தமிழீழ படுகொலை – மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பதாகைகள்

ஐ. நா வின் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், சர்வதேச விசாரணையை வேண்டியும் இந்த மூன்றாமாண்டு நினைவேந்தலினை பெரும் திரளாய் ஒன்று திரண்டு சர்வதேசத்தை கவனம் கொள்ள வைப்போம். ஐ, நாவின் தீர்மானம் எனும் கண் துடைப்பை நாம் ஏற்க வில்லை என்பதை இந்த மூன்றாமாண்டு நிகழ்வில் உரக்கச் சொல்லுவோம். அனைவரும் திரண்டு நிற்பது தமிழர்களின் கடமையாய் கொள்வோம். – மே பதினேழு இயக்கம்.

மே 20 சென்னை-மெரினாவில், தமிழீழபடுகொலைக்கான நினைவேந்தல்

அன்பான தோழர்களே!,

கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதையை முன்வைத்து இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவதாக செய்தியை உண்டாக்கியது. இது இலங்கையில் அரச மாற்றத்தை மட்டுமே உண்டாக்கும் என்றோம், கடந்த வருடம்….. தற்போது அதை நோக்கியே நகர்வுகள் இருக்கின்றன. ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வை வைப்பார்கள் என்று 2011 மே மாதம் சொன்னதைப் போலவே தற்போது நடக்கிறது. இதை உடைக்கவேண்டும்.
நாம் ஆதரிக்க மறுக்கவேண்டிய இந்த வருடத்திய ஐ. நா தீர்மானத்தை நம் மீது உலகம் திணித்து , ஏற்றுக்கொள்கிறாயா என்றபோது ஏற்கவேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற விவாதம் வந்தது. அதற்கு, ‘ நாங்கள் வேண்டுவது இதுவல்ல, இது எங்களுக்கானதல்ல, எங்கள் கோரிக்கை ‘தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பும், சுதந்திர சர்வதேச விசாரணயும் ” என்று உரத்துச் சொல்வதற்காக மார்ச் 18ஆம் தேதி சென்னை மெரினாவில் கூடினோம். ஊடகங்கள் மக்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை கொண்டு சென்றன. திருத்தங்களை இலங்கைக்கு ஆதரவாக கொண்டு வந்து பிறகு, ”இந்தியாவின் ஆதரவை நாங்கள் வாங்கிக் கொடுத்தோம்” என்று காங்கிரஸும், அதன் அடிபொடிகளும் தோள் தட்ட இயலாமல், தமிழர்கள் நாம், செய்தோம். இன்று இந்த கோரிக்கைகள் தமிழகத்தில் மையம் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. இந்த முன்னேற்றம் தமிழர்களின் பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும், கட்சிகளும், தலைவர்களும், அறிஞர்களும், உணர்வாளர்களும் பல்வேறு வேறுபாடுகளை கடந்து , பொது மக்கள் சமூகம் அறியக்கூடிய வகையில் பொது இடத்தில் திரண்டதால் சாத்தியமாயிற்று. கருணாநிதியே ,” ஐ. நா வாக்கெடுப்பு” என்று பேசவேண்டியதாயிற்று. தற்போது மக்களிடத்தில் பொது விவாதத்திற்கு இந்த “ஐ. நா வாக்கெடுப்பு” வந்தாயிற்று. ஆனால் இது சாத்தியமாக வேண்டுமென்றால் இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பு நடந்ததாக அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச சுதந்திர விசாரணைஅறிவிக்கப்பட்டாக வேண்டும்.

ஐ. நாவில் தீர்மானம் வருவது மட்டுமே தீர்வை கொணராது, சர்வதேச மக்கள் சமூகம் தமிழீழ விடுதலையின் நியாயத்தை அறியும் போது நமது போராட்டம் பல அடிகள் முன்னகரும்.

இதே வகையில் நமது கோரிக்கைகள் மேலும் உரத்து கேட்க இந்த வருடம் மே 20 ஆம் தேதி சென்னை மெரினாவில், நீதி கேட்ட கண்ணகி சிலையினருகில், மாலையில் பெரும் திரளாய் ஒன்று கூடுவோம்…. பெண்களும், குழந்தைகளும், ஏனைய மக்களும் சென்ற வருடம் திரண்டார்கள் , அரசியல் படுத்தப்பட்டார்கள், கோரிக்கைகளை கூர்மையாக கவனித்தார்கள்… நாமும் அவர்களும் சந்திக்கும் அந்த நிகழ்வை மீண்டும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை இது மேலும் முன்னகர்த்தும். நாம் திரள்வோம்.

மே பதினேழு இயக்கம்

1 Comment

  1. உங்களின் புனிதபயணம் வெற்றி அடைய எனது வாழ்த்துகள்

Leave a Reply