பாடகர் ஹரிஹரன் அவர்களே இலங்கை இசை விழாவைப் புறக்கணியுங்கள்

- in பரப்புரை

தனது குரல் வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய பாடகர் திரு. ஹரிஹரன், எதிர்வரும் ஜூலை 7 ம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

2009 ல், உலகமே கண்டிராத அளவிற்கு கொத்துக்குண்டுகளையும், வேதிக்குண்டுகளையும் போட்டு 1.5 லட்சம் மக்களைக் கொன்ற இலங்கை இனவெறி அரசாங்கம், தனது தவறுகளை உலகின் பார்வையிலிருந்து மறைக்க தொடர்ந்து முயன்று வருகின்றது. ஐ.நா.வின் நிபுணர் குழுவினர் உள்ளிட்ட சர்வதேச பார்வையாளர்களையும், பத்திரிகையாளர்களையும் இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் இனவெறி அரசு, திரையுலகைச் சார்ந்தவர்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உண்மையை மூடி மறைக்க முயன்று வருகின்றது. கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலும் அவலக்குரலும் இசைச் சத்தத்திலும், ஆடல் பாடலிலும்  உலகிற்குக் கேட்காமல் போகட்டும் என்று எண்ணுகின்றது.

ஆனாலும், மனிதநேயமிக்க திரையுலக, இசையுலகக் கலைஞர்கள் இலங்கையின் சதியைப் புரிந்துகொண்டு அவற்றை புறக்கணித்து வருகின்றனர். 2010 ல் கொழும்புவில் நடைபெற்ற IIFA விழா, அமிதாப் பச்சன், ஷாருக் கான் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாலிவுட் திரைப்பட கலைஞர்களின் புறக்கணிப்பால் வெறிச்சோடியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு வரை சென்றுவிட்டு, இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பி வந்தனர் திரு.மனோ உள்ளிட்ட பாடகர்கள். ஈழத்தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் என்னும் தாய் தமிழகத்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதோடு, தமிழ் நெஞ்சங்களுக்கு சிறு கஷ்டம் வருவது போலவும் நடக்க மாட்டோம் என்று பாடகர் மனோ அளித்த பேட்டி குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிக் மவுண்டெய்ன்’ என்னும் இசைக் குழு இலங்கையில் நடக்க இருந்த தனது இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது. தம்முடைய பயணமும், இசை நிகழ்ச்சியும், திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைக்க உதவும் என்பதாலேயே அதனை ரத்து செய்வதாக அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. (http://bigmountain.tv/blog/2012/06/13/boycott-of-sri-lanka/). இலங்கை மட்டுமின்றி, எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறுகின்றனவோ, அவற்றையெல்லாம் புறக்கணிப்பதை மனித நேயமிக்க இசைக்கலைஞர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில், இஸ்ரேலில் ஜூன் மாதம் தான் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை தலைசிறந்த தபேலாக் கலைஞர் திரு. ஜாகிர் ஹுசைன் அவர்களும் ரத்து செய்தார்.

அறியாமல் ஒப்புக்கொண்டுவிட்ட நிகழ்ச்சிகளை, அவற்றின் உண்மையான நோக்கத்தை அறிந்த பிறகு ரத்து செய்த கலைஞர்கள் வரிசையில் பாடகர் திரு. ஹரிஹரன் அவர்களும் தனது பயணத்தையும் நிகழ்ச்சியையும் ரத்து செய்து, தான் நீதியின் பக்கம் நிற்கும் மனிதநேயக் கலைஞன் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும் என தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் நியாயக் குரலை மழுங்கடித்து உயரும் ஹரிஹரனின் குரலை விடவும், சுதந்திரத் தமிழீழம் மலரும் வேளையில், ‘தமிழா! தமிழா!  நாளை நம் நாளே!’ என்று நம்பிக்கையூட்டும் ஹரிஹரனின் குரலையே உலகம் கேட்க விரும்புகின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று பாடகர் திரு. ஹரிஹரன் அவர்களை மே பதினேழு இயக்கம் இவ்வறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொள்கின்றது.

மே பதினேழு இயக்கம்.

பாடகர் ஹரிஹரனை இலங்கை இசை விழாவிற்கு செல்லவேண்டாம் என்று திரையுலகினருக்கு வைத்த கோரிக்கையை ஏற்று அதற்கான ஆதரவை வழங்கி உள்ளார்கள். கவிஞர் தாமரை நேரடியாக பேசி தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். இந்த கோரிக்கையை ஏற்ற இயக்குனர் அமீர், தமிழ் நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பாகவே எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கமும், மும்பை உணர்வாளர்களும் இதற்கான முன்னெடுப்பை செய்து கொண்டிருக்கிறார்கள்..


பாடகர் ஹரிஹரனுக்கு தமிழ் நாடு திரைப்பட இயக்கனர்கள் சங்கத்தின் கோரிக்கை

Leave a Reply