தேர்தல் அரசியல் இயக்க அரசியல் ஓர் பார்வை – பாகம் 2

மாநிலங்களின் உரிமைகளை எங்காரணம் கொண்டும் விட்டுத்தரமாட்டோமென்று சொல்லித்தான் எல்லா அரசியல் தலைவர்களும் மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு மாநில உரிமைகள் பல பறிக்கப்பட்டுவிட்டன. ஏன் இதையெல்லாம் தடுக்க முடியவில்லை என்பது புறமிருக்கட்டும் இதையெல்லாம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக மாற்ற முடியாது என்பது தான் நிதசர்சனம். ஏனென்றால் இந்திய சட்டம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதில் இந்தியாவில் மூன்று விதமான பட்டியல்கள் இருக்கின்றன.
1.மத்திய பட்டியல்
2.மாநில பட்டியல்
3.பொதுப்பட்டியல்

இதன்படி மத்திய அரசு பட்டியலிலே 97 அதிகாரங்களும், மாநில அரசு பட்டியலிலே 66 அதிகாரங்களும், பொது பட்டியலிலே 47 அதிகாரங்களும் இருக்கின்றன. இதில் மிக முக்கியமான அனைத்தும் மத்திய அரசு பட்டியலில் தான் இருக்கின்றன. அப்படியென்றால் மாநில பட்டியலில் என்ன இருக்கிறதென்று கேட்கிறீர்களா? வெறும் வேவு பார்க்கும் போலிஸ் அதிகாரங்கள் தான் அதிகம் மாநில பட்டியலில் இருக்கிறது. உதாரணமாக

1.கால்நடைகள் அடைத்து வைக்கும் பட்டிகளும், கால்நடைகள் அத்துமீறி நுழைவதை தடுப்பதும்.
2.வனவிலங்குகளையும், பறவைகளையும் பாதுகாத்தல்.
3.மார்க்கெட்டுகளும், சந்தைகளும்.
4.புதையல்.
5.எடைகளும், அளவுகளும்.
6.அரங்குகள், நாடகம், சினிமா (சில விதிவிலக்குகளோடு) விளையாட்டுகள், பொழுதுபோக்குகள், கேளிக்கைகள்
7.பந்தைய ஆட்டம், சூதாட்டம்
8.உள்நாட்டில் நடைபெறும் யாத்திரைகள்.
9.பிணத்தைப் புதைத்தலும், இடுகாடுகளும், சுட்டெரித்தகும் சுடுகாடுகளும்
10.சத்திரம் சாவடிகள், அவற்றை நடத்துவோர், கால்நடைகளைப் பராமரித்தல், பாதுகாத்தல், அபிவிருத்தி செய்தல், அவற்றின் நோய்களைத் தடுத்தல்.
11.உடல் ஊனமுற்றவர்களுக்கும், வேலையை செய்ய முடியாதவர்களுக்கும் நிவாரணம் அளித்தல்.

மேற்ச்சொன்னவையாவும் சில உதாரணங்களே. இன்னுமிருக்கிறது அதிகாரங்கள் என்ற போர்வையில் இருக்கும் கொடுமைகள். நீங்களே சொல்லுங்கள் இவையெல்லாம் அதிகாரங்களா? இல்லை பொறுப்புகளா?

இவை தவிர தொழில்துறை, கல்வி, புராதாண சின்னங்கள் போன்ற முக்கியமான துறைகள் ஆரம்பத்தில் மாநில பட்டியலில் தான் இருந்தது . இதையும் ’நாட்டின் நன்மை’ அல்லது ’பொது நன்மை’ என்ற அடிப்படையில் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றிக்கொண்டார்கள். இதை மாநில அரசால் தடுக்கமுடியவில்லை தடுக்கவும் முடியாது.

1951ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பொது நன்மை என்ற காரணம் காட்டி ஒரு சட்டமியன்றி 65தொழில்களை மத்திய அரசு மாநிலபட்டியலிருந்து எடுத்துக்கொண்டது. இதே அடிப்படையில் தான் மாமல்லபுரத்து சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரத்துக்கோவில் போன்ற தமிழரின் தொன்மையை பறைசாற்றும் வரலாற்றை மத்திய அரசு எடுத்து தற்போது அதை மறைத்தே விட்டது. அதுதான் தற்போது கிழடி வரைக்கும் நடக்கிறது.

இதுபோக இன்னொரு கொடுமை என்னவென்றால் அரசியல் சட்டத்தில் பொது ஒழுங்கு என்ற பிரிவு மாநில பட்டியலில் இருக்கீறது. இதனடிப்படையில் தான் பொது ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு போலிஸ் துறையை உருவாக்கியது. அதையும் தடுக்க இந்திய அரசியலமைப்பில் இடமிருக்கிறது. அதாவது மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தி விட்டால் போலிஸ் துறை தானாக மத்திய அரசின் வசம் சென்று விடும். அதுமட்டுமில்லாமல் போலிஸ் துறை முழுக்க மாநில பட்டியலில் இருக்கும்போது மத்திய அரசு ’மத்திய ரிசர்வ் போலிஸ்’ என்ற ஒரு அமைப்பினை சட்டத்தை மீறி நடத்துகிறது.

இப்படி மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கங்கானி வேலை செய்யுமளவுக்கே அதிகாரம் இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய வானளாவிய அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது. இதை கொண்டு நாங்கள் வானத்தை வளைப்போம் நிமிர்த்துவோமென்று பேசுவதில் அர்த்தமில்லை.

இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் போனவருடம் வந்த ’வர்தா புயலில்’ தமிழக அரசின் தலைமைச் செயலகம் இருக்கும் சென்னை ’செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்’ முகப்பில் இருக்கும் கொடிக்கம்பம் சாய்ந்துவிட்டது. அதை சரிசெய்ய மத்திய அரசிற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஏனென்றால் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மத்திய அரசுக்கு சொந்தம். அங்கு புல் புடுங்கவேண்டுமென்றாலும் கூட மத்திய அரசிடம் தான் மாநில அரசு அனுமதி வாங்க வேண்டும். இவ்வளவு தான் மாநில அரசுக்கு இருக்கிற அதிகாரம்.

 

Leave a Reply