ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறை

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை கோரி நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களிடத்தில் வழக்குகளைப் பதிவு செய்தோம்.

தோழர். அரங்க குணசேகரன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பின் கீழ் மே17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனா குமார், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.டைசன், தந்தைப்பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் அணி பொறுப்பாளர் தோழர்.மனோஜ், வழக்கறிஞர் தோழர்.சுரேஷ்குமார், மே17 இயக்கத்தின் தோழர் பன்னீர் ஆகியோர் அரசினால் அமைக்கப்பட்ட தனிநபர் கமிசனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்ந்த துயரங்கள், இழப்புகள், அவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் ஆகியவற்றை தொகுத்து வழக்குகளாக பதிவு செய்தோம். பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரடியாக அழைத்துச் சென்று நீதிபதியிடம் விளக்கங்களை கொடுக்கச் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மாதங்களில் தொகுத்த விவரங்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை தொகுத்து ராஜேஸ்வரன் தலைமையில் அமைந்த விசாரனைக்கமிசனில் பதிவு செய்தோம். கடந்த மாதத்தில் மிகக்குறைவான வழக்குகளே மக்கள் சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை மிக அதிகமான வழக்குகளை பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதிவு செய்திருந்த நிலையில், விசாரணைக்கமிசன் வ்ழக்குகளை வாங்கும் காலம் நீட்டிக்கப்பட்டது.

 

கடந்த மாதம் முதல் வாரம் வரை மக்கள் சார்பில் 14 வழக்குகளும், காவல்துறை சார்பில் 90க்கும் அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதில் மேலதிக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த கமிசனின் அலுவலகம் மதுரை, கோவை, சேலம் போன்ற இதர பாதிக்கப்பட்ட இடங்களுக்கும்விரிவுபடுத்தாமல் போனது, காவல்துறையின் வன்முறைகளை மேலதிகமாக பதிவு செய்ய இயலாமல் போனதில் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக இயக்கங்கள், வழக்கறிஞர்கள் தொடர்ந்து கமிசனில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். தோழர்களின் கடுமையான தொடர் உழைப்பும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ, இதர உதவிகளையும் கடந்த மூன்று மாதங்களில் இயன்ற அளவில் செய்து முடித்தோம். இந்த உழைப்பில் பல தோழர்கள் தொடர்ந்து பங்களித்து வந்ததாலேயே இப்பங்களிப்பு சாத்தியமானது.. தொடர்ந்து இந்த வழக்குகள் நடத்தப்பட வேண்டும், அதற்கான முயற்சிகளையும் தோழமைகள் முன்னெடுத்து வருகிறார்கள். இது குறித்த மேலதிக விவரங்களை இனி வரும் காலத்தில் தெரியப்படுத்துவோம். இவ்வன்முறைகள் குறித்தும், வழக்கு பதிவது குறித்தும் ஏதேனும் தோழர்களுக்கு விளக்கம் தேவைப்படுமெனில் தொடர்பு கொள்ளவும்.

மே பதினேழு இயக்கம்
contact.may17@gmail.com
9884072010

Leave a Reply