தமிழக அரசே! போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று

தமிழக அரசே! போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டங்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு தொடர்ச்சியாக காலில் போட்டு மிதிக்கும் வேலைகளை செய்து வருகிறது. தொடர்ச்சியாக போராடி ஏமாற்றத்தை சந்தித்த தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் செய்து தங்கள் உரிமைகளை பெற வேண்டிய நிலைக்கு இந்த அரசு தள்ளியிருக்கிறது. பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசுதான் பொறுப்பேயொழிய, தொழிலாளர்கள் அல்ல.

போக்குவரத்து தொழிலாளர்களும் பொதுமக்களில் ஒருவர்தான் என்பதை உணர்ந்து கொண்டு அனைத்து மக்களும் அவர்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு துணையாக நாம் அனைவரும் இந்த அரசை எதிர்த்துக் கேள்வி எழுப்பிட வேண்டும்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 2.57 சதவீத ஊதிய உயர்வினை உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி(PF), ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகை என மொத்தமாக 7000 கோடி ரூபாய் இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு கோடி, கோடியாக செலவு செய்யும் தமிழக அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய 7000 கோடி ரூபாயினை வழங்க மறுத்து வருகிறது.

போக்குவரத்துக் கழக நட்டங்களுக்கு அரசு பொறுப்பேற்று நட்டத்தினை ஏற்க வேண்டும். தொழிலாளர்களின் பணத்தைப் பிடித்து வைத்து நட்டத்தினை சரி காட்ட முயல்வதென்பது ஏற்க முடியாதது.

போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் மக்கள் விரோத முயற்சியினை கைவிட வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒப்பந்த அல்லது தற்காலிக முறையில் தொழிலாளர்களை பணியமர்த்தும் வகையில் மோசமான வேலைகளை தமிழக அரசு செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், போராட்டத்திற்கும் மே பதினேழு இயக்கம் தனது ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

போராட்டம் வெல்லட்டும்.

-மே பதினேழு இயக்கம்
9884072010
05-ஜனவரி-2018

Leave a Reply