இயற்கைக்கு இணையாக எதையும் ஒப்பிடமுடியாது

மனிதனால் எந்த ஒன்றையும் இயற்கையான படைப்பிற்கு முன் அதற்கு மாற்றாக படைக்கவே முடியாது. எந்த அதிகாரரமும், அரசாங்க ஆணைகளும் கட்டுப்படுத்த முடியாத அதிசயம் இயற்கை. புதுக்கோட்டையில் ,நெடுவாசலில் வறண்ட பூமியாக இருந்த மண்ணை செழுமையாக மாற்றியது மனித உழைப்பு என்றாலும் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் அது சாத்தியமாகியிருக்காது . அந்த செழுமையான சூழலை “ஹைட்ரோ கார்பன்” திட்டம் கொண்டுவந்து சீர்குலைத்தால் அங்கு உறுதியாக சூழலியல் பாதிப்படைந்து மனிதர்கள் “சூழலியல் அகதிகளாக ” இடம் பெயரும் அவலம் நேரும். இயற்கையை இங்கு குறிப்பிடுவதற்கு காரணமும் உண்டு.

நைஜர் நாட்டின் வடகிழக்கு பகுதியை பெருமளவு ஆக்கிரமித்துள்ள சஹாரா பாலைவனத்தில் இருக்கிறது “டென்னர்” (Ténéré) பிரதேசம். இது நைஜர் நாட்டிற்கும் அதன் அருகாமை நாடான சாட் (Chad) இரு நாடுகளையும் உள்ளடக்கிய பாலை பகுதி. ஆண்டின் எல்லா நாட்களிலும் கடும் வெப்பம் நிலவும் மணல்வெளி பாலையில் எப்படியோ வேர்விட்டு வளர்ந்தது ஒரு மரம். அது அக்காசியா ( Acacia ) என்ற மரவகையை சார்ந்தது . பாலைவனத்தில் பயணிகளுக்காக தோண்டிய 131 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றின் அருகில் வளர்ந்தது. இந்த மரத்தை “டென்னர் நிலத்தின் மரம்” (The Tree of Tenere) என்று அழைத்தனர்.

பாலைவனத்தில் வளர்ந்த இந்த “டென்னர் நிலத்தின் ” மரம்தான் உலகத்தில் இதுவரை தனியே நின்று வளர்ந்த மரம். அதாவது இந்த மரத்தை சுற்றிலும் 400 கிலோமீட்டர்களுக்கு வேறு எந்த ஒரு மரமோ அல்லது மனித நடமாட்டமோ அமையவில்லை. நைஜர் நாட்டின் பாலைவன நகரமான அகடாஸ் ( Agadez)ல் இருந்து மற்றொரு நகரான பில்மா (Bilma) விற்கு ஆண்டிற்கு இருமுறைஅங்கு வாழும் பூர்வகுடிகளின் உப்பு வணிகர்கள் கால்நடையாக பாலையை கடந்து இந்த மரம் அமைந்திருக்கும் வழியாக செல்வர். அகடாஸ்லிருந்து உற்பத்தியாகும் தானிய வகைகளை எடுத்துச்சென்று பில்மாவில் உப்பு கட்டிகளுக்கு மாற்றாக பெற்றுக்கொண்டு திரும்புபவர். இந்த பயணத்தில் இந்த இரண்டு நகரங்களுக்கு இடைப்பட்ட பயணகாலம் இருமார்கங்களிலும் மூன்று வாரங்கள் ஆகக்கூடியது. ஆண்டின் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் தங்களுடைய சுமைகளை ஒட்டகங்களில் ஏற்றி ஒரு குழுவாக கடப்பர். அந்த குழுக்கள் தங்கி இளைப்பாறும் ஒரு அடையாளமாக நூற்றாண்டுகளாக தனியே நின்று கொண்டிருந்தது இந்த “டென்னர் நிலத்தின் மரம்” .ஆண்டிற்கு 2.5 செ.மீ அளவில் மட்டுமே பெய்யும் மழையை நம்பி நூறாண்டுகளாய் பாலையில் வேரோடியது இந்த மரம்.

மெல்ல வளர்ந்த நாகரிகம் ஒட்டகங்களுக்கு பதிலாக வாகனங்களை இயக்க தொடங்கியது. அப்படி ஒரு நாகரிகம் வளர்ந்த 1973ம் ஆண்டில் குடித்து விட்டு லாரி ஒட்டிய ஒரு அல்ஜீரிய ஓட்டுனரால் இந்த மரம் மோதி சாய்க்கப்பட்டது. நூற்றாண்டுகளாக தனிமையில் இருந்தாலும் தன் வழியே செல்லும் பூர்வகுடி வணிகர்களுக்கு ஒரு பாலைவனத்தின் கலங்கரை விளக்கமாக அடையாளமாக இருந்த மரம் ம

னிதனின் தொழில் நாகரீகத்தில் தான் அநியாயமாக வீழ்த்தப்பட்டது. இத்தனைக்கும் ஓரமாக செல்ல வழியில்லாத பகுதியல்ல அந்த மரம் நின்ற இடம். அந்த மரத்திற்கும் மனித நடமாட்டம் அல்லது வேறொரு மரம் வளர்ந்த பகுதிக்கும் இடைப்பட்ட தூரமாக அந்த ஓட்டுனருக்கு 400 கிலோ மீட்டர் இருந்தது. இந்த “டென்னர் நிலத்தின் மரம்” அந்த பகுதியின் புனித மரமாக மட்டுமல்லாமல் வாழ்வின் நம்பிக்கைக்கு உதாரணமாகவும் பார்க்கப்பட்டது.

“டென்னர் நிலத்தின் மரம்” வழியாக 1939ம் ஆண்டு சென்ற ஒரு ராணுவ தளபதி இந்த மரத்தின் முடிவை அறிந்து ” “டென்னர் நிலத்தின் மரம்” தன்னுடைய இருப்பை முழுதாக நம்பியது. அதன் வழியாக சென்ற ஒட்டகங்கள் அதன் இலையை உணவாகவோ, வணிகர்கள் குழு அதன் கிளைகளை ஒடித்து தேநீர் தயாரிக்கவோ இல்லையென எப்படி நம்புவது?. “டென்னர் நிலத்தின் மரம்” நின்று வாழ்ந்த வரலாற்றின் ரகசியம் என்னவென்றால் இந்த மரம் மற்ற மரங்களில் இருந்து விலக்கப்பட்ட புனிதமான மரமாக பூர்வகுடிகளின் வணிககுழு கருதியது தான். இது பூர்வகுடிகளின் புனிதமான உணர்வு மற்றும் தனித்தே தனது வாழ்வை வாழும் ஒரு மரத்தின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது என்பதாகவே இருக்கக்கூடும்”. ஒவ்வொரு வருடமும் “டென்னர் நிலத்தின் மரம்” தை கடக்கும் வணிகர்கள் குழு அந்த மரத்தை நோக்கி வட்டமாக கூடி இளைப்பாறுவர்கள் . அது ஒவ்வொரு பயணத்தின் பொழுது முதலாவதாகவும் ,பயணம் முடிந்து திரும்பும் வழியில் கடைசியான அடையாளமாகவும் அவர்களுக்கு நூற்றாண்டுகளாக ஒரு கலங்கரை விளக்கமாக நின்று கொண்டிருந்தது.

மனித இனக்குழுக்களை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த ஹென்றி ( Henri Lhote) என்பவ “டென்னர் நிலத்தின் மரம்” தை 1934ம் ஆண்டு அதன் வழியாக கடந்து சென்றதை, “டென்னர் நிலத்தின் மரம்” முதலில் பார்ப்பதற்கு அதன் கிளைகள் பாலைவன காற்றில் சிதைவுற்று இருந்தாலும் அல்லது பலவீனமாக இருப்பதாக தோன்றினாலும் பசிய இலைகளையும் மஞ்சள் நிற பூக்களாலும் வரவேற்றது” என்று குறிப்பிடுகிறார். மீண்டும் 25 ஆண்டுகளுக்கு பின் “டென்னர் நிலத்தின் மரம்” தை பார்ப்பதற்கு 1959ம் ஆண்டு சென்றிருக்கிறார் ” பசுமையான இலைகளுடனும் மஞ்சள் நிற மலர்களாலும் முதலில் என்னை வரவேற்ற மரம் அதன் கிளைகளின் பெரும்பகுதி சேதமடைந்த நிலையில் இப்பொழுது என்னை வரவேற்கிறது” என்று குறிப்பிடுகிறார். அதன் முடிவை அறிந்தபின் , “பூர்வகுடிகள் கூட இதன் கிளையை ஒடித்தெரிந்ததில்லை அவர்களின் புனித மரம் மனிதனின் தொழில்புரட்சியில் தான் தன்னுடைய வாழ்வை இழந்து நிற்கிறது. இயந்திரங்கள் எப்படி இயற்கையை வீழ்த்தமுடியும் என்பதற்கு சாட்சியாகவே “டென்னர் நிலத்தின் மரம்” நின்றதாக” வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

“டென்னர் நிலத்தின் மரம்” தன்னுடைய வாழ்வை இழந்து வீழ்ந்தபின் அரசால் நைஜர் நாட்டின் தலைநகர் நியாமே (Niamey) வில் அமைந்துள்ள நைஜர் தேசிய அருங்காட்சியகதிற்கு எடுத்து சென்று அதை வாழ்வின் நம்பிக்கைக்கு அடையாளமாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதற்கு பின்னர் “டென்னர் நிலத்தின் மரம்” இருந்த இடத்தில் இரும்பு குழாய்களாலான தூண் ஒன்றை கோபுரவடிவில் அமைத்திருக்கின்றனர். இயற்கையை அழித்து அளிக்கப்படும் இரும்பு கோபுரம் அங்கு சாட்சியாக நிற்கிறது மனிதனால் அழிக்கப்பட்ட ஒரு மரத்தின், இயற்கையின் நம்பிக்கையை.

நெடுவாசலில் அதை சுற்றிலும் வளர்ந்து நிற்கும் தென்னை, பனைகளுக்கு மாற்றாக என்றாவது நீங்கள் எஃகு கோபுரங்களை நிர்ணயிக்கலாம். ஒரு நாள் வரலாறு சொல்லும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இயற்கையின் வளங்களும் அதை உடைக்க போராடிய இனத்தின் வரலாறும். #Defendneduvasal.

Leave a Reply