ஒன்றுகூடுதலின் அரசியல்

- in பரப்புரை
2009இல் நடைபெற்ற இனப்படுகொலையும் அதன் பிறகு இன்று வரை நிகழ்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பும் இந்திய –அமெரிக்க , மேற்குலக துணையோடு இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தப்படுகிறது. தமிழினம் இந்த அழிப்பின் அரசியலை சர்வதேசத்திற்கும், பொதுமக்கள் வெளிக்கும் நினைவுபடுத்திக்கொண்டே முன்னகர்கிறது. இன்று வரை ஆர்மீனிய சமூகமும், சீக்கிய சமூகமும் தனது இனப்படுகொலையின்  நாட்களை உலகிற்கு நினைவு படுத்தியே தனது அரசியல் கோரிக்கையின் நியாயத்தினை வாதிடுகிறது.

2010, மே மாத நினைவுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் ’இலங்கையில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலையே’ என அங்கீகரி என்கிற முழக்கத்தினை  நெல்லையில் மாபெரும் பொதுக்கூட்ட்த்தின் வாயிலாக அறிவித்தோம். இலங்கையில் நிகழ்ந்த்து ’தமிழினப்படுகொலை’ என்கிற தீர்மானத்தினை தமிழக சட்டமன்றம் அறிவிக்க வேண்டுமென்கிற கோரிக்கை முழக்கத்தினை முன்வைத்தோம்.
2011 ஏப்ரலில் வெளியான ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையின் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய வல்லாதிக்கமும் முன்வைத்த போர்க்குற்றம் என்கிற சொல்லாடல் மனித உரிமை என்கிற முகமூடியில் இருதரப்பும் குற்றவாளிகள் என வாதத்தினை கட்டமைக்க ஆரம்பித்தது. இதனடிப்படையில் தமிழீழ போராட்டம்  ஒரு தேசிய இனப்போராட்டம் என்கிற அரசியல் அர்த்தத்தினை இழக்க செய்வதற்கான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்ட்து. இந்த காலகட்ட்த்தில் இந்த அறிக்கையை மே பதினேழு இயக்கம் முற்றும் முழுதாக தமிழர்கள் புறக்கணிக்கக் கோரியது. தமிழின அழிப்பின் சில தகவல்களை இந்த விசாரணைக்குழு பதிவு செய்திருந்த போதிலும், இனப்படுகொலைபோரின் பின்ன்னியையோ, அமைதிப்பேச்சுவார்த்தையையும், ஒப்பந்தத்தினையும் ஒரு தரப்பாக முறித்து சட்ட விரோதமாக முன்னேறிய சிங்கள் அரசின் செயல்பாட்டினை கணக்கில் எடுத்துக்கொள்ளும் கால அளவினை (2002-2009) தனது விசாரனையின் பிண்ணனியாக எடுக்காமல் போரின் இறுதி காலத்தினை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழர்களின் அரசியல் கோரிக்கையின் புறக்கணிப்பதற்கான அடிப்படைகளை தனது அறிக்கையில் முன்வைத்தது. டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் முழுமையான ஆய்வாக அமையாமல் இது முழுமையற்றதாகவும், இந்த இனப்படுகொலை போரில் மறைமுகமாக பங்கெடுத்த இந்திய-அமெரிக்க- சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் பங்கெடுப்பினை காப்பதாகவுமே அமையக்கூடிய உள்ளடக்க வடிவத்தினை கொண்டிருந்த்து. தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை என்கிற முடிவு எடுக்கப்படாமல் அரசியல் உரிமைக்கான விவாதங்கள் சாத்தியமில்லை என்கிற கட்ட்த்தில் போர்க்குற்றம் என்கிற மனித உரிமை சொல்லாடல்களை நாங்கள் பின்னடைவாகவே பார்த்தோம்.
இதனடிப்படையிலேயே இதைப்புறக்கணிக்க கோரிக்கை வைத்தோம். இதைபற்றிய விரிவான முழுமையான ஆய்வினை வெளியிட்டோம். எங்களது கோரிக்கை முழக்கத்தினை மக்களிட்த்தில் விரிவாக கொண்டு செல்லும் நோக்கத்திலும், சர்வதேச நிறுவனமாக தன்னை நிலைகொண்டிருக்கும்  ஐ. நா தனது அறத்திலிருந்து நழுவியது என்பதை நினைவுபடுத்தவும் ஐ. நாவின் சித்திரவதைக்கு எதிரான தினத்தில் ஜூன்26, 2011இல் சென்னையில் நினைவேந்தலை ஒழுங்கு படுத்தினோம். இந்த நினைவேந்தலில் இலங்கையில்   நிகழ்ந்த்து போர்க்குற்றமல்ல , ஒரு இனப்படுகொலையே என்கிற முழக்கத்தினை வைத்தோம்.
எவ்வாறு இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் தங்களது இனப்படுகொலையை ஒரு மாபெரும் ஒன்றுகூடல் நினைவேந்தல் என்கிற நிகழ்ச்சி மூலம் அரசியலை முன்னகர்த்துகிறார்களோ அதே போல ஒரு நிகழ்வாக மாற்றினோம். தமிழரின் பாரம்பரிய வடிவமான நடுகல் நிகழ்வாக சென்னை மெரினா கடற்கரையில் பண்பாட்டு நிகழ்வாக நிகழ்த்தினோன். ஓவிய, புகைப்பட, மண் சிற்ப, பாடல், இசை, நாடகத்தின் வாயிலாக இந்த நினைவேந்தல் நிகழ்த்தப்பட்ட்து. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கும்வகையில் நிகழ்த்தப்பட்டது. நினைவேந்தல்  நிகழ்வு பலதரப்பு பொது மக்களும், இயக்கத்தோழர்களும், பல்வேறு புரட்சிகர கோரிக்கைகளை முழக்கமாக வெடிக்கும் நிகழ்வாக மாறியது. அரசியல் கட்சிகள் தங்களது கொடி அடையாளங்களை தவிர்த்து பங்கேற்கவேண்டுமென்கிற கோரிக்கை பங்கெடுத்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிக்ழ்வாக நடைபெற்றது.
2012இல் சர்வதேச நிகழ்வுகள் தமிழீழம் –இலங்கை சார்ந்து பல்வேறு நிகழ்வுகளை சந்தித்த்து. இலங்கை அரசின் நல்லிணக்க ஆணையக்குழுவின் பரிந்துரைகளும், அமெரிக்க அரசால் தமிழீழ குடிமக்களால் புறக்கணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையக் குழுவின் அறிக்கைக்கு உயிர்கொடுத்து தீர்மானத்தினை கொண்டு வந்திருந்த்து. 2012 மார்ச்18இல் இந்த அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட ஐ. நா தீர்மானத்தினை  மறுத்தும், இலங்கையின் அரசியல் சாசனத்தினை ஏற்றுக்கொள்ளவேண்டுமென மறைமுகமாக சர்வதேசம் நிர்பந்தப்படுத்திய அந்த தீர்மானத்தினை புறக்கணித்தும் இலங்கை அரசின் அரசியல் சாசனத்தினை எரிப்பதன் மூலம் தமிழீழ குடிமக்கள் இலங்கையர்கள் அல்ல என்பதாக சொல்லி அறிவித்தோம். இந்த நிகழ்வில் தமிழர்களின் கோரிக்கையாக இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம். தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பினை சர்வதேசம் நட்த்தவேண்டும், இலங்கை அரசின் மீது இனப்படுகொலைக்கான சுதந்திர விசாரணை நடத்த வேண்டுமென்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த இரண்டு கோரிக்கையில் முதன்மைக் கோரிக்கையான தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்கிற கோரிக்கையை முன்னகர்த்தும் வகையில் 2012 மே20 அன்று நடைபெற்ற நினைவேந்தலில் திரு.ராம் விலாஸ் பாஸ்வான், அய்யா. பழ. நெடுமாறன், அய்யா. வைகோ உள்ளிட்ட தலைவர்களால் முழக்கமாக மாற்றப்பட்டது. மெழுகுவர்த்தி ஏந்துதல் என்கிற நிகழ்வு அது முன்வைக்கும் அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் போராட்ட நிகழ்வாகவே மாறி நிற்கிறது. முற்போக்கு முழக்கங்களும், விடுதலை அரசியல் முழக்கங்களும் தமிழர் கடலை ஆக்கிரமிக்கும் நிகழ்வாகவே தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்கிறது. 2010 டிசம்பரில் மதுரையில் மே பதினேழு இயக்கம்  நடத்திய ஆய்வரங்கத்தில் முன்வைத்த ”ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பாக மாறும்’இந்தியப்பெருங்கடல்’ தமிழர்களின் பாரம்பரிய பூர்வீக உரிமையாக இருந்த கடல்பரப்பு. இந்த கடற்பரப்பு  எந்த ஒரு ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பிற்கும் ஆட்படாது என்று தெரிவிக்கும் வகையில் ’இந்தியப்பெருங்கடல்’ என்கிற பெயரினை மறுத்து ’தமிழர் பெருங்கடல்’ என்றே அறிவிக்கவேண்டும் என்கிற தீர்மானத்தினை செயல்வடிவமாக 2012 நினைவேந்தல் நிகழ்வின் மூலமாக பிரச்சாரப்படுத்தினோம்.
இவ்வாறாகவே மே பதினேழு இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படும் நினைவேந்தல் என்பது தமிழீழ விடுதலை, தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்கும் நிகழ்வாகவே நிகழ்ந்தது. உயர்த்திப் பிடிக்கும் மெழுகுவர்த்தி என்பது அதனூடாக முழங்கும் தமிழர்களின் கோரிக்கையால் ஒரு அரசியல் ஆயுதமாகவே உருவெடுக்கிறது.
இந்த வருடமும் 2013இல், மே 19 அன்று தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் ‘இனப்படுகொலையை மறவோம், தமிழீழ விடுதலையை வெல்வோம், இந்திய-இலங்கை- அமெரிக்க கூட்டுச் சதியை முறியடிப்போம்’ என்கிற முழக்கமாக முன்வைக்கபடுகிறது.  நினைவேந்தலின் அரசியல் ஒரு கூட்டு அரசியல் நிகழ்வாக மே பதினேழு இயக்கத்தினால் முன்வைக்கப்படுகிறது. தமிழர்களின் அரசியல் விடுதலையை முன்னெடுக்கும் அரசியல் நிகழ்வான நினைவேந்தலில் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

                                    2010 மே 17 – நெல்லை

                                   2011,ஜூன் 26-சென்னை

                               2012 மே20 சென்னை

மே பதினேழு இயக்கம்.

Leave a Reply