உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுக்கும் தீர்ப்பு! சமூகநீதி வரலாற்றில் கருப்பு நாள்!

உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுக்கும் தீர்ப்பு! சமூகநீதி வரலாற்றில் கருப்பு நாள்! – மே பதினேழு இயக்கம்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இந்திய ஒன்றியத்திலிருக்கிற அனைவருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் சரி சமமாக கிடைக்காத ஒரு சூழல் இன்றும் நிலவுகிறது. இந்நிலையில், ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மை இடங்களை அபகரித்துக் கொண்டிருக்கும் உயர்சாதியினருக்கு, அவர்களின் மொத்த மக்கள்தொகையை விட இரண்டு மடங்காக, எந்தவித புள்ளிவிபரங்களும் இல்லாமல், பொருளாதாரரீதியிலான 10% இடஒதுக்கீட்டை 2019-ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்தது. இதன் மீதான வழக்கில், உச்சநீதிமன்றம் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துகளின் அடிப்படையில் 07-11-2022 அன்று இதனை உறுதி செய்திருப்பது சமூகநீதி வரலாற்றில் கருப்பு நாளாகும்.

இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே இங்கு வாழும் பெரும்பான்மை மக்களான எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.-இனருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை திட்டமிட்டே நடைமுறைப்படுத்தாது வஞ்சித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்கனவே பொருளாதாரத்தில் தன்னிறைவாக இருக்கும், மாதம் ரூ 65,000 எனும் அளவில் பொருளீட்டும் உயர்சாதியினருக்கு, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 10% இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது சட்டத்திருத்தை அரசியலமைப்புக்கு எதிராக கடந்த 2019-இல் பாஜக அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை கிட்டதட்ட மூன்றாண்டுகளாக எடுத்துக்கொள்ளாமல் இருந்த உச்சநீதிமன்றம், தற்போது பல்வேறு மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிற இந்த நேரத்தில் எடுத்து அவசரகதியில் அதனை உறுதியும் செய்திருக்கிறது.

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, எனவே இடஒதுக்கீட்டுக்கு அளவுகோலாக பொருளாதாரத்தை வைக்கமுடியாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக உள்ளது. மேலும், இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளது. இருந்தும், உயர்சாதி ஏழைகள் என்று பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்ததையும் அதனை உச்சநீதிமன்றத்தி ஐவர் நீதிபதி குழு ஏற்று அங்கீகரித்தது எதனடிப்படையில்?

சமீபத்தில் மராத்தா இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு பிரச்சனை சம்பந்தமாக உச்சநீதிமன்றம் சென்றபொழுது, சம்பந்தப்பட்ட பிரிவினரின் மக்கள் தொகை விவரங்கள், அவர்களின் சமூக பொருளாதார நிலைமை போன்ற புள்ளிவிபரங்களை கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இப்போது, அப்படிப்பட்ட எந்த புள்ளிவிபரங்களையும் உயர்சாதியினர் இடஒதுக்கீட்டின் வழக்கின் போது கேட்காமல் போனது ஏன்?

இந்த நாட்டில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டின் போது, இடஒதுக்கீடு அளவு 50%-க்கும் மேல் இருக்கக்கூடாது என்று 27% மட்டுமே (பட்டியல் சமூக மக்களுக்கு 22.5%) ஒதுக்கிய நீதிமன்றம், இப்போது மக்கள்தொகையில் 5% கூட இல்லாத உயர்சாதியினருக்கு 50%-க்கும் மேல் கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை கொடுத்திருப்பது எப்படி? பொருளாதார அளவுகோல் உயர்சாதியினருக்கு மட்டும் பொருந்துமென்றால், அது ஏன் இந்த நாட்டில் வாழும் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொருந்தாது?

இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்களில் ஒருவரான பர்தி வாலா, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது லஞ்சமும், இடஒதுக்கீடும் இந்த நாட்டை சீரழிக்கிறது என்று தீர்ப்புகொடுத்து அவர்மீது விமர்சனம் வந்தபோது அந்த தீர்ப்பையே இரத்து செய்தவர். இப்படி இடஒதுக்கீடு குறித்து ஏற்கனவே எதிர்கருத்தோடு இருப்பவர் எப்படி இந்த அமர்வுக்குள் இருக்கமுடியும்? இப்படி உச்சநீதிமன்றத்தின் இந்த முரணான தீர்ப்பு பல கேள்விகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவையனைத்தையும் கடந்து பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பதே இந்த நாட்டில் இதுகாறும் இருந்துவரும் சமூகநீதியின் படியான இடஒதுக்கீட்டு முறையை நீர்த்துபோகச் செய்யும் வழிமுறை. பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை கெடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட சங்பரிவார் இந்துத்துவ குழுக்கள் இந்த பொருளாதார அளவுகோலை எப்படியாகினும் புகுத்திவிட வேண்டுமென்று முயற்சி செய்து, இன்று நீதிமன்றம் வாயிலாக வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள். எனவே, சமூகநீதியின் அடித்தளத்தையே அடிசாய்க்கும் இந்த நடவடிக்கையின் ஆபத்தை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வோம். தந்தை பெரியார் ஏற்கனவே இதனை செயல்படுத்தியிருகிறார். அவர் வழியில் மக்களை ஒன்றுதிரட்டுவோம். சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை தடுப்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply