ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைனின் அறிக்கைக்கு பதில்

சுயநிர்ணய உரிமை தமிழர்களின் அடிப்படை உரிமை – ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைனின் அறிக்கைக்கு பதிலளித்து பேசியது மே பதினேழு இயக்கம்.

“சுதந்திரமும் சுயநிர்ணய உரிமையும் அடைப்படை மனித உரிமைகள். போஸ்னியா, திமோர், தெற்கு சூடான் நாட்டு மக்களைப் போலவே ஈழத் தமிழர்களாகிய நாங்கள், தமிழர்களை அடக்கும், இனவாத இனப்படுகொலை சிங்கள அரசாங்கத்திற்கு அடிபணியாமல் சர்வதேச விதிகளின் படி நடந்து கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம். ”

 

உரையின் தமிழாக்கம்:

வணக்கம்,

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் இலங்கையின் பூர்வ குடிகள் . எங்கள் பாரம்பரிய நிலங்களில் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் அடையாளங்களை மறுதலித்து, அது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தமிழர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளத்தின் மீதும் இன ரீதியான அழிப்புகளில் ஈடுபட இலங்கை அரசு முற்பட்டதே இலங்கையில் நிலவும் அத்தனை பிரச்சனைகளுக்கும் மூலக் காரணம். இலட்சக் கணக்கான தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கி அவர்களின் ஓட்டு உரிமையையும் பறித்தது. இதன் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தில் வாக்களிக்கும் தமிழர்களின் சதவிகிதம் 33% இல் இருந்து 20% ஆக குறைந்தது. மேலும் அகதிகளாக பல லட்சக்கணக்கான தமிழர்கள் வெளியேற்றியதன் மூலம் சிங்கள ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டது. தற்போது இந்தோனேசியா கடல் பகுதியில் ஈழத் தமிழ் அகதிகள் சிக்கித் தவிப்பது குறித்த செய்திகள் புதிய அரசாங்கத்தின் தோல்வியையும் தமிழர்கள் சந்திக்கும் அடக்குமுறையையுமே காட்டுகின்றது. இது மட்டுமல்லாமல் இலங்கை இராணுவத்திலும், உயர் பொருப்பில் இருக்கும் அதிகாரிகளும் 100% சிங்களவர்களாகவே இருப்பதை மறந்துவிடலாகாது.

இதைப் பின்னணியாக வைத்துப் பார்க்கும் போது, பெளத்த சிங்கள பேரினவாதம் தலைவிரித்தாடும் இலங்கையில் என்ன தான் அமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், ஈழத்தமிழர்களுக்கான ஒரு ஜனநாயக வெளியை அதனால் உருவாக்க இயலாது. அதற்குக் காரணம் UNHRC தீர்மானம். சிங்கள பேரினவாதத்தைப் பற்றியோ, அங்கு நிலவும் இனச் சிக்கலைப் மையப்படுத்திய அரசியல் தீர்வை பற்றியோ பேசாமல் மெளனம் சாதிக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் முக்கியப் பதவிகள் சிங்களவர்கள் கையில் இருப்பதாலும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களிடம் நிலம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உரிமை ஆகியவற்றின் மீது அதிகாரம் இல்லாததன் காரணத்தாலும் சர்வதேச சமூகம் முன்மொழியும் இந்த உள்நாட்டு முறைமை இனவாதத்தை வலுப்படுத்தி ஈழத்தமிழர்களை மேலும் இனப்படுகொலைக்குள் தான் தள்ளும்.

சுதந்திரமும் சுயநிர்ணய உரிமையும் அடைப்படை மனித உரிமைகள். போஸ்னியா, திமோர், தெற்கு சூடான் நாட்டு மக்களைப் போலவே ஈழத் தமிழர்களாகிய நாங்கள், தமிழர்களை அடக்கும், இனவாத இனப்படுகொலை சிங்கள அரசாங்கத்திற்கு அடிபணியாமல் சர்வதேச விதிகளின் படி நடந்து கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம்.

இலங்கை இராணுவம் மற்றும் காவல் துறையின் அச்சுறுத்தலையும் மீறி அன்றாடம் அங்கு உள்நாட்டு விசாரணை முறைக்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராடி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே நாங்கள் எங்கள் கோரிக்கையை முன் வைக்கின்றோம். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நூற்றுக் கணக்கான பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தங்கள் தாய் நிலத்தில் போராடி வருகின்றனர்.

மனித உரிமைகளுக்கான துணை செயலாளர் காலை அமர்வில் UNHRC நடுநிலையாக அல்லாமல், பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் என்று கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்தைக் கணக்கில் கொண்டு UNHRC இலங்கை அரசு மீதான ஒரு சுயேச்சையான சர்வதேச விசாரணையை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி
(29-06-2016)

Leave a Reply