’உள்ளக விசாரணை’ எனும் அரசியலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வலுப்படுத்துவோம்

போஸ்னியா, கிழக்கு திமோர், தெற்கு சூடான் ஆகியோரைப் போன்று தமிழீழ மக்களாகிய எங்களுக்கும் பிரிந்து போகக்கூடிய சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படை மனித உரிமை என்பதை நேற்று பதிவு செய்தோம்

இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான நடவெடிக்கைகளை எடுத்து வருகிறது, போதுமான கால அவகாசம் அவர்களுக்கு தேவை என்பதாக மிக சாதகமான வாய்மொழி அறிக்கையினை மனித உரிமைக்கமிசனர் அல்ஹுசைன் நேற்று தெரிவித்திருந்ததற்கு பதிலாக மே 17 இயக்கம் இதை பதிவு செய்தது.

ஐ.நாவிற்குள்ளாக செயல்படும் போது சுயநிர்ணய உரிமையை கேட்பது விதிமுறை மீறலாகும் என்பதாக தவிர்த்துச் செல்வது அவசியமற்றது என்பதை மே17 இயக்கம் உறுதியுடம் பதிவு செய்கிறது. ஐ.நாவின் விதிமுறைகளுக்கு ஊடாக எமது மக்கள் கோரிக்கையினை வைக்க இயலும் என்பதன் அடிப்படையிலேயே இதை பதிவு செய்கிறோம்

ஈழத்திலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் தவிர்த்து (பி.டி.ஏ எனும் கருப்பு சட்டத்தின் காரணமாக) பிற பிரதிநிதிகள் இந்த ஐ.நாவின் அடிப்படை மனித உரிமையை பயன்படுத்துவதன் மூலமாக நமது கோரிக்கையை மிக வலிமையாக முன்வைக்க இயலும்.

இது போன்று சமரசமற்று செயல்படுவதாலேயே பாலஸ்தீனத்திற்காக நேற்று சிறப்பு அரங்கும், விவாதமும் ஐ.நா மனித உரிமைக்கமிசனால் தனியே ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் தன்னாட்சி பிரதேசமாக இருக்கும் ‘பாலஸ்தீனத்திற்கு’ பார்வையாளர் அந்தஸ்து எனும் குறைந்த பட்ச உறுப்பினர் எனும் நிலையை அனைத்து நாடுகளும் வழங்கி இருக்கிறார்கள்.

நமது கோரிக்கையை நாமே பேசவில்லையெனில், வேறு எவர் எமது உரிமையை பேசுவார்கள்.

பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமை ஐ.நா சாசனங்களில் அடங்கி இருக்கிறது. இதை பயன்படுத்தி நமது விவாதத்தினை சக தோழமை அமைப்புகள் வலிமை படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.

மனித உரிமைக் கமிசனரின் அறிக்கைக்கு பதிலாக நேற்று எம்மாலும், சிவில் சமூகத்தின் அறிக்கையாலும் வைக்கப்பட்ட பதில் ஐ.நா மனித உரிமைக்கமிசனின் உயர் அதிகாரிகளிடத்தில் விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்காது. நமது கோரிக்கைகளை ஒன்று பட்ட இலங்கைக்குள் அடக்கி வைக்கும் தந்திரத்தினை சர்வ்தேசம் செய்யும் பொழுது அதற்கு எதிரான வலிமையான குரலை ஈழத் தமிழ் சமூகம் பதிவு செய்யவேண்டும், தவறும் பட்சத்தில் அடுத்து வரும் 8 மாதத்திற்குள் தமிழினப்படுகொலையை மூடி மறைக்கும் பணியை செய்து முடிப்பார்கள் என எச்சரிக்க விரும்புகிறோம்.

அனைத்து தோழமை அமைப்புகளும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை மறந்து தமிழர்களின் பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் ஐ.நாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமை விதியை எழுப்ப விரும்புகிறோம்.

ஈழத்தில் தற்போது நடந்து வரும் ஐ.நா கூட்டத்தொடரில் நடந்து வரும் ’உள்ளக விசாரணை’ எனும் அரசியலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வலுப்படுத்துவோம்.

மே பதினேழு இயக்கம்.

Leave a Reply