மே 17 இயக்கம்-காலச்சுவடு-கருத்துச் சுதந்திரம் விவாதம் :கருத்துருவாக்க அடியாளின் தமிழ் வடிவம்

மே 17 இயக்கம்-காலச்சுவடு-கருத்துச் சுதந்திரம் விவாதம் :கருத்துருவாக்க அடியாளின் தமிழ் வடிவம்  – உலகத் தமிழ் செய்திகள் 

09 மே 2012

கண்ணனின் கட்டுரைக்கான பதில் – திருமுருகன் காந்தி

(காலச்சுவடு-மே 17 இயக்கம் என இரண்டுக்கும் இடையில் நடைபெற்றுவரும் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதத்தினை இரு தரப்பாரும் பங்குபெற்ற குளோபல் தமிழ் நியூஸ் வானொலியில் அதனை நாம் ஓலிபரப்பி இருந்தோம். அந்நிகழ்வைத் தொடர்ந்து யமுனா ராஜேந்திரனின் கட்டுரையையும், காலச்சுவடு பதிப்பாளர் கண்ணனது இரு கட்டுரைகளையும் பிரசுரித்திருந்தோம். இப்போது மே 17 இயக்க நடவக்கையாளரான திருமுருகன் காந்தியின் இரு கட்டுரைகளை அடுத்தடுத்துப் பிரசுரிக்கிறோம். இரு தரப்பாரதும் கட்டுரைகளை குளோபல் தமிழ் நியூஸ் எந்தவிதமான தணிக்கைக்கும் உட்படுத்தாமல் முழுமையாக வெளியிடுகிறது. கருத்துச் சுதந்திரம் தொடர்பான முக்கியமான விவாதமாக குளோபல் தமிழ் நியூஸ் இதனைக் கருதுகிறது. விவாதத்தின் இறுதிக்கட்டத்தில் துவக்கக் கட்டுரையை எழுதிய யமுனா ராஜேந்திரன் தனது நிலைபாட்டை முன்வைப்பார் என்பதை மட்டும் இத்தருணத்தில் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இனி திருமுருகன் காந்தியின் முதல் கட்டுரை. இரண்டாம் கட்டுரை நாளை வெளியாகும்). 

இலங்கையில் முன்பைவிடக் கூர்மையடைந்திருக்கும் சிங்கள இனவெறியின் காரணமாகத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் போராட்டத்திற்கான மாற்றுவழி என்பது என்னவாக இருக்கும் என்பதற்கு வருங்காலமே விடையளிக்கும்.புலிகளின் தலைமையில் நடைபெற்றுவந்த போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் தமிழர்களின் மனத்தில் உருவாகியுள்ள அச்ச உணர்வு இனச் சிக்கலை மேலும் கூர்மைப்படுத்துவதற்கே வழிவகுக்கும். இலங்கையில் பயங்கரவாதம் யூகிக்க முடியாத புதிய அடையாளங்களுடன் வன்மத்தோடும் பழியோடும் மீட்டெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இப்பொழுது அதிகரித்திருக்கின்றன.

காலச்சுவடு தலையங்கம்


குருதி தோய்ந்த ஒரு கொடி


இதழ் 114, ஜூன் 2009

அசாத்திய தந்திரத்தோடு ஒரு கருத்தை அந்த மக்கள் சார்பாக பதிவு செய்வதான பாவனையோடு போர் முடிந்த பிறகும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து ராணுவமயமாக்குவதற்கு தேவையான அனைத்து கருத்தியல் நியாயத்தையும் இந்த தலையங்கம் முன்மொழிகிறது. ஒரே தலையங்கத்தில் ஒரு பத்தியில் இனப்படுகொலைக்குபிறகு தமிழர்கள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்பதும், இன்னொரு பத்தியில் இந்தப்படுகொலைக்கு இந்தியாவும் சீனாவும் உதவின என்பதாகவும் அதன் தொடர்ச்சியான பத்தியில் தமிழர்க்கான தீர்வில் இந்தியாவுக்கான பொறுப்பை வலியுறுத்துவதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வையும் இறுதியில் அதுவே இந்தியாவிற்கான நலன் என்று இந்திய ஆளும் வர்க்கத்திற்கு முன்மொழிந்து போர்முடிந்த மாதத்தில் காலச்சுவட்டினால் பதிவு செய்ய முடிகிறது.

விடுதலைப் போராட்டம் ஒரு பின்னடைவைச் சந்திக்கும் போது அதன் மீட்சி, வரலாற்றில் ஒரு பயங்கரவாதமாக வெளிப்பட்டது என்று கூற சாட்சியமில்லை. காலச்சுவடின் இந்த வரிகள் அதன் அரசியல் தற்குறித்தனத்தை அம்பலப்படுத்துவதை விட தமிழீழத்தில் நடைபெற்று வரும்-வந்த விடுதலைப் போராட்ட்த்தின் மீதான அதன் மதிப்பீடு என்னவென்று உணர்த்துகிறது. தமிழீழ விடுதலையில் நம்பிக்கை கொண்ட எவரும் இத்தகைய யூகத்தை முன்வைத்ததில்லை. ஏனெனில் வரலாறுகள் அவ்வாறு நடக்கவில்லை. இதன் சாரம்சத்தை ஆழ்ந்து நோக்கினால் ஒரு அதிகாரவர்க்கம் இந்த இனப்படுகொலையை ஆராய்ந்து  குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வாதத்தை ஒத்ததாக இருக்கிறது. இத்தகய வாதத்தையும் அச்சத்தையும் குறிப்பாக இந்திய அதிகாரவர்க்கத்திடம் போர் முடிந்த காலகட்டத்தில் காணமுடிந்தது.

காலச்சுவடின் இந்த தலையங்கம் ”பயங்கரவாதம் யூகிக்க முடியாத புதிய அடையாளங்களுடன்” என்று சொல்வதில் அது கடந்த காலத்தில் அங்கு நடந்த விடுதலைப் போரை ஒரு பயங்கரவாதமாகவோ அல்லது அதனுடன் தொடர்புடைய ஒன்றாகவோ தான் பார்த்து வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. மேலும் தமிழீழ விடுதலையில் நம்பிக்கை கொண்டதாக அது ஒருநாளும் இருந்ததில்லை என்பதைத்தான் அதே தலையங்கம்  நமக்கு வெளிப்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையை, அம்மக்களின் அங்கீகாரத்திற்கான தேவையை அதன் உண்மை நிலையில் நின்று பேசுவதை தவிர்த்தே வந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதைக் காட்டிலும் விடுதலைப் புலிகள், சிங்கள அரசு என்ற இரு நிலையில் நின்று கொண்டு மட்டுமே விவாதிக்கிறது (இது பொதுப்படையான தமிழ்ச்சூழலின் அறிவுசீவித்தளத்தில் தெரிந்தே மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு இயங்கியல் மறுப்பாகும்). அதுமட்டுமல்லாமல் காலச்சுவடு புலிகளின் மீது மிக விரிவான காழ்ப்புணர்வு மிக்க விமர்சனப் பார்வையை வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப்போர் துயர நிலைக்கு வந்து நின்ற போது, சிங்கள அரசின் மீது பார்வையை திருப்பாவண்ணம் பார்த்துக் கொண்ட்து.

காலச்சுவடு ஒரு போதும் புலிகள் வலிமையடந்த காலத்தில் இத்தகைய அநாமதேய கட்டுரைகளை வெளிக்கொணருவதற்கான வலிமையை பெற்றதில்லை. இவ்வாறு இரு நிலைகளை மட்டுமே பேசுவதால்தான் அவர்கள் விடுதலைப்போராட்டத்தின் எதிர்காலத்தை மிக கொச்சையாக பேச முடிகிறது. தமிழீழ விடுதலை போராட்டத்தின் 30 ஆண்டுகால சாத்வீக அரசியல் போராட்டத்தையோ, 70களின் மத்தியில் நிலைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தையோ அதன் பிறகு இந்தியாவின் வல்லாதிக்க துரோகத்தாலும் தலையீட்டினாலும் மக்கள் போராட்டம் ஒரு ராணுவ போருக்கான சூழலாக மாற்றப்பட்டதையோ கணக்கில் எடுத்துக்கொள்ள விரும்பியதில்லை. (இதுவும் இந்திய அறிவுசீவிகளின் பொது புத்திக்கானது). புலிகளின் மீதான விமர்சனம் வைக்கும் போது அதன் சமகால அரசியல் சூழலில் பெரும் விரிவாதிக்கச் சக்தியாக நின்று விடுதலைப் போராட்டம் வெல்லாமல் தடுத்த இந்தியாவின் உளவுத்துறை, அதிகார வர்க்கத்தைப் பற்றி பேசியதில்லை. இன்று வரை பேசுவதும் இல்லை. அதற்கான காரணத்தை பின்னால் பார்ப்போம்.

பொதுப்படையான ஒரு அரசு கருத்தியல் நிறுவனம் வைக்கின்ற விமர்சனத்தையே இந்திய அறிவுசீவிகள், குறிப்பாக தமிழ் அறிவுசீவிகளும் அதே தளத்தில் தனது மதிப்பீட்டையும் ஆய்வையும் வைப்பது தற்செயலானது அல்ல; திட்டமிடப்பட்டதே.

தமிழீழப் போராட்டம் பற்றிய காலச்சுவடின் மதிப்பீடு

காலச்சுவடு கட்டமைக்க முயலும் தமிழீழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழீழ விடுதலை என்பதை மிக கவனமாக பின்னுக்கு நகர்த்தி இந்தியா முன்வைக்கும் சமரசம், சம உரிமை என்கிற ஒற்றை இலங்கைக்குள்ளான தீர்வை வலுப்படுத்தியே வந்திருக்கிறது. காலச்சுவடு எந்த நேரத்திலும் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்கு தள்ளியதில் அல்லது இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை பற்றிப் பேசுவதில்லை. மாறாக இந்தியாவை தீர்வுக்கான ஒரு ஆற்றலாகவும் தெற்காசிய பிராந்தியத்தின் தளபதி என்கிற பிம்பத்தை பின்னுவதிலும் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறது. செயல் பட்டும் கொண்டிருக்கிறது.

ஆதாரமாக — காலச்சுவடு. தலையங்கம் : குருதி தோய்ந்த ஒரு கொடி இதழ் 114, ஜூன் 2009. அதாவது இனப்படுகொலை முடிந்த மாதத்திய இதழில், குறிப்பாக இந்தியா இலங்கையை மே 26, 27 இல் ஐ. நாவில் நடந்த மனித உரிமைக் கமிசனில் போரைப்பற்றியும் மனித உரிமை மீறலைப் பற்றியும் விசாரனை வேண்டும் என்கிற தீர்மானத்தை தோற்கடித்த பிறகு இவ்வாறு எழுதுகிறது :

” இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பொறுப்பு முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது…. ஐநாவின் மேற்பார்வையில் தமிழ் மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். போரால் காயமுற்ற மக்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பவர்கள் உடனடியாகத் தம் வாழ்விடங்களுக்குத் திருப்பியனுப்பப்படுவதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்குச் சம உரிமை அளிக்கப்படுவதற்கேற்ப அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தவிர, தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கேற்ப சிவில் உரிமைகளைக் கறாராக நடைமுறைப்படுத்துவதற்கேற்ற முறையில் அரசின் காவல், நீதி அமைப்புகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். சிவில் சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ராணுவத்தின் தலையீடு இல்லாத வகையில் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்படுவது மிக அவசியம். எல்லாவற்றையும்விட ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மீட்டெடுப்பதற்கான அறிவுத் துறை விவாதங்களும் பண்பாட்டு நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்”

இந்தியாவின் நலனை மையப்படுத்தி தமிழீழ அரசியலை நோக்குபவர்கள் எவரும் இலங்கையில் தனித் தமிழீழம் மலர்வதை சகித்துக்கொள்ள முடியாது. மாறாக அவர்கள் தமிழர்களின் உரிமையை தாங்கள் விட்டுகொடுத்துவிட மாட்டோம் எனப் பேசிக்கொண்டே தமிழர்கள் ஒன்று பட்ட இலங்கைக்குள் சம உரிமையோடு வாழ வழிசெய்யவேண்டும் என்பதையே முன்வைப்பார்கள் (கிட்டதட்ட காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு உட்பட மார்க்சிஸ்டு வரை இதைத்தான் பேசுகிறார்கள்). அதாவது தமிழர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் அதைச் செய்வதால் தனித்தமிழீழம் தேவையற்றுப் போகும் என்பது அதன் விளை பொருள். இவ்வாறு மிக நுணுக்கமாக காலச்சுவடு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பேசுகிறது. ஆகவேதான் காலச்சுவடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் மீதான விமர்சனம் என்கிற யுக்தியில் சிதறடிக்கிறது. இதைத் தான் மே பதினேழு இயக்கத்தின் காலச்சுவடின் மீதான விமர்சனக் கட்டுரையின் தலைப்பில் குறிப்பிட்டுருந்தோம் (புலி எதிர்ப்பு அரசியலில் கட்டியெழுப்ப்ப்படும் தமிழீழ விடுதலை எதிர்ப்பும் தசிங்களப் பேரினவாதமும் : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17946).

இதற்கு முந்தயக் மாதக்கட்டுரையில் இவ்வாறு காலச்சுவடு குறிப்பிடுகிறது.  (இங்கிலாந்து மறு பார்வை ஈழப் போர் : மாறுபட்ட கட்டம் : சச்சிதானந்தன் சுகிர்தராஜா இதழ் 113, மே 2009). ” உலகில் நடக்கும் அரசியல் சர்ச்சைகளில் இலங்கைத் தீவின் பிரச்சினைகளுக்கு விடைதேட நித்திரையின்றி உருளத் தேவையில்லை. தீர்வு எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லப் போவது அப்படி ஒன்றும் புதிதல்ல பலமுறையும் பல கட்டங்களிலும் பேசப்பட்டதுதான். ஒற்றை ஆட்சியை மீளமைத்து மாவட்டங்களுக்கு அதிகாரப் பகிர்வளித்தல். இதை அமலாக்குவதற்கு அரசியல் துணிச்சலும் மனோபலமும் இல்லை”. இப்படியாக பல்வேறு ஆதாரங்களை காலச்சுவடின் கட்டுரைகளில் இருந்து முன்வைக்க இயலும்.

இலங்கையின் இனப்படுகொலைப்போரை தொகுக்கும் போது பிரம்மாச் செலானி என்ற இந்திய ஆய்வாளர் போரில் இலங்கைக்கு உதவிய இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி மிக ஆழமாக ஆராய்வதற்குரிய அனைத்து அர்த்தங்களுடன் வெளிப்படையாக ஒரு கட்டுரையை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் போர் முடிந்த சில காலத்தில் எழுதி இருந்தார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பேசுபவர்கள் 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு நடந்த தெற்காசியாவின் மிக மோசமான பாலிசி குறைபாட்டுக் காலகட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்திய அரசின் தோல்வியை மேம்போக்காக தாண்டிச் சென்று பேசமுடியாது என்கிற நிலையே அவர்களது ஒவ்வொரு கட்டுரையிலும் பேச்சிலும் காணமுடிகிறது. இந்தியாவின் நலனை சிந்திக்கிறவர்களே குறைபடும் காலமாய் 2008-2009 இனப்படுகொலை போர் எழுந்து நிற்கிறது. மக்கள் நலன் சார்ந்து பேசுபவர்கள் இந்தியாவின் போர் பங்களிப்பை இனப்படுகொலை வெற்றியடைய உதவிய மிக மோசமான காரணியாக குறிக்கப்படுகிறது. வரலாறும் அதை பதிவு செய்யவே செய்கிறது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் ரசியாவிற்கும் ஊடாக தந்திரமாக தனது குறிக்கோளை நகர்த்தி உதவிபெறுவதற்கு இந்தியாவின் அதிகாரவர்க்கம்  ராசபக்சேவிற்கு பயன்பட்டது அல்லது அவ்வாறு அது செயல்பட்டது. இந்தியாவின் இந்த மெளனம் சீனா இலங்கையில் கால்பதிப்பதற்கும் ஆயுதம் அளிப்பதற்கும் பயன்பட்டது. இந்தியாவின் இதே மெளனம் அமெரிக்கா தனது நீண்ட நாள் கனவான திரிகோணமலையில் அக்சா ஒப்பந்தத்தை நிறைவேற்ற பயன்பட்டது. அவ்வாறே ரசியாவும் பாகிஸ்தானும் செயல்பட இந்த மெளனம் உதவியது. இந்த மெளனத்தை இந்தியாவிடம் இருந்து பரிசாக இலங்கையினால் முதல்முதலாக பெற முடிந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவையும் சற்று சிந்திக்கவைத்த இலங்கை அரசை அச்சப்படுத்த வைத்த தமிழ் நாட்டின் அரசியல் எதிர்ப்பும் மெளனமாக்கப்பட்டது. இதன் பிறகு உலகின் மனசாட்சி என்று செயல்படும் சர்வதேச நகர்வினையும் ஐ. நாவின் குரலையும் மெளனமாக்க இந்தியாவின் இந்த வர்க்கம் செயல்பட்ட்து. இது போர் முடிந்த இரண்டாவது வாரத்தில் நடந்த மனித உரிமை கமிசனில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் இலங்கையின் சகோதரர்கள் மற்றும் முன்னால் அதிபர்கள் இனபடுகொலையை போர்க்களத்தில் முடித்து இரண்டாம் கட்ட இனப்படுகொலையின் திட்டத்தை (முள்வேலி முகாம்-வடக்கின் வசந்தம்-(அ) உதுறு வசந்தியா- சிங்களத்தில்) அமுல்படுத்த ஆரம்பித்து இருந்தார்கள். இச்சமயத்தில் வந்த சர்வதேசத்தின் எதிர்ப்பையும் சேனல்4 இன் அதிர்ச்சியையும்  இந்தியாவின் வெளியுறவு துறை பாதுகாப்புத்துறை சிறப்பாக சமாளித்தது. இன்று அனைத்து தடைகளையும் கிட்டதட்ட கடந்து  நிற்கும் இலங்கை அரசுக்கு இத்தனை வெளியுறவு பாதுகாப்பையும் ஆயுத கொள்முதலையும் சர்வதேச எதிர்ப்பையும் தடுத்து பாதுகாப்பு அளித்தவர்  இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் இந்தியாவின் இன்றய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்.  (http://www.groundreport.com/World/INDIANS-DISMAYED-OVER-APPEASING-RAJAPAKSES-BROUGHT/2939803). .

தமிழரின் ரத்தம் தோய்ந்த கைகளுக்கு சொந்தமான இத்தகைய சிவசங்கர் மேனனை சிறப்பு விருந்தினராக சிறப்பித்து 2012 பிப்ரவரியில் காலச்சுவடு புத்தகம் வெளியிட்டு தனது விசுவாசத்தை காட்டியது. இதில் எமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் காலச்சுவடின் புத்தக வெளியிட்டு விழாவிற்கு இந்தியாவின் மிக உயர் அதிகாரியாக இருப்பவர், இலங்கையின் நேசத்திற்குரியவர் நேரம் ஒதுக்கி வருகை தந்தது மட்டும் சற்று ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. அத்தனை தூரம்  காலச்சுவடு என்பது சிவசங்கர் மேன்னகளுக்கு முக்கியத்துவமானது என்பது தமிழர்களுக்கு (முக்கியமாக முற்போக்கு தமிழர்களுக்கு. சுதந்திர சிந்தனையாளர் மரியாதைக்குரிய சேரன் அவர்களுக்கும் கூட) கிடைத்த பெரும் பாக்கியமே.

இந்தியாவின் அதிகாரவர்க்கம், இந்திய வெளியுறவு செளத் பிளாக் வளாகம்,  அரசு நிதி உதவியில் முன்னாள் அதிகாரிகளால் நடத்தப்படும் தன்னார்வ அறிவுசார் குழுமங்கள், இவர்களின் திட்டவரைவுகளை மக்கள் கருத்து திரளாக மாற்றுவதற்கு கட்டுரைகளை வெளியிடும் பத்திரிக்கைகள், குறிப்பாக ’தி இந்து’ உள்ளிட்டவை. இவையே இந்தியாவின் அதிகார வர்க்க செயல்பாட்டு சங்கிலிகள். இதன் வரிசையில் தமிழ் இதழாக முதன்மை இடத்தை பெறுகிறது காலச்சுவடு என்று இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்ட கட்டுரையிலும் கடந்த வருடம் மார்ச் மாத கட்டுரையிலும் குறிப்பிட்டு இருந்தோம். நாங்கள் கொடுத்த ’காலச்சுவடு ஒரு கருத்து அடியாள்’ என்ற பட்டத்திற்கு ஆதாரமாக சிவசங்கர மேனன் நிகழ்ச்சியை தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இனப்படுகொலை போருக்கான இந்தியாவின் பங்களிப்பை தொகுப்பாக்கும் எவரும் சிவசங்கர் மேனன் இதன் மையத்தில் இருந்து நகர்த்திய நகர்வுகளை மறந்திருக்க மாட்டார்கள் (வெள்ளைக்கொடி சம்பவம் உட்பட). காலச்சுவடை எங்கு வைக்கவேண்டும் என தமிழர்கள் உணரவேண்டும் என நாங்கள் எடுத்த முன்னெடுப்புகளுக்கு முத்தாய்ப்பாய் வேலை செய்த பெருமை கண்ணனைச் சாரும்.

கருத்துச் சுதந்திரக் காவலர் வேடம் 

” யூதரான நோம் சோம்ஸ்கி நாசிகள் யூதப் படுகொலை செய்யவே இல்லை என வாதிக்கும் சில ஐரோப்பிய அறிவுஜீவிகளின் கருத்தைப் பிரசுரிக்கத் தடை ஏற்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு அத்தகைய ஒரு நூலுக்கு முன்னுரையும் எழுதினார்”. கருத்துச் சுதந்திரம் என்று நோம் சோம்ஸ்கி பேசியதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை. யூதப்படுகொலை நடந்து முடிந்தபிறகு நாசிகளுக்கு பேசுவது தடைசெய்யப்பட்டிருந்த போது அவர்களின் கருத்திற்கு இடமளிப்பது வெளி என்கிற முறையில் இந்த கருத்து சரியானதாக இருக்கலாம். மேலும் ”யூத இனபடுகொலை நடக்கவேயில்லை” எனப் பேசுவது சட்டப்படி குற்றமாக ஐரோப்பிய நாடுகளில் ஆனபிறகு நாசிக்கள் அல்லது ஆதரவாளர்கள்  தங்கள் வாதத்தை வைப்பதற்கான ஒரு ஊடக வெளியை சாம்ஸ்கி உருவாக்கினார். (http://en.wikipedia.org/wiki/Laws_against_Holocaust_denial. http://www.nytimes.com/2012/01/24/world/europe/french-senate-passes-genocide-bill-angering-turks.html : http://www.nytimes.com/2012/02/29/world/europe/french-bill-on-armenian-genocide-is-struck-down.html) .

ஆனால் இது நாசிக்கள் அதிகாரத்தில் இருந்தபோது, அவர்களின் பிடியில் யூதர்கள் இருக்கும் போது, யூத இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது,  நாசிக்களை எதிர்த்து ஜெர்மனியில் வெளிவரும் ஒரு யூத பத்திரிக்கையில் நாசிக்களுக்கான கருத்துக்களும் இடம்பெற வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்க உதவாது. அதை கருத்துச் சுதந்திரம் என்று சொல்லவும் முடியாது. யூதப்படுகொலை நடைபெறவில்லை எனச் சொல்வது சட்டப்பூர்வமான குற்றம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கான விவாதவெளி நிராகரிக்கப்பட்ட நிலையில் ஒரு கருத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ளத்தக்கது. அத்தகைய விவாதத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு வகை வசதியும் வாய்ப்பும் யூதர்களுக்கு இன்று இருக்கிறது. அதாவது யூதர்களும் ஒரு அதிகார (ஏகாதிபத்திய) மையமாக மாறி நிற்கிற காலகட்டத்தில்  நாசிக்களின் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் நிலை இதுவல்ல. இங்கு தமிழீழ விடுதலை பற்றி பேசுவதே (புலிகளைப் போற்றி பேசுவது கூட அல்ல) சமூக குற்றமாக இருக்கிறது. அரசு கடுமையான ஒடுக்குமுறைகளை செய்கிறது. இவ்வாறு எந்த வசதியும் வாய்ப்புமற்ற இலங்கை-இந்தியச் சூழலில் கருத்துச் சுதந்திரம் பேசுகிறேன் என்று இனப்படுகொலைக்குள்ளாகும் மக்களை அவர்களுக்காக போராடுபவர்களை விமர்சிக்க பெரும் பிரயத்தனம் எடுப்பது கேள்விக்குறியது. இங்கு சிங்களபாசிசத்திற்கு ஆதரவாகப் பேசுவது, தமிழ் இனப்படுகொலையை ஆதரிப்பது. தமிழினப்படுகொலையை நியாயப்படுத்துவது இந்திய-இலங்கை அரசின் முதன்மைச் செயல்பாடு என்பது மட்டுமல்ல, இதை கண்டித்துப் பேசுவது குற்றமாகவும் சட்ட மீறலாகவும் சித்தரிக்கப்பட்டு மனித உரிமை மீறலுக்குள்ளாகும் சூழல் உள்ளது. ஆக இங்கு எந்த கருத்திற்கு சுதந்திரமாக பேச ஊடக வெளி, அறிவுசீவி  வெளி வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் சிங்கள-இந்திய பாசிசம் பேசும் ’பெரும் பேச்சை’ (Loud Talk of majority) எதிர்ப்பது சனநாயக இயக்கங்களின் கடமையாகிறது.

காலச்சுவடு கண்ணன் அவர்கள் தான் செய்த பொய் பிரச்சாரத்திற்கு வக்காலத்து வாங்குவதாக பின்வருமாறு எழுதுகிறார். இது மேலும் அவரது ஆணவத்தை, உழைக்கும் மக்களுக்கு எதிரான மன நிலையையே நிரூபிக்கிறது. .” ஈழத்து மீனவர் பிரச்சனைகள் என்ற பரிமாணம் தமிழகத்தில் முதலில் காலச்சுவடில் வெளிவந்தாலும் அதன் பின்னர் வெகுஜன ஊடகங்களில் சில பதிவுகள் உள்ளன. இலங்கை வடகிழக்குப் பிரதேச மீன்வள ஆராய்ச்சியாளர் யாழ். பல்கலை புவியியல் துறை பேரா. சூசை ஆனந்தனின் கருத்து ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ளது. (இரு கடலோர நிலவரம் : 01.02.12) (இணைப்பு : 1) மற்றும் (இரு கடலோர நிலவரம் : 01.02.12) (இணைப்பு : 1) மற்றும் (http://www.asianage.com/india/sl-tamils-ask-tn-fishermen-not-use-trawlers-959). இல் வெளிவந்த நேரடிப் பதிவு இவை பேரா. சூரிய நாராயணன் கருத்துக்கு முரணாக இல்லை. மீனவப் பிரச்சனைகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகளும் பார்வைகளும் உள்ளன.

சூசை ஆனந்தன் கருத்து தமிழக மீனவர்களின் படுகொலையைப் பற்றிய கருத்தல்ல. மாறாக அது தமிழக மீனவரும்-தமிழீழ மீனவரும் எதிர்க்கக் கூடிய இரட்டைமடி இழுவலைகளை பற்றியது (மே 17 இயக்கமும் இதை எதிர்க்கிறது). இதற்கும் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தான் எங்களின் வாதமும். ஏனெனில் படுகொலைக்குள்ளானவர்கள் இரட்டைமடி உபயோகிப்பவர்கள் அல்ல மாறாக மீன்வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத  பாரம்பரிய மீன்பிடித்தலை செய்பவர்களே படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரே சமூகத்தைப் பற்றிய இரண்டு வேறு செய்திகளை தொடர்பு படுத்தி தமிழக மீனவரை குற்றவாளியாக்குகிறார்கள் என்பதே எங்களின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை மிகத்திறமையாக உருவாக்கியவர் சூரிய நாராயணன். மாறாக சூரிய நாரயணனின் இந்த அரைவேக்காட்டுத்தனத்தை உடைத்து காண்பித்தவர் அய்யா. மறவன்புலவு சச்சிதானந்தம் (அவரின் பேட்டியை இணைத்து இருக்கிறோம்.). அவர் காலச்சுவட்டில் வெளியான சூரிய நாரயணனின் கருத்தை குறிப்பிட்டு சரியான விளக்கத்தையும் தந்திருக்கிறார். மறவன்புலவு சச்சிதானந்தம் தமிழீழக் கடலின் மீன்வள ஆய்வாளாராக செயல்பட்டவர். பாக்சல சந்தியை முற்றிலும் அறிந்தவர். தமிழக மீனவர் படுகொலை விவரங்களை (பெயர், ஊர், இழப்புக்கள்) தொகுத்தவர். காலச்சுவடு கண்ணன் தூக்கிப் பிடிக்கும் பேரா.சூரிய நாரயணன் யார் என்பதை அறிந்தே இவரும் விளக்குகிறார். கண்ணனின் கண்களுக்கு இவரை போன்ற அறிஞர்கள் கிடைப்பதில்லை என்பது ஆச்சரியமல்ல.

கண்ணன் குறிப்பிட்ட செய்தியின் அடிப்படையை காணுங்கள். ரவீந்திரன் எதற்காக ஆய்வு செய்ய வந்தார் என்பதை தமிழீழ இனையதளம் பேசுகிறது. “செய்தி : தடை செய்யப்பட்ட மீன்பிடிப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இலங்கை யாழ். பல்கலை புவியியல் துறை ஆராய்ச்சியாளர் துசை ஆனந்தன், பேராசிரியர் ரவீந்திரன் ஆகியோர் நேற்று ராமேஸ்வரம் கடற்கரைக்கு மீன்பிடித்து திரும்பிய படகுகளை ஆய்வு செய்தனர். http://www.thinakaran.lk/2012/02/02/?fn=n1202026&p=1 ) அவர்கள் மீனவப்படுகொலைக்கான காரணங்களை ஆராய வரவில்லை…

உண்மையை மறைத்து எழுதிவிட்டு கண்ணன் பேசும் வாசகங்கள் அவரது உண்மையான சொரூபத்தைக் காட்டுவதாக இருக்கிறது. அவர் சொல்கிறார் ” யதார்த்த உலகம் தமிழ் இனவாதிகளின் கற்பனைக்கு ஏற்ப இயங்குவதில்லை. யதார்த்தத்தைத் தடை செய்ய முயலாமல் அதற்கேற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்வதே சிறப்பு”. யதார்த்த உலகம் காலச்சுவடு கண்ணனின் மேசைக்கு வெளியேயும், அவரின் மூளையில் கெட்டிதட்டிப்போய் இருக்கும் உயர்சாதி திமிருக்கு அப்பாலும் இயங்குகிறது. யதார்த்தம், சாதிய இனவெறிக்கும் ரத்தவெறிக்கும் எதிராக இயங்குகிறது. யதார்த்தம் இவர்களின் சுரண்டல்வாதத்தை உடைக்ககூடியதாக இருக்கிறது. அதை தனது பிழைப்பிற்காக மாற்றி எழுதிக்கொள்ளும் தன்மையை தகர்க்க்க் கூடியதாக அமைந்து இருக்கிறது. 534 தமிழக மீனவர் படுகொலைகளை நியாயப்படுத்தும் பார்ப்பன ரத்தவெறியினை உடைப்பதற்குரிய திறமை வாய்ந்த ‘இனவாதிகளாக” தமிழர்கள் இல்லை என்பது தான் பிரச்சனை. இந்தப் பொய்களையெல்லாம் விற்று காசாக்கிய பணம் தமிழக மீனவரின் ரத்த கவிச்சையோடு காலச்சுவடின் கல்லாப்பெட்டிக்கும் காலச்சுவடின் கிரீடத்தினை வேண்டுவோரின் பாக்கெட்டுக்கும் சென்று சேர்கிறது.

தான் வெளியிட்ட கருத்தை இத்தனை பிடிப்புடன் நியாயப்படுத்தும் அவசியம் காலச்சுவடிற்கு எங்கிருந்து வருகிறது. ஒரு நேர்மையான கருத்துச் சுதந்திரம் அல்லது நடு நிலையோடு செயல்பட்டிருந்தால் எங்கள் கருத்தினை பிரசுரிக்காவிட்டாலும் நாங்கள் முன்வைத்த கருத்தின் சாரம்சத்தை ஒரு விவாதபொருளாக்கி இருக்கலாம் அல்லது அதை வேரோரு ஆளுமை மிக்க நேர்மையான நபரிடம் கருத்தை அறிந்து வெளியிட்டு இருக்கலாம். மீனவர் படுகொலை நடக்கும் போதெல்லாம் இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகத்தில் எழும் போராட்டங்களை வீழ்த்தும் இந்தியாவின் வெளியுறவு துறையின் ஆகப்பெரும் ஆற்றலான சிவசங்கர் மேனனை தனது விழாவிற்கு தலைமையேற்க வைக்கும் காலச்சுவடிற்கு இந்த உண்மையை பேசும் அவசியமும் கட்டாயமும் இல்லை. அதுவே இதன் அடிப்படை என்பதும் உண்மை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/77192/language/ta-IN/article.aspx

நன்றி :  Global Tamil News

Leave a Reply