சிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம்

சிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் ஆதிக்க சாதிய மனநோய் கொண்ட சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததற்காக இந்த வன்மமான சாதிய தாக்குதல் சாதி வெறி கும்பலால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆறுமுகம், சண்முகநாதன் ஆகிய இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்டிருக்கிறார்கள்.

சாதிய மனநிலை என்பது இந்துத்துவம் புரையோடிப்போன தமிழ் சமூகத்தில் குரூரமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான ஒரு மிருகத்தின் மனநிலைக்கு சாதிப் பெருமையானது, தமிழர்களை தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆண்ட சாதி பெருமை பேசுகிற சாதி அமைப்புகள் இந்த மனநிலையைத் தான் பெரும்பான்மை இளைஞர்களிடம் ஊட்டி வளர்க்கின்றன.

சாதிப் பெருமை பேசி மீசை முறுக்கித் திரிகிற வீரம் என்பது அரசுகளிடமும், கார்ப்பரேட் முதலாளிகளிடமும், பார்ப்பனியத்திடமும் அடிபணிந்து திரிகிற அற்பத்தனமாக ஒன்றாகவே இருக்கிறது. சக மனிதனை இழிவுபேச கை உயர்த்துகிற இந்த ஆதிக்க சாதி அமைப்புகள் எதுவும் அரச வன்முறைக்கு எதிராக துணிந்து நிற்பதில்லை. சொந்த சாதியில் இருக்கக் கூடிய உழைக்கும் மக்களை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைக்கிற தரகு அமைப்புகளாகவே சாதி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி படுகொலை நிகழ்த்தப்பட்டு தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிற நிலையில் இந்த சாதியப் படுகொலை என்பது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட அரச பயங்கராவதப் படுகொலைக்கு எதிராக இந்த வீரதீர சாதிய அமைப்புகள் என்ன எதிர்வினையை நிகழ்த்திவிட்டன? ஸ்டெர்லைட் முதலாளியிடம் காட்ட வேண்டிய வீரத்தை சக மனிதனிடம் காட்டிக் கொண்டிருப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் சாதிகளைச் சேர்ந்த சாதி அமைப்புகள் இந்த அரசுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் செய்தது என்ன?

நீட் தேர்வைக் கொண்டு வந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்த இந்திய பார்ப்பனியத்திற்கு எதிராக இவர்களின் மீசை எப்போதும் முறுக்கப்படுவதில்லை.

சாதிய வீரம் பேசும் சாதிவெறி அமைப்புகள் சொந்த சாதி உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தும் முதலாளித்துவத்திற்கும், அரசிற்கும் எதிராக சுண்டு விரலைக் கூட உயர்த்துவதில்லை.

கீழ்த்தரமான சாதிய ஆதிக்க மனநிலையையும், சிவகங்கை சாதியப் படுகொலையினையும் ஒட்டுமொத்த தமிழர்களும் கண்டிக்க முன்வரவேண்டும். சாதிய படுகொலைகளை கண்டும் காணாமல் இருந்துவிட்டு நாம் தமிழ்த்தேசியவாதிகள் என்றோ, மனிதநேயவாதிகள் என்றோ சொல்லிக் கொள்ள இயலாது.

சாதிய ஆதிக்கம் பேசும் அமைப்புகளிலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும். சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணைவதே தமிழ்த்தேசியமாக இருக்க முடியும். இந்த சாதியப் படுகொலையை நிகழ்த்திய சாதி வெறி கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சாதியப் படுகொலையை நிகழ்த்தும் கும்பலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொலைகார கும்பலை தனிமைப்படுத்த வேண்டுமென உழைக்கும் தமிழ் மக்களிடம் மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply