ஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில் எடுக்கும் திட்டம்

கடந்த வருடம் 2016 ஏபரல் மாதத்தில் மே17 இயக்கம் காவேரி டெல்டா உட்பட 17 இடங்களில் ஷேல் கேஸ் எடுப்பதாக அரசு அறிவித்ததை அம்பலப்படுத்தியது. இந்த தகவலை பின் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக புதுக்கோட்டையில் துரப்பு பணிகள் துவக்க இருப்பதை அம்பலப்படுத்தினோம், அந்த செய்தியின் நீட்சியாக சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் எடுப்பதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டதையும் குறிப்பிடப்பிட்டோம். இப்பொழுது இதில் பங்கெடுக்கும் நிறுவனம் அதன் பின்னனி குறித்தும் செய்திகளை பகிர்கிறோம்.

முதலில் இந்த திட்டத்தை பற்றிய ஒரு புரிதல் உங்கள் பார்வைக்கு. காவிரி டெல்ட்டாவிலே வர காத்திருக்கும் பேரழிவு திட்டமான மீத்தேன் ஆகட்டும் , சிறிது காலங்களுக்கு முன்பு நமக்கு பரிச்சியமான ஷேல் காஸ் எனப்படும் இயற்கை எரிவாயு ஆகட்டும், இப்பொழுது புதிதாக வரும் “ஹைட்ரோ கார்பன்” திட்டமும் எல்லாமே ஒரே பொருளை உணர்த்தும் வேறு வேறு பெயர்கள். உதாரணமாக இன்று உணவிற்கு பயனாகும் அரிசி வகைகள் நிறைய இருந்தாலும் அவை அனைத்துமே நெல் பயிரில் இருந்துதான் உருவாகிறது. பொது சொல் “அரிசி” அதில் பல்வேறு வகைகள். அதே போல பொது சொல் “ஹைட்ரோ கார்பன்” எனும் “நீர்கரிம வாயுக்கள்” அதன் வகைகள் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன். எடுக்கும் இடம் மற்றும் பிரித்தெடுக்கும் முறையில் ஷேல் காஸ் , டைட் காஸ் , என்றும் பிரித்தறியலாம். பொருள் மிக எளிமையானது அனைத்தும் “நீர்கரிம வாயுக்கள்” என்பதை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள்.

முதலில் இயற்கை எரிவாயு என்று நரிமணத்தில் வந்தார்கள். பின்பு நிலக்கரி என்று சொல்லி நெய்வேலி , ஜெயம்கொண்டத்தில் நிலத்தை பறித்தார்கள்.பின்பு வந்தவர்கள் மீத்தேன், ஷேல் காஸ் என்று வேறு வேறு பெயர்களில் முகமூடி அணிந்து வந்தார்கள். இப்பொழுது ஹைட்ரோ கார்பன் என்று சொல்லி வருகிறார்கள். இவை எல்லாமே ஒரே பெயரை மாற்றி மாற்றி சொல்லி நம்மை ஏமாற்றும் தந்திரம்.

பொதுவாகவே இயற்கை எரிவாயு என்பது நீர்கரிம வாயுக்கள் (Hydrocarbon gases) அனைத்தும் அடங்கியுள்ள ஒரு வாயுக்கலவை . இதில் பல்வேறு வகைகள் அவற்றின் இயல்பை பொறுத்து வேறுபடுத்தப்படுகின்றன. பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுவில் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் அரிதாக கிடைக்கும் வாயுக்களும் கலந்திருக்கும் . இவற்றை பின்னர் தேவைகேற்ப்ப பிரித்தெடுக்க முடியும் நீர்கரிம வாயுகள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ள வாயுக்களின் தொகுதி.இவற்றில் முதலில் இருப்பது மீத்தேன் (CH4) ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டது .கார்பன், ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்த எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அவற்றின் இயல்பும் மாறுகிறது . இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இது மட்டும் அல்லாமால் , இயற்கை எரிவாயு கிணறுகள் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கலாம். இவை எடுக்கும் எரிபொருளின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுபவை. முதலாவதாக கச்சா எண்ணெய் மட்டுமே எடுக்கக் கூடிய கிணறுகள் (Crude oil wells) . இவற்றில் முதன்மை எரிபொருள் கச்சா எண்ணெய் மட்டுமே ஆனாலும் இவற்றில் இயற்கை எரிவாயுவும் கிடைக்கும் இவை கச்சா எண்ணையில் கலந்து அல்லது தனியாகவே வெளியேறும் .இந்த வகை எரிவாயுகளை கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் நிலைக்கு முன்பேப் பிரித்தெடுப்பது அவசியம். இரண்டாவதாக இயற்கை எரிவாயு மட்டுமே எடுப்பதற்காக தோண்டப்படும் எரிவாயு கிணறுகள் (Dry gas wells) . இந்த வகை கிணறுகளில் எரிவாயு மட்டுமே கிடைக்கும் இதனுடன் சில வாயுக்கள் வெளியேறினாலும் அவை சுத்திகரிப்பு நிலையங்களில் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்படும் .மூன்றாவதாக திரவநிலையில் மாற்றமடைந்து வெளிப்படும் எரிவாயுவை சேகரிக்கும் கிணறுகள் (Condensate wells/). இந்த வகை கிணறுகளில் இயற்கை எரிவாயு மட்டுமல்லாமல் திரவதுளிகள் போன்றும் எரிவாயு வெளிப்படும் இந்தவகை எரிவாயுவும் தனியாக சேகரிக்கப்படும் . இவை வாயு நிலையில் இருந்து திரவநிலைக்கு இயல்பிலேயே மாறி இயற்கையில் கிடைக்கும் எரிவாயுக்கள் .

இன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் “ஹைட்ரோ கார்பன்” எனும் “நீர்கரிம வாயுக்கள்” எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே ,மத்தியில் நடக்கும் கொடுங்கோலாட்சி மூலம் அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் Gem Laboratory Pvt.Ltd. இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவரின் நிறுவனம். அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்க பட்டவர்.

நமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு நம்மில் யாரை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுத்தது?. இதுவரை பத்து நாட்களாக பதவிக்கு அடித்துக் கொண்டு சண்டை போட்ட ஒருவர் கூட இதை பற்றி வாய் திறக்கப் போவதில்லை! ஒன்றாக இணைவோம் . நம் தாய் தமிழகத்தை காப்போம்.

மேலே கொடுக்கப்பட்ட விளக்கங்கள் ,எளிதாக புரியும் வகையில் ஆரம்ப நிலையில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள். இந்த பேரழிவு திட்டத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் தொடர்ந்து இங்கு வெளிவரும். அழிவு திட்டத்தை எதிர்த்து போராட, உண்மையை உலகத்துக்கு எடுத்து சொல்ல , ஆதிக்க சக்திகள் எதனுடனும் சமரசமில்லாமல் மக்களுடன் இணைந்து எதிர்கொள்ளுவோம். எதிர்கால தலைமுறையை காப்பாற்றுவதற்கு ஒன்றாக கை கோர்ப்போம்!

#DefendNeduvasal

Related Posts

Leave a Reply