தமிழக அரசே! ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு!

தமிழக அரசே! ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு!

தூத்துக்குடியில் மிகப் பெரிய மக்கள் எழுச்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவான நிலையில் திட்டமிட்டு மக்களிடையே துப்பாக்கிச் சூட்டினை இந்த அரசு நிகழ்த்தி 13 தமிழர்களைக் கொன்றுள்ளது. 13 பேர் என்று அரசால் கணக்கு சொல்லப்பட்டாலும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதே தூத்துக்குடியின் கள நிலவரத்திலிருந்து தெரிகிறது. இந்த அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்திய மத்திய அரசின் சூழ்ச்சியினை மக்கள் எதிர்த்து வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு ஒரு அரசாணையினை வெளியிட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இப்படிப்பட்ட உத்தரவுகள் வெளிவருவதும், பிறகு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. 2010–ல் உயர்நீதிமன்றமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சொன்னபோது, ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் சென்று எளிதாக அனுமதியினைப் பெற்றது. இப்போதும் சுற்றுச்சூழல் காரணங்களைக் காட்டி ஆலையை மூடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இதே வேதாந்தா நிறுவனம் தாங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம் என்ற காரணங்களை சொல்லி உச்ச நீதிமன்றத்தில் அனுமதியினை பெற்றுவிட முடியும்.

இத்தனை உயிர்களைத் தந்த பின்னரும் வீரியத்தோடு ஸ்டெர்லைட்டை எதிர்த்து நிற்கிற மக்களை தற்காலிகமாக மட்டுப்படுத்தவும், தனது ஆட்சியினைக் காப்பாற்றிக் கொள்ளவுமே இப்படி ஒரு உத்தரவினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவை ஆள்கிற பாஜக கட்சியைச் சேர்ந்த அனைவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி இதை மூட இந்திய அரசு அனுமதிக்கும்? காவிரி தீர்ப்பு, நீட் என அனைத்து பிரச்சினைகளிலும் உச்ச நீதிமன்றம் தமிழ் நாட்டிற்கு எத்தனை பாதகமான தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

தமிழக மக்களுக்கு இந்த உத்தரவின் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால், ஸ்டெர்லைட் ஆலையினை இடித்துத் தள்ளுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். ஏராளமான மக்களுக்கு புற்றுநோயையும், சிறுநீரகப் பிரச்சினைகளையும், மூச்சுத் திணறலையும் தந்த ஸ்டெர்லைட் ஆலை இனிமேலும் இங்கு செயல்படுவது மிகவும் ஆபத்தானது என்று ஆலையை உடனே தகர்க்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

அதை செய்யாவிடில், இத்தனை கொலைகளுக்கு காரணமான இந்த அரசு பதவி விலகுவதே முறையானதாக இருக்க முடியும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசுடனும், ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துடனும், அதன் ஊழியர்களுடனும், அதிகாரிகளுடனும் தூத்துக்குடி மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தினை நடத்துவதே இந்த ஆலையினை விரட்டுவதற்கான சிறந்த வழிமுறையாக நம் முன் உள்ளது.

இந்த ஒத்துழையாமை இயக்கத்தினை நாம் நடத்தத் தவறினால், இன்று ஸ்டெர்லைட்டுக்காக கொன்ற அரசு, நாளை சாகர்மாலா திட்டத்திற்காக ஏராளமான மக்களை கொலை செய்ய குறிவைத்து காத்திருக்கிறது. உடனே விழித்து ஒத்துழையாமையினை வலுப்படுத்துவோம். கொலைவெறி பிடித்த கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலை மக்களின் ஒத்துழையாமை மூலமாக விரட்டுவோம்.

இந்த கொலைகளுக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்படும் வரை தமிழக மக்களின் குரல் ஓய்ந்துவிட முடியாது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் தூத்துக்குடி ஆதரவாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராகவும் எழுந்து நிற்கட்டும்.

-மே பதினேழு இயக்கம்
9884072010

28-05-2018

Leave a Reply