தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் 2018

தமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை கண்ணகி சிலை அருகில் நடத்தி வருகிறது. நினைவேந்தல் நிகழ்விற்கு தடை என்று தமிழக அரசின் காவல் துறை அறிவித்தது.

திட்டமிட்டபடி கண்ணகி சிலை முன்பு நினைவேந்தல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்தது. மெரீனாவில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. மெரீனா கடற்கரை முழுவதும் காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் நிரப்பப்பட்டனர்.

இந்த தடை மிரட்டல் பிரச்சாரங்களை மீறி ஆயிரக்கணக்கானோர் நினைவேந்தலுக்காக கண்ணகி சிலை எதிரே உள்ள சாலையில் திரண்டனர். பெரும்பான்மையான இளைஞர்கள். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் திரண்டனர். பல்வேறு தமிழீழ ஆதரவு இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் திரண்டனர்.

பறை இசை முழங்க தோழர்கள் மெரீனா நோக்கி புறப்பட்டனர். தமிழீழம் வெல்லும், இனப்படுகொலையை மறக்க மாட்டோம், நினைவேந்தலை தடுக்காதே, தமிழருக்கு துரோகம் செய்யாதே என முழக்கமிட்டனர். நினைவேந்தலை தடுக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். நினைவேந்தல் எங்கள் பண்பாட்டு உரிமை, தமிழர் கடலில் தான் நினைவேந்துவோம் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

மெரீனாவை நோக்கி சென்ற தோழர்களை தடுத்து காவல்துறை கைது செய்ய ஆரம்பித்தது. நினைவேந்தலை நடத்த விடாமல் தடுத்து அனைவரையும் வாகனங்களில் ஏற்றி கைது செய்தது.

கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காத அரசு மக்கள் விரோத அரசாகும். சர்வதேச சட்டத்தினை மீறி நினைவேந்தலை தடுத்த இந்திய பாஜக அரசினையும், அதன் அடியாளான எடப்பாடி அரசினையும் வன்மையாக கண்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழர் கடலான மெரீனாவை மீட்பதற்கு குரல் கொடுக்க ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும். இந்த கடலுக்கான போட்டியில் தான் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கடலில் தான் நினைவேந்துவோம் என்பதை நாம் உரக்க சொல்ல வேண்டியிருக்கிறது.

கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைக்கப்பட்ட தோழர்கள் அங்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வேணுகோபால், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் மற்றும் இளமாறன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மற்றும் பல்வேறு தோழர்களும் கலந்து கொண்டனர்.

நினைவேந்தலை எத்தனை முறை தடுத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் வருவோம். தமிழர் கடலில் நினைவேந்துவோம்.

Leave a Reply