தூத்துக்குடி படுகொலை – தலைமைச் செயலகம் முற்றுகை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் இன்று (மே 24, 2018) நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கம் தனது பெரும்பான்மையான தோழர்களுடன் பங்கேற்றது.

தலைமைச் செயலக சாலை முழுதும் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான தோழர்கள் சேப்பாக்கத்தில் கூடி தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்ட போது அனைவரையும் காவல்துறை கைது செய்தது.

தூத்துக்குடி மக்கள் தனித்து விடப்படவில்லை என்றும், நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அரச பயங்கரவாதம் என்றும், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்றும், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், கார்ப்பரேட் கம்பெனி லாபத்திற்காக இந்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் சேர்ந்து நடத்தப்பட்ட படுகொலை அது என்றும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தூத்துக்குடி காவல்துறை உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் ஒரு இனப்படுகொலை நடவடிக்கையினை இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை தமிழ்நாடு முழுதும் போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply