புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

காவிரி பங்கீடு குறித்தான தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கீட்டு அளவு 192 டி.எம்.சி-லிருந்து 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும், தமிழர் நிலத்தினை பாலைவனமாக்க ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதை எதிர்த்தும் “காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” புதுச்சேரியில் மே பதினேழு இயக்கத்தினால் 18-3-2018 ஞாயிறு அன்று மாலை நடத்தப்பட்டது. தோழர் சமர்பா குமரன் அவர்களின் எழுச்சி பாடல்களுடன் பொதுக்கூட்டம் துவங்கியது.

தண்ணீர் தனியார்மயமாக்கப்படும் மசோதா குறித்தும், தமிழ்நாட்டின் பங்கைப் பறித்து, கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் பெங்களூர் மக்களுக்கு காசுக்கு விற்கப்படுவது குறித்தும், புதுச்சேரியில் தண்ணீரை தனியார்மயமாக்க நிகழ்த்தப்படும் சதிகள் குறித்தும், பெரும் தண்ணீர் நிறுவனங்களான பிரெஞ்சு நிறுவனங்கள் எப்படி மக்களை சுரண்டுகின்றன என்பது குறித்தும், பிரான்ஸ் அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்தில் போடப்பட்ட படிம எரிபொருள் ஒப்பந்தம் குறித்தும், அது எப்படி தமிழர்களை அழிக்கும் என்பது குறித்தும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் விரிவாக உரையாற்றினர்.

காவிரி உரிமை பறிக்கப்படுவதன் மூலம் நாம் எப்படி அடிமையாக்கப்படுகிறோம் என்பது பற்றியும், இந்திய தேசிய கட்சிகள் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தினைக் குறித்தும், தமிழ்நாட்டின் மாநில கட்சிகளான அதிமுக, திமுக எப்படி தமிழர்களை காவிரி விவகாரத்தில் அடகு வைத்திருக்கின்றன என்பது பற்றியும், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை படிம எரிபொருள், எண்ணெய், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை அமல்படுத்தினால் பாண்டிச்சேரியின் நிலத்தடி நீர் எப்படியெல்லாம் அழிக்கப்படும் என்பது குறித்தும் விளக்கினர்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார், அருள்முருகன், லெனாகுமார், திருமுருகன் காந்தி ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் திராவிட விடுதலைக் கழகத்தின் தோழர் லோகு ஐயப்பன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் பஷீர், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் தோழர் தீனா, புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் பிரகாஷ், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் தோழர் சாமிநாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் கோகுல்காந்திநாத், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பக்ருதீன், கடலூர் மாவட்ட மாணவரணி மதிமுகவின் தோழர் ஆதித்யா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர்.

 

Leave a Reply