி எட்டாகனியாக போயிருக்கிறது.

கடந்த வருடம் அனிதாவை இழந்தோம். அனிதாவின் கல்வி படுகொலையின் ரணம் ஆறும் முன் இதோ செஞ்சி அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா தனது கனவுகள் சிதைக்கப்பட்ட சோகத்தில் தன் இன்னுயிரை இழந்திருக்கிறார். பிரதீபாவின் தந்தை கட்டட வேலை செய்பவர் .பிரதீபா பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்றிருந்தார். ப்ளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் எடுத்திருந்தார். தன் குடும்பத்தின் வறுமையை தனது கல்வியின் மூலம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் மருத்துவ கனவினை சுமந்த அச்சிறுமியின் கனவுகள் திட்டமிட்டே பார்ப்பனீய பயங்கரவாதத்தின் மூலம் மறைமுகமாக சிதைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மாணவர்களுக்கு அயல் மாநிலங்களில் வெகு தொலைவில் உள்ள இடங்களில் தேர்வு மையம், அப்படியும் யாரும் தேர்வில் வென்று விடுவார்களோ என்று 40க்கும் மேற்பட்ட கேள்விகளின் மொழிபெயர்ப்பில் திட்டமிட்ட தவறுகள் என்று எந்தெந்த வகையில் நம் மாணவர்களை ஒடுக்கமுடியுமோ அந்தெந்த வகையில் சதியால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது நீட் தேர்வின் கொடுங்கரங்கள்.

அனிதா சொன்ன வார்த்தைகள் இன்னும் நம் முன் நிழலாடுகின்றன “எங்கள மாதிரி உள்ளவங்க எது கிடைக்குமோ அத வச்சிதான் மேலேறி வரமுடியும்”. அப்படி கல்வியை கைக்கொண்டு மேலேறி வருபவர்களையும் திட்டமிட்டு உயிர்பலி வாங்கும் நீட் தேர்வை இம்மண்ணில் இருந்து விரட்டியடிப்பதும் அதற்க்கு நம்மால் ஆன முயற்சிகளை முன்னெடுப்பதே நாம் அனிதாவிற்கும், பிரதீபாவிற்கும் செய்யும் உண்மையான நினைவஞ்சலி.

 

Leave a Reply